சென்னையில் மறு தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, அக். 16: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக வேட்பாளர்களும் தொழில்முறை ரவுடிகளுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும், திமுகவின் நியாயமற்ற அணுகுமுறை காரணமாக சென்னை மாநகராட்சியில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 8 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்தது.
தேர்தல் தினத்தன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் பற்றியும், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி நடத்திய மோசடி வாக்குப் பதிவுகள் குறித்தும் கட்சியின் வட சென்னை, தென் சென்னை மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பார்வையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் புகார் செய்தும் எவ்வித பயனும் இல்லை.
ஆயுதம் தாங்கிய தொழில்முறை ரவுடிக் கும்பல்களுக்கு திமுக வேட்பாளர்களும், சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் தலைமை தாங்கி, வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து தேர்தல் முகவர்களை விரட்டியடித்து விருப்பம்போல வாக்குச் சீட்டுகளை முத்திரையிட்டு, வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர். தட்டிக் கேட்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரையும், முகவர்களையும் தாக்கியுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட 8 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீதோ, இதற்குப் பொறுப்பானவர்கள் மீதோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். தாக்கியவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிக்கையில் வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.











கூட்டணியிலிருந்து விலகுவது பத்தி எதாவது சொன்னாரே? எல்லாம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.