கீரிப்பட்டி ஊராட்சித் தலைவராக தேர்வானவர் தலைமறைவா?
கீரிப்பட்டி, அக். 13: கீரிப்பட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு பெற்றவர் தலைமறைவாகி இருப்பதாக பிரச்சினை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய 3 ஊராட்சித் தலைவர் பதவிகளும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்தக் கிராமங்களில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற முடியாமலும், தேர்தல் நடைபெற்று தேர்வு பெற்றவர்கள் பதவியில் நீடிக்க முடியாத நிலையும் இருந்துவந்தது.
இந்த நிலையை மாற்ற அரசும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து முயற்சித்த போதிலும், தீர்வுகாண முடியாத நிலையே இருந்துவந்தது.
தற்போதைய தேர்தலில் பரமன், சுப்பன் மற்றும் பாலுச்சாமி ஆகிய 3 பேர் கீரிப்பட்டி ஊராட்சிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில் 2 பேரின் வேட்பு மனுக்கள் குறைபாடுகள் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் ஒருவரான, அக் கிராமத்தைச் சேர்ந்த எம்.பாலுச்சாமி (35) தாக்கல் செய்த மனு மட்டும் ஏற்கப்பட்டது.
இதனால் ஊராட்சித் தலைவராக போட்டியின்றி பாலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்த கடந்த செப். 27-ம் தேதி முதல், அந்தக் கிராமத்துக்கு வரவில்லை என கிராமத்தினர் தெரிவித்தனர். அவரது வீடும் பூட்டிக் கிடக்கிறது.
அவரது உறவினர்களும் வெளியூரில் உள்ளதாக கிராம மக்கள் கூறினர்.
கீரிப்பட்டி ஊராட்சியானது, கீரிப்பட்டி மற்றும் போலியம்பட்டி கிராமங்களை உள்ளடக்கியது. மொத்தம் 1,287 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 241 பேர் தலித்துகள்.












