பொழிச்சலூரைக் காப்பாற்றுங்கள்: மேதா பட்கர் வந்தார். அனைத்து தினசரிகளிலும் செய்தி வந்தது.
தினமணி செய்தி இங்கே: Save Pozhichaloor Houses from Airport Extension Project
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சில தகவல்கள்:
- முன்னூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 1457.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கி இருக்கிறார்கள்.
- நாலாயிரம் வீடுகள்; 15,000 குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- நான்கு கோவில்கள், இரண்டு தேவாலயங்கள், ஒரு மசூதி, 558 வீடுகள், 156 குடிசைகள், 156 மாடி வீடுகள் உட்பட 883 கட்டிடங்கள் இடிக்கப்படும்.
- புதிய விமான நிலையத்தை முடிக்க இரண்டாயிரம் கோடி (20,00,00,00,000) செலவழிக்கிறார்கள்
- புதிய விமான நிலையத்தை முடிக்க மூன்று வருடங்கள் ஆகும்.
- புதிய விமான தளத்தை (terminal) முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும்.
- புதிய விமான தளத்தை (terminal) முடிக்க 650 கோடி தேவைப்படும்.
- பாதிக்கப்பட்டோர் சார்பாக மத்திய மந்திரி பிரஃபுல் படேலை, சக அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்திருக்கிறார்.
- சென்னை மீனம்பாக்கத்தின் அண்ணா & காமராசர் விமான நிலையத்தில் கடந்த வருடத்தில் – 43.2% பயணிகள் அதிகரிப்பு
- சென்னை மீனம்பாக்கத்தின் அண்ணா & காமராசர் விமான நிலையத்தில் கடந்த வருடத்தில் – 37.5% விமானப் போக்குவரத்து அதிகரிப்பு
- ஜூலை 2000த்தில் திட்டத்திற்கு கால்கோள்.
- செப்டம்பர் 2005 வரை மணப்பாக்கம், தாரப்பாக்கம், தண்டலம், கோவூர், கௌல் பஜார், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பெரிபணிச்சேரி ஆகிய கிராமத்தின் நிலங்களைக் கொண்டிருந்தது.
- டிசம்பர் 14, 2005 கொடுக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தில் பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் திடீரென்று இணைந்தது.
- வீடு கையை விட்டுப்போகும் நிலையில், திருமணங்கள் கூட தடைப்படுகின்றன.
சில கேள்விகள்:
- சென்னையில் துணை நகரம் அமைப்பதை தடுத்த பெரும் பணக்காரர்களும், நிலச்சுவான்தார்களும், கூட்டணிக் கட்சிகளும்தான், இந்தத் திட்டத்தை மாற்றுவதற்கு காரணமா?
- யாருமே விட்டுக்கொடுக்கா விட்டால் விமான நிலையத்தை எங்குதான் அமைப்பது?
- நஷ்ட ஈடாக எவ்வளவு கொடுக்கிறார்கள்?
- மணமுடிப்பைக் கூட வீட்டை காரணம் காட்டி தட்டிக் கழிப்பவர்களை, வரதட்சிணை வழக்கு போட்டு முட்டிக்கு முட்டி தட்ட முடியுமா?
- இன்றைய கூட்டணி ஆட்சியில் அங்கத்தினராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு இன்னும் பலமாக குரல் எழுப்புமா?
- இன்றைய கூட்டணி ஆட்சியில் அங்கத்தினராக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), துணை நகரத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு கவனிப்பைக் கோரி கைவிடச் செய்கிறது?
தொடர்புள்ள செய்திகள்:
- வண்டலூர் அருகே 30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு : துணை நகரம் அமைக்கும் திட்டம்: உடனே கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்
- சேர்த்து வைத்த துணைநகரம் :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! – எஸ்.சரவணகுமார் (ஜூனியர் விகடன்)
துணை நகரம் (தினமணி தலையங்கத்தில் இருந்து):
எந்த ஓர் அபிவிருத்தித் திட்டமானாலும் அது மக்களில் ஏதோ ஒரு பிரிவினருக்கு ஓரளவில் பாதிப்பை விளைவிப்பதாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற அளவுகோல் பின்பற்றப்படுவதானால் மேட்டூர் அணையில் தொடங்கி சென்னை சென்ட்ரல் நிலைய விரிவாக்கம் வரை எந்த ஒரு திட்டத்தையும் நம்மால் நிறைவேற்றி இருக்க முடியாது. ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உலகெங்கிலும் இந்த நோக்குத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டநோக்கில் மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆராய வேண்டுமே தவிர அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது.
கடைசியாக என்னுடைய ரெண்டணா:
என்னுடைய வீடு, பாதிக்கப்பட்ட பகுதியில் இல்லாததால்தான் இப்படி சாவகாசமாக நீட்டி முழக்கி எழுத முடிகிறது. மேதா பட்கர் போல் உறைவிடம் விட்டு அகல்வோர் அனைவருக்கும் அயராமல் ஓட முடிவதை பாராட்ட மட்டுமே மனம் நினைக்கிறது.
Pozhichaloor | Airport | Chennai | Displaced | Extension | Meenambakkam










