வாக்காளர்களுக்கு மூக்குத்தி விநியோகம்: அ.தி.மு.க.வினர் கைது
சென்னை, அக். 12: போரூர் காரம்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு மூக்குத்தி விநியோகித்த அ.தி.மு.க. வேட்பாளரின் உறவினர்கள் 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
போரூரை அடுத்துள்ளது காரம்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் காசி ஜெனார்த்தனம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் க.கணபதி போட்டியிடுகிறார்.
இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் எனக் கோரி வாக்களர்களுக்கு அ.தி.மு.க.வேட்பாளர் காசி ஜெனார்த்தனம் மூக்குத்திகள் கொடுத்தாக தி.மு.க. வேட்பாளர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸôர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் சோதனை நடத்தினர்.
இதில், காசி ஜெனார்த்தனின் தம்பி மணி (50), அவரது உறவினர்கள் சுரேஷ், கட்சியின் கிளைப் பொருளாளர் சரவணன் என்ற முருகன் ஆகியோரிடம் இருந்து 23 மூக்குத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 25 பேருக்கு அவர்கள் மூக்குத்தி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.










