காவலன் காவல் அன்றெனில்…
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்றுள்ள வன்முறைகளுக்காக திமுக, அதிமுக இரு கட்சிகளையும் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. இரு கட்சிகளுமே, “இதில் உண்மையில்லை’ என்று மறுக்கலாம். அல்லது “தொண்டர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு செய்திருக்கலாம்’ என்று பொத்தாம்பொதுவில் சொல்லலாம். சட்டத்தின் முன்பாக தங்கள் பொறுப்புகளைக் கை கழுவினாலும் இரு கட்சிகளுக்கும் இது அவமானம். இந்த வன்முறைகளுக்கு மெüன சாட்சியாக இருந்த கூட்டணிக் கட்சிகளுக்கும் (வெற்றி தோல்விகளில் பங்குகொள்வதுபோல) இந்த வன்முறையிலும் தார்மிகப் பொறுப்பு உள்ளது.
வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒரு சத்திரத்தில் இருந்ததாகவும் அப்போது திமுகவினர் அவரை பணத்துடன் பிடித்து அரைநிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வந்ததாகவும் இதில் காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் செய்திகள் விவரிக்கின்றன. படம்பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சத்திரத்துக்குள் புகுந்து தாக்குகின்ற அளவுக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம் ஒரு இடைத்தேர்தலின் தோல்வியை ஆளும்கட்சி தன் வீழ்ச்சியாகக் கருதுவதும் அதை எதிர்க்கட்சி தனது அடுத்த பொதுத்தேர்தலுக்கான முதல் கணக்குத் தொடக்கம் என்று நினைப்பதும்தான். இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், இரு கட்சித் தலைமைகளும் கட்சிபலம் முழுவதையும் களம் இறக்குவதைத் தவிர்த்தாலே வன்முறை குறைந்துவிடும்.
அரசியல் பாகுபாடுகள் ஒரு புறம் இருக்க, இந்த வன்முறைகள் வாக்காளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. ஆனால், மதுரை போலீஸ் கமிஷனர் சிதம்பரசாமி பாரபட்சமின்றி செயல்படவில்லை என்றும், தனது பதவிக்கு ஏற்றபடி அவர் நடந்துகொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மதுரை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து சிதம்பரசாமி பணியிடம் மாற்றப்பட்டபோதிலும் இது காவல்துறை முழுவதற்குமே இழுக்கு. அதேநேரம் காவல்துறை என்பது ஆளும்கட்சிக்கே ஆதரவாகச் செயல்படும்- அல்லது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அரசியல் தலைவர்கள்தான்.
தங்களுக்கு வேண்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுப்புகளில் நியமிப்பதும், வேண்டிய அதிகாரிகளை மட்டுமே ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்காக மாநில அரசிலிருந்து பரிந்துரைப்பதும் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்திய வழக்கம். அதனால் காவல்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் கடமையைவிட “விசுவாசம்’ முக்கியமானதாக மாறிவிட்டது.
தனது விசுவாசக் கட்சி ஆட்சியில் இருந்தால் அதற்குப் பாதகமானவற்றை இருட்டடிப்பு செய்வதிலும் எதிர்க்கட்சியாக மாறும்போது ஆளும்கட்சியின் தவறுகளை உள்-ஒற்றுவேலை பார்த்து, பத்திரிகைகளுக்கு தீனிபோடுவதுமாக இவர்களின் விசுவாசக் கடமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
யார் ஆட்சி செய்தாலும் தங்கள் கடமையை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எந்நாளும் மதிப்பு உண்டு. குறிப்பாக மக்களிடத்தில்! அத்தகைய அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதன் அடையாளம்தான் மதுரைச் சம்பவம்.
“மாதவர் நோன்பும் மாதரார் கற்பும் காவலன் காவல் அன்றெனில் அன்றாம்” – என்கிறது தமிழ் இலக்கியம். அரசனின் காவல் இல்லையானால் முற்றும் துறந்த மாமுனிவர்கள் தவம் இயற்றுவதும் பெண்கள் கற்புடன் இருப்பதும் சாத்தியம் இல்லையென்றாகிவிடும் என்பதே இதன் பொருள்.











//
யார் ஆட்சி செய்தாலும் தங்கள் கடமையை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எந்நாளும் மதிப்பு உண்டு.
//
மதிப்ப வெச்சு இன்னா பண்றது…வவுத்துப் பசிக்கு ரெண்டு புரோட்டா கெடைக்குமா…? இல்ல பொஞ்சாதிக்கு நக நட்டு தான் வாங்க முடியுமா…
“ஐயா நீங்க மகராசனா இருக்கணும்னு” சொன்னா மட்டும் மகராசனாயிட முடியுமா?
இப்படிப்பட்ட கேள்விகள் சார்பு நிலை எடுக்கு ஐ ஏ எஸ் ஐ பீ எஸ் கள் கேட்பார்கள். என்ன சொல்ல?
ரவுடிப்பசங்களுக்கெல்லா வோட்டு போட்டா இப்புடித்தா ஆகும்…