மேற்கு வேளச்சேரி பகுதி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் ஒலிக்குமா?
சென்னை, அக். 6: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 153-வது வார்டில் மேற்கு வேளச்சேரி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுயேச்சை வேட்பாளராக பாலா நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து பிருந்தாவன் நகர் உள்ளிட்ட மேற்கு வேளச்சேரி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒலிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வேளச்சேரியை கிழக்கு வேளச்சேரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதையடுத்து இப்பகுதி மக்கள் நேரடியாக தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளின் விரிவாக்கம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உருவானது மேற்கு வேளச்சேரி. வேளச்சேரி ஏரியின் ஆயக்கட்டுப் பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உருவாகியுள்ளன. ஏரி அருகில் உள்ளதால் இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என இங்கு குடியேரியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது.
இப்பகுதி அடைந்து வரும் வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கு வேளச்சேரி 1978-ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
தேர்தலில் போட்டி ஏன்? இணைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அடிப்படை வசதிகள் தொடர்பான எந்த ஒரு திட்டமானாலும் நீதிமன்றம் வரை சென்றுதான் எங்களால் பெற முடிந்தது என மேற்கு வேளச்சேரி குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
வேளச்சேரியின் மற்ற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இப்பகுதி தனித் தீவாக உள்ளது. இதற்காக வேளச்சேரி ஏரியின் தெற்கு பக்க கரையை ஒட்டி வேளச்சேரி பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலையும், இங்குள்ள ஏ.ஜி.எஸ். சாலை வழியாக பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவரும் அரசியல் தலைவர்களிடம் இந்த கோரிக்கையை வைக்க இப்பகுதி மக்கள் தவறவில்லை. இந்த இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் அவசியம் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
காலதாமதம் காரணமாக திட்டத்துக்கான செலவு அதிகரித்ததுடன் இப்பகுதியின் வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமான வேளச்சேரி ஏரியின் கரை உயரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் நலன் கருதி அரசியல் வாதிகள் குறைத்துள்ளனர்.
ஏரியின் கொள்ளளவு குறைந்ததால் மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் வெள்ள நீரால் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மேற்கு வேளச்சேரியின் தேவைகள் குறித்த எங்களின் குரல் மாநகராட்சியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தோம் என்றார்.
மேற்கு வேளச்சேரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளச்சேரி பைபாஸ் சாலைக்கு செல்ல நேரடியான சாலை இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது என தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசியல்வாதிகள் உரிய கவனம் செலுத்தாததே இப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிட முக்கியக் காரணம் என்றார் மகாதேவன்.
20-க்கும் மேற்பட்ட நலச் சங்கங்கள் ஆதரவு: இப்பகுதியில் உள்ள 20-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கங்கள் இம் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலா தெரிவித்தார். இது தவிர இங்குள்ள மூத்த குடிமக்கள் சங்கம், உந்துநர் அறக்கட்டளை, நுகர்வோர் நல அமைப்புகள் ஆகியவையும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன என்றார்.
சென்னை மாநகராட்சியின் 153-வது வார்டில் மொத்தம் உள்ள 95 ஆயிரம் வாக்காளர்களில் இங்கு மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக இவர்களின் பிரதிநிதிகள் யாரும் அரசியல் கட்சி சார்பில் கூட மாநகராட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேறாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.










