கே: சிக்குக்குனியா நோயால் இறந்தவர் குடும்பத்தினருக்கு கேரள அரசு நிதி உதவி வழங்குகிறது. அதுபோல தமிழகத்திலும் வழங்கப்படுமா?
ப: தமிழகத்தில் சிக்குன் குனியா நோயால் யாரும் இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. அப்படி சிக்குன்குனியா நோயால் இறந்தவர்கள் என்று உங்களிடம் பெயர் பட்டியல் இருந்தால் அதை கொடுங்கள். உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.
கே: ஏராளமான இலவச திட்டங்கள் அறிவித்துள் ளீர்கள். இதற்கான நிதி நிலை போதுமானதாக உள்ளதா?
ப: இலவச திட்டங்கள் தொடர நிச்சயம் நிதி நிலை இடம் கொடுக்கும். வாரந்தோறும் நிதித்துறை செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசி நிதி ஆதாரங்களை கணக்கிடுகிறேன். வரவு- செலவு கணக்கிடப்பட்டு நிதி பெருக்கும்வாய்ப்பும் கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த பணியை தவறாமல் செய்து வருகிறேன். இதற்கான கோப்புகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன்.
கே: மேயர், நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதால் குழப்பமான சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளதே?
ப: கடந்த 4 ஆண்டுகளில் இதை நாம் நேரடியாக பார்த்தோம். மேயர், நகராட்சி தலைவர்கள் ஒரு கட்சியில் இருக்க, கவுன்சிலர்கள் வேறு கட்சியில் இருப்பதால் எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாமல் அடிதடி, ரகளை ஏற்பட்டது. எனவேதான் இந்த தேர்தலில் இந்தமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
எப்படி முதல்-அமைச்சரை தேர்வு செய்கிறோமோ அப்படியே மேயர், நகராட்சி தலைவர்களையும் தேர்வு செய்வோம்.
கே: இதனால் கவுன்சிலர்களிடம் குதிரை பேரம் அதிகரிக்குமே?
ப: குதிரைபேரத்தை தடுக்க மனிதன் மிருகமாக மாறாத பட்சத்தில் இதை தடுத்து விடலாம்.
கே: வடமாவட்டங்களை போன்று தென்மாவட்டங் களில் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படுமா?
ப: தென் மாவட்ட மக்கள் ஊக்கம் அளித்து ஆதரவு கொடுக்க வேண்டும். இங்கும் தொழில்கள் தொடங்க முயற்சி செய்து வருகிறோம்.
கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வந்ததுபோல ம.தி.மு.க.வும் உங்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
ப: யாராவது வந்தால் ஏற்றுக்கொள்வோம். ம.தி.மு.க. வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.










