அம்பத்தூர் நகராட்சித் தேர்தலில் வெள்ள நிவாரணம் அதிமுகவுக்கு கைகொடுக்குமா? ஓராண்டுக்குள் சாலை, மழைநீர் வடிகால் வசதிகள்: திமுக
சென்னை, அக். 5: உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் அம்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சூடு பிடித்துள்ளது. அம்பத்தூர் நகராட்சித் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அடிப்படை வசதிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து, குண்டும் குழியுமான சாலைகள், மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ள நீர், கொசுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அம்பத்தூர் நகராட்சிப் பகுதியைச் சார்ந்த மக்கள் தவிக்கின்றனர்.
வளர்ச்சித் திட்டங்களை முறையாக செயல்படுத்தியுள்ளதாகக் கூறி அதிமுக கூட்டணியினரும், செயல்படுத்துவோம் என்று கூறி திமுகக் கூட்டணியினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பெருநகர குடிநீர் வாரியத்தின் இணைப்பு வழங்கப்படும் என்று அதிமுகவினர் கூறினர். ஆனால், அத்திட்டம் நிறைவேற்றவே இல்லை.
திமுக வெற்றிப் பெற்றால் இத்திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று அம்பத்தூர் நகர திமுக செயலாளர் ஜோசப் சாமுவேல் கூறினார்.
அம்பத்தூர் நகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் 380 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில்
தேமுதிக 47 இடங்களில் போட்டி: தேமுதிக 47 வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுகவினர் மழைநீர் வடிகால் வசதி, சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தனர். ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட 430 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எங்கள் அணியினர் ஏறத்தாழ 45 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று அம்பத்தூர் நகர திமுக செயலாளர் ஜோசப் சாமுவேல் கூறினார். இவர் திமுக சார்பில் 18-வது வார்டில் போட்டியிடுகிறார்.
எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் ஓராண்டுக்குள் சாலை, மழைநீர் வடிகால் வசதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ள நிவாரணம்: அதிமுக ஆட்சியில் அம்பத்தூர் நகராட்சியில் ரூ. 140 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் 40 கோடி பாதாள சாக்கடை திட்டத்துக்கும் ரூ. 100 கோடி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்றார் அம்பத்தூர் அதிமுக நகரச் செயலாளர் வேதாசலம்.
மழைக்காலங்களில் சாலைகள் எங்கும் வெள்ளநீர் தேங்கும் நிலை தொடர்கிறது. சிக்குன் குனியா காய்ச்சலால் அம்பத்தூர் பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கொசுக்களை ஒழிக்க நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசு ஒழிப்புத் திட்டங்களை பிரசாரத்தில் கூட முன்வைக்கவில்லை என்று குறை கூறினார் அம்பத்தூரைச் சேர்ந்த விஜயவரதன். இவர் இப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரைப் போன்றே இப்பகுதி மக்கள் பலரும் மழைநீர் வடிகால் வசதிகள் சரியில்லை என்று புகார் தெரிவித்தனர்.
ஆனால், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மழை வெள்ள நிவாரணம் தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் கைகொடுக்கும் என்றார் வேதாசலம். இவர் அதிமுக சார்பில் 22-வது வார்டில் போட்டியிடுகிறார்.










