எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் கொசுவை ஒழித்துக் கட்டுவேன்: விஜயகாந்த்
சென்னை, அக். 3: எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டேன். நான் தனித்து நிற்பதுபோல் மற்ற கட்சிகளும் போட்டியிட தயாரா என்று கேட்டேன் யாரும் பதில் சொல்லவில்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு மாற்றாக எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவே வந்துள்ளேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
காட்டு யானையைத்தான் நாம் பார்க்கவேண்டும். சின்ன முயலைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்கிறீர்கள். நீங்களும் முயலாகவும் எலியாகவும் பூனையாகவும் இருந்ததை யோசித்துப் பாருங்கள். சின்னத்தை முடக்கிய பின்னரும் நாங்கள் தனித்து நிற்கிறோம். நீங்கள் சின்னம் இல்லாமல் நிற்க தயாரா?
எனக்கு மக்கள்தான் எஜமானர்கள். திமுகவும் அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் என்று பட்டாப் போட்டு கொடுக்கவில்லை. அவர்கள்தான் ஆட்சிக்குத் தொடர்ந்து வரவேண்டுமா? உண்மையைப் பேசினால் என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிறார்கள். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு எனவே உண்மையைச் சொல்ல அஞ்சமாட்டேன் என்றார் விஜயகாந்த்.










