பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்று தேர்தலைக் கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் மேலும் ஒரு கிராமம்
உசிலம்பட்டி, அக். 4: மதுரை மாவட்டத்தில், தேர்தல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் மேலும் ஒரு கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி அருகே உள்ளது கொடிக்குளம் ஊராட்சி.
இந்த ஊராட்சி கடந்த ஊராட்சித் தேர்தலில் பெண்- பொதுப் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, சுழற்சி முறையில் தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் இதற்கு முன்னர் நடைபெற்றது போன்று, இங்கும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் முயற்சி நடைபெற்றது.
அதாவது, தேர்தலை புறக்கணிப்பது, அல்லது யாரேனும் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்ற கையோடு ராஜிநாமா செய்ய வைப்பது என கிராமத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செல்லம்பட்டி ஒன்றியத் தலைவி ஜெயமணி ஊராட்சித் தலைவர் பதவிக்கும், உறுப்பினர் பதவிக்கு காளியம்மாள் என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத கிராமத்தினர் ஜெயமணிக்கு எதிராக தலைவர் பதவிக்கு வீமன் மனைவி பாலாமணி என்பவரை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இவரை வெற்றி பெற்ற செய்து, அதன் பின்னர், பதவியை ராஜிநாமா செய்ய வைப்பது என கிராமத்தின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிய கம்யூ. சார்பில் போட்டியிடும் ஜெயமணி கூறுகையில், இத் தேர்தலில் நான் போட்டியிடுவது எவருக்கும் எதிரானதல்ல. ஒட்டு மொத்த கிராம வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதுதான் நோக்கம். எனவே, பெரும்பான்மையான மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்றார்.
ஆனால், இப்பிரச்சினை குறித்து கிராமத்தினரிடம் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.










