நெல்லை மேயர் பதவிக்கான திமுக வேட்பாளர் யார்?
ப. இசக்கி
திருநெல்வேலி, அக். 4: திருநெல்வேலி மாநகராட்சித் தேர்தலில், திமுகவில் மேயர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. மேயர் பதவிக்கான வேட்பாளரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், அப் பதவியைக் கைப்பற்ற பலரும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
இம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தல் இம் மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் மேயரையும், மாமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக வாக்காளர்களே நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். இம் முறை அப்படி அல்லாமல், வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மேயரைத் தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இம் மாமன்றத்திற்கு மொத்தம் 55 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும், அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் உள்ளன. இவர்களுடன் தேமுதிக மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.
வெற்றி பெறும் மாமன்ற உறுப்பினர்களில், பெரும்பான்மையை பொறுத்து மேயர் பதவி திமுகவுக்கா அல்லது அதிமுகவுக்கா என்பது தெரிய வரும். எனினும், மேயர் பதவிக்கானப் போட்டியில் இவ்விரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இதில், குறைந்தபட்சம் 28 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவர் மேயர் ஆவார்.
மேயர் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் திமுக, மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 32 வார்டுகளில் போட்டியிடுகிறது. எஞ்சிய இடங்களில் தோழமைக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
திமுக உறுப்பினர்கள் அதிகமாக வெற்றி பெற்றால், அக் கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக, தற்போதைய மாவட்ட அவைத் தலைவர் சுப. சீத்தாராமனை நிறுத்தலாம் என கட்சித் தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் 22-வது வார்டில் போட்டியிடுகிறார்.
ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ.வான அ.லெ. சுப்பிரமணியனுக்கு, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படாததால் மேயர் பதவிக்கான வேட்பாளராக அவரை நிறுத்த வேண்டும் என ஒரு கோஷ்டியினர் வற்புறுத்தியதால் அவர் 40-வது வார்டில் போட்டியிடுகிறார்.
இதனிடையே மாவட்ட இளைஞரணி பொறுப்பாளரும், 20-வது வார்டு வேட்பாளருமான கா. முத்துராமலிங்கம், தனக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு இருப்பதால், தானே மேயர் வேட்பாளர் என தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.
இவர்களுடன், 7-வது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பி. சுப்பிரமணியன், தற்போதைய துணை மேயர் விஸ்வநாதன் ஆகியோரும் மேயர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
“உள்ளடி’ வேலைகள் ஆரம்பம்: மேயர் பதவிக்குப் போட்டியிடுபவர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அடிப்படை அவசியம். எனவே, மேயர் பதவியைக் கைப்பற்ற நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் போட்டியாளர்களை, உறுப்பினர் தேர்தலிலேயே தோல்வி அடையச் செய்யும் “உள்ளடி’ வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களில் தப்பியவர் சுப்பிரமணியன் மட்டுமே.
இதற்காக, மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவோருடன் “உறவு’ வைத்துக் கொண்டு செயல்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வகையில், மேயர் பதவிக்கான வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோரின் தேர்தல் செலவுகள் மட்டுமின்றி, அவர் வெற்றி பெற்றால், தான் மேயராக ஆதரவளிக்க வேண்டும் என்ற “உறுதிமொழி’ பெறப்பட்டு அதற்கான “உதவிகள்’ அனைத்தும் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.










