Daily Archives: ஒக்ரோபர் 2, 2006

Madurai (Central) – History of the Elections & Victories

Dinamani.com – TamilNadu Page

மதுரை மத்திய தொகுதி: வரலாறு திரும்புமா? மாறுமா?

பா. ஜெகதீசன்

சென்னை, அக். 1: ஒட்டுமொத்த தமிழகமே உற்றுநோக்கும் மதுரை மத்திய தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

கடந்த காலங்களில் நடைபெற்ற 12 பொதுத் தேர்தல் முடிவுகளைப் போல ஆளும் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமாக இத்தொகுதி இருக்குமா? அல்லது அதற்கு மாறான புதிய வரலாற்றைப் படைக்குமா என அரசியல் கட்சிகள் ஆவலோடு எதிர்பார்க்கின்றன.

1957-ல் இருந்து 2006 வரையிலான காலகட்டத்தில் 12 பொதுத் தேர்தல்களில் இங்கு காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்ற்பெற்றன. த.மா.கா. 2 முறையும், அ.தி.மு.க. ஒரு முறையும், நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

ஆளும் கட்சியின் வசம்: 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்று ஆளும் கட்சியாகத் திகழ்ந்தது. அவ்விரு தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளரான வி. சங்கரன் வெற்றிபெற்றார்.

1967 தேர்தலில் அண்ணா தலைமையில் ஆட்சிக்கு தி.மு.க. வந்தது. அப்போது தி.மு.க வேட்பாளர் சி. கோவிந்தராஜன் வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வி. சங்கரன் தோற்றார்.

1971 தேர்தலிலும் தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது கே. திருப்பதி (தி.மு.க.) வெற்றிபெற்றார். அவரை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் நெடுமாறன் தோற்றார்.

1977 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர். தலைமையிலான முதல் அமைச்சரவை அமைந்தது. அப்போது இங்கு என். லட்சுமிநாராயணன் (அ.தி.மு.க.) 29,399 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரத்தினம் (காங்.) 16,420 வாக்குகளையும், எஸ். பாண்டி (தி.மு.க.) 14,676 வாக்குகளையும், எஸ். சுகுமாரன் (ஜனதா) 12,780 வாக்குகளையும் பெற்று தோற்றனர்.

நெடுமாறனின் சாதனை: 1980 தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க.வின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸின் தலைவரான நெடுமாறன் இத் தொகுதியில் வெற்றிபெற்றார். அதுவரையில் இங்கு யாருக்கும் கிடைக்காத அளவு 45,700 வாக்குகள் பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 31,566 வாக்குகள் பெற்று, தோற்றார்.

1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஏ. தெய்வநாயகம் 41,272 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் 39,012 வாக்குகளைப் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

1989 தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்தது. 3-வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். அப்போது தி.மு.க. வேட்பாளர் எஸ். பால்ராஜ் 33,484 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 22,338 வாக்குகள் பெற்று, தெய்வநாயகம் (காங்.) தோற்றார்.

அணிகள் மாற்றம்: 1991 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, ஜெயலலிதா முதல்வர் ஆனார். அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஏ. தெய்வநாயகம் 47,325 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

1980-ல் நெடுமாறனுக்குக் கிடைத்ததை விட அதிக வாக்குகள் தெய்வநாயகத்துக்குக் கிடைத்தன. தி.மு.க. வேட்பாளரான மு. தமிழ்க்குடிமகன் 26,717 வாக்குகள் பெற்று தோற்றார்.

1996 தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்தது. 4-வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். அப்போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த த.மா.கா. வேட்பாளர் ஏ. தெய்வநாயகம் 38,010 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வி.எஸ். சந்திரலேகா 20,069 வாக்குகள் பெற்று, 2-வது இடத்தைப் பெற்றார். அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி. தங்கராஜ் 11,841 வாக்குகள் பெற்று, 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

2001 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 2-வது முறையாக ஜெயலலிதா முதல்வர் ஆனார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருந்த த.மா.கா. வேட்பாளர் எம்.ஏ. ஹக்கீம் 34,393 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க. வேட்பாளர் பால்ராஜ் 34,246 வாக்குகள் பெற்று அதாவது 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று, 5-வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். இத்தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் (தி.மு.க.) 43,185 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.டி.கே. ஜக்கையன் (அ.தி.மு.க.) 35,992 வாக்குகளையும், ஆர். சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.) 12,038 வாக்குகளையும் பெற்று தோற்றனர்.

தி.மு.க. – அ.தி.மு.க. கடும் போட்டி
2006 மே பொதுத் தேர்தலின்போது மதுரை மத்திய தொகுதியில் இருந்து தி.மு.க. வேட்பாளரான சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் அவர் ஆனார்.

அவர் மரணம் அடைந்ததையடுத்து, இத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 11-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உண்மையான போட்டி: வி.ராஜன் செல்லப்பா (அ.தி.மு.க.), சையது கௌஸ் பாஷா (தி.மு.க.), பன்னீர்செல்வம் (தே.மு.தி.க.) உள்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் இம்மூவருக்கும் இடையேதான் உண்மையான போட்டி உள்ளது.

தி.மு.க.விடம் இருந்து இத்தொகுதியைக் கைப்பற்ற தனது தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து முனைப்பான பிரசாரத்தில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளது.

தொகுதியைத் தங்கள் வசம் தக்க வைத்துக் கொள்வதற்கான தீவிர முயற்சியில் தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. இறங்கி உள்ளது.

அரசியல் களத்தில் வெற்றி -தோல்வியை நிர்ணயிப்பதில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிரூபிப்பதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க. மேற்கொண்டுள்ளது.

Anti-DMK posters in Madurai Central bypoll constituency

Headline News – Maalai Malar:

தி.மு.க.வுக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள்: மத்திய தொகுதியில் பரபரப்பு தி.மு.க.வுக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள்

மதுரை, அக். 2-
அகில இந்திய தேவர் பேரவை தலைமையகம் என்ற பெயரில் மதுரை மத்திய தொகுதி முழுவதும் தி.மு.க.விற்கு எதிரான பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டியில், தி.மு.க. ஆட்சியில் மூக்கையா தேவரின் பாப்பாபட்டியும், 2006-ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் பசும்பொன் கிராமமும், பூலித்தேவரின் நெற்கட்டும் செவல் கிராமமும் தனி தொகுதியாக்கப்பட்டன. கடந்த 1996-ம் ஆண்டும், 2006-ம் ஆண்டும் முக்குலத்தோர் எவரும் கலெக்டராக நியமிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் தேவர் பேரவை தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.