Daily Archives: ஓகஸ்ட் 26, 2006

Vettaiyaadu Vilaiyaadu – Movie Review

சுஜாதாவின் முதல் நாவல் நைலான் கயிறு. குமுதம் இதழில் 1968இல் வெளிவந்த அதே நெடியுடன் இன்னொரு படம் துவங்குகிறது.

கொலை செய்தவன் வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டிருப்பான். அவன் ஏறிக் கொண்ட இடத்தில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து சென்று அதிமுக்கிய தடத்தைக் கண்டுபிடிப்பார்.

அவருக்கு முன் அமெரிக்க போலீஸுக்கு இணையாக சித்தரிக்கப்படும் மாதவன் பல விஷயங்களில் சறுக்கியிருப்பார்.

நைலான் கயிற்றில் விமானப் பட்டியலை சரி பார்த்து குற்றவாளியை அடையாளம் காண முயலுவார்கள். இது போல் பல இடங்களில் ‘அட… சுஜாதா!?’ சொல்ல வைக்கிறார் இயக்குநர் கௌதம்.

நைலான் கயிற்றில் இராமநாதன் சீட்டு மாளிகை கட்டுவது போல் தடயங்களையும் லாஜிக்கையும் இணைப்பதாக சொல்வார். முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட முடிவுகளையே ஆதரித்துக் கட்டியது என்றாலும் சுவாரசியமான வசன நடையும் கட்டுக்கோப்பான புத்திசாலித்தனத்தையும் கொண்டது.

ரஜினிக்கு ஒரு சந்திரமுகி தேவைப்பட்டது போல் மும்பை எக்ஸ்பிரஸ் சறுக்கலுக்குப் பிறகு கமலுக்கு ‘வேட்டையாடு விளையாடு‘ வேண்டியிருக்கிறது. நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்.

அதற்கு சில காரணங்கள்:

  • ‘நான் ஆம்பிளைடா’ என்று அமர்க்களமாக அறிமுகக் காட்சியில் முழங்குகிறார். (கொசுறாக அதே ராகவன் குணசித்திரம் ‘நீ என்ன ஹோமோவா?’ என்று மனம்பிழற்ந்தவனை உச்சகட்டத்தில் எகத்தாளமாக வினவுகிறது.)
  • காக்கி சட்டை‘ நினைப்பில் ஒற்றைக் கையில் push-up எடுக்க முயல்கிறார். (முடியவில்லை)
  • ‘ராகவன் instinct’ என்று விளக்க முடியாதவற்றுக்கு கேள்விகள் கேட்டால், பதில் பகர முடியாமல் தமிழ் சினிமா கோட்பாடுகளின் படி நடக்கிறார்.

    இலக்கியப் பிரியர்களுக்கும் இந்தப் படம் தீனி போடும். என் சிந்தையைக் கவர்ந்த சில:

  • சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைப் புத்தகம் ஜோதிகாவின் மேஜையை அலங்கரிக்கிறது.
  • ம்துமிதாவின் சுபாஷிதம் அட்டைப்படம் போன்ற ஓவியத்துடன் கூடிய இன்னொரு (கவிதை?/ஆத்மாநாம்??) புத்தகம், கமல் & ஜோதிகாவிடையே காதல் சின்னமாக வலு சேர்க்கிறது.
  • Morgue என்பது பிணவரை என்று மொழிபெயர்த்து துணையெழுத்துக்கள் மூலம் தமிழ் பிணவறைக்குள் போனாலும், ப்ரூக்ளின் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் தமிழில் அளவளாவுவது மகிழ்ச்சி கொடுக்கிறது.

    ரொம்ப ஆராயாமல், மேலோட்டமாக, சன் தொலைக்காட்சி கேட்கும் வாயில் கணிப்பு நடத்தினால்…

  • முப்பது வயது – திருமணமானவர்: படம் அருமை. ரொம்ப ஜாலியா, கொஞ்சம் பயமா, தேவைக்கும் அதிகமான புணர்ச்சிகளுடன் இருக்கிறது. ‘விக்ரம்’ படத்தில் கலக்கல் ‘வனிதாவனி… வனமோகினி’ முடிந்தவுடன் அம்பிகா காலியாவாங்களே… அந்த மாதிரியே இங்கேயும் வைத்திருக்கிறார். ஆனால், பாட்டுதான் மனதில் நிற்கவில்லை.
  • நாற்பது வயது – அமெரிக்க பச்சை அட்டை: இங்கே ‘சீரியல் கில்லர்’ நிறைய பேர் செய்தியில் வந்துகொண்டேயிருப்பார்கள். அவர்களைக் குறித்து அவ்வப்போது திரைப்படங்களும் நிறைய எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு கொலையை சாஷ்டாங்கமாகக் காட்டி, சாவதானமாகக் கொண்டு சென்றாலும், ஒன்றரை மணி நேரத்தில் படத்தை விறுவிறுப்பாக முடித்துவிடுவார்கள். போகப் போக, ‘தொடர் கொலைக்கான காரணம் என்ன?’ என்று லாஜிக்கும், கஷ்டப்பட்டு புத்தியைத் தீட்டி போலீஸ் வலைக்குள் வீழ்த்துவதையும் முடிச்சிட்டு காண்பிப்பார்கள். இங்கே அந்த மாதிரி இல்லாமல், ‘ஏன்/எதற்கு’ என்பதை ஏப்பமிட்டு விட்டு, முடிவிலும் சோப்ளாங்கியாய் ஏனோதானோ என்று எண்பதுகளின் ‘சகல கலா வல்லவன்‘களை விட சப்பையான க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள்.
  • அவருடைய மனைவி: ‘சிகப்பு ரோஜாக்கள்‘ கூட சங்கிலிக் கொலைகள்தானே… அங்கு கூட லாஜிக் & முடிவில் அயர்ச்சி ஏற்படாத த்ரில் இருக்கும். ‘கலைஞன்’ படத்தில் சஸ்பென்ஸ் கிடைக்கும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களினால், காமிராவை 360 டிகிரி சுற்றி வளைத்து, ஜீப்களை பறக்கவிட்டு, தமிழகக் காவல்துறை ட்ரேட்மார்க் தொந்தியுடன் இருபது வயது காளையை ஓடிப்பிடிக்கவைத்தாலும், கொட்டாவி வரவைக்கிறார்.
  • இருபத்தைந்து வயது – எச்1பி: எப்பொழுதாவது எட்டிப் பார்த்தாலும், கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை. ‘கொஞ்சம் சிரிச்சா குறைஞ்சா போயிடுவீங்க’ என்று எண்ண வைக்கும் அளவு அமைதியான கதாபாத்திரத்துக்கு, தேவையான குழப்பத்துடன் ஜோதிகா. தமிழில் கையாளப்படாத சங்கிலிக் கொலைவாணர்களின் செய்கை. நான் பார்த்து தேய்த்த நியு யார்க்கை ‘வாவ்!’ போட வைக்கும் ஒளிப்பதிவு. கமலாலினி ரொமான்ஸ். என்சாய் செய்தேன்.

    ‘வாயை மெல்லுவதற்கு அவல் ஏதாவது கிடைக்குமா’ என்று காத்திருக்கும் அரசியல்வாதிகளுக்காக

  • வில்லன் உருத்திராட்சக் கொட்டை அணிந்திருப்பதாக காட்டுவது எங்கள் மத அம்பிக்கைகளை புண்படுத்துகிறது. இதுவே ஒரு ____கவோ, ____கவோ வைத்திருக்காததன் பின்னணி என்ன?
  • கிராமப்புறங்களில் இருந்து மருத்துவம் படித்து வெளிநாடு செல்பவர்களை, இந்தப் படம் தாழ்மையுணர்ச்சி உடையவர்களாகவும் தற்பால் விரும்பிகளாகவும் ஜோடிப்பது நகரத்தில் வளர்ந்த படைப்பாளியின் ஆழ்மன வெளிப்பாடு.
  • அமெரிக்க காவல்துறை surveillance camera நிறுவாமலும், சமயயோசிதமாக செயல்படாமலும், மோப்ப நாய்களுக்கு கமல் போன்ற சக்தி இல்லாததும் அந்த நாட்டின் காவல்துறை லட்சணத்தை சரியாக சித்தரிக்கவில்லை.
  • தேடுவதற்கு உரிய வாரண்ட் இல்லாமல் அத்துமீறி நுழைவதையும்; போதிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஹீரோயிஸமாக பிடிக்க நினைப்பதையும் இந்தப் படம் தூண்டி விடுகிறது.

    | |