கோக், பெப்சியில் பூச்சி மருந்து இல்லை: அன்புமணி கூறுகிறார்
புது தில்லி, ஆக. 23: அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் கோக கோலா, பெப்சி உள்ளிட்ட மென் பானங்களில், அளவுக்கு அதிகமாக பூச்சிமருந்து நச்சுக் கழிவுகள் இருப்பதாக வெளியான தகவல், நிபுணர்களின் ஆய்வில் நிரூபணம் ஆகவில்லை என்றார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.
பூச்சிமருந்துகளின் விளைவுகளை ஆய்வதற்கான அறிவியல், சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் சுனிதா நாராயணன் என்பவர் இப் பிரச்சினையை முதலில் கிளப்பினார்.
டாக்டர் டி. கனுங்கோ தலைமையிலான ஆய்வுக்குழு இதுவரை 14 மாநிலங்களிலிருந்து 213 சாம்பிள்களை எடுத்து சோதித்தது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிகக் குறைவாகத்தான் பூச்சிமருந்துக் கழிவு இருப்பது இச்சோதனைகளில் புலனாகிறது என்று நிபுணர் குழு கூறுகிறது.










