Dinamani.com – Headlines Page : ராஜீவ்காந்தி விருது விழாவில் சோனியா பேச்சு: பயங்கரவாதத்துக்கு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தையே பொறுப்பாக்கக்கூடாது
புது தில்லி, ஆக. 21: “”பயங்கரவாதச் செயல்களுக்கு சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவினரையும் பொறுப்பாளியாக்கக் கூடாது” என்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
ராஜீவ் காந்தி பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சத்பாவன விருதை, பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே அம்மையாருக்கு வழங்கிய நிகழ்ச்சியில் பேசுகையில் இக்கருத்தை அவர் வலியுறுத்தினார். விருதில் பாராட்டு பத்திரமும் ரூ.2.5 லட்சம் ரொக்கமும் அடக்கம்.
(மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள பின்னணியில், சோனியா காந்தியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.)
பிரதமர் மன்மோகன் சிங்: மதவாதிகளால் ஏற்படும் சவால்களை மக்கள் நேரடியாகச் சந்தித்து நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு வகுப்புவாதம்தான் பிரதான எதிரி என்று ராஜீவ் காந்தி அடிக்கடி எச்சரிப்பார்.
மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் காந்தியவாதியான நிர்மலா அற்புதமாகச் செயல்பட்டிருக்கிறார். மதத்தாலும் பூகோளரீதியாகவும் பிரிந்திருந்தாலும் நாம் அனைவரும் ஒரே கலாசாரம், பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று இந்தியாவில் மட்டும் அல்ல, பக்கத்து நாடுகளிலும் சென்று பிரசாரம் செய்தவர் நிர்மலா.
சோனியா காந்தி: நிர்மலாவுக்கு இந்த விருது தரப்படுவது மிகவும் பொருத்தமே. ராஜீவ் காந்தி எந்த லட்சியங்களுக்காகவும் கொள்கைகளுக்காவும் வாழ்ந்து, மறைந்தாரோ அவற்றின் அடையாளமாகத் திகழ்பவர் நிர்மலா.
பயங்கரவாதத்துக்கு சமுதாயத்தின் இந்தப் பிரிவினர்தான் காரணம் என்று யார் மீதும் பழிபோடக் கூடாது.
நிர்மலா தேஷ்பாண்டே: அணு ஆயுதமற்ற, வன்முறைகளற்ற உலகம் வேண்டும் என்று விரும்பினார் ராஜீவ் காந்தி. மதத்தின் பெயரால் நடந்த கலவரங்களில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்பதை அவர் வலியுறுத்தி வந்துள்ளார். நம்முடைய பக்கத்து நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதை பிரசாரம் செய்து வருகிறேன்.
நீதிபதி ஏ.எம். அகமதி (விருதுக்குழுவின் ஆலோசகர்): வெவ்வேறு மதம், இனம் கொண்ட குழுக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறவர்களுக்கும், பயங்கரவாதம், வன்செயல்களுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.
அன்னை தெரசா, பிஸ்மில்லா கான், சுநீல் தத், திலீப் குமார், லதா மங்கேஷ்கர், கபில வாத்ஸ்யாயன் உள்பட இதற்கு முன் 13 பேர் இந்த விருது பெற்றுள்ளனர்.
விழாவுக்கு வந்தவர்களை மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா வரவேற்றார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.










