ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது
சென்னை, ஆக. 21: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, “”தொல்காப்பியர்” விருதை குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சென்னையில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.
இது தொடர்பாக ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம. வீரப்பன், நிறுவனர் – செயலர் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் “”தொல்காப்பியர்” விருது வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் ஆண்டு விருதை, தொல்காப்பிய பூங்கா வடித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார்.
ரூ.1 லட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும், வெள்ளியால் ஆன பட்டயமும் இவ்விருதில் அடக்கம்.
ஓவியத்தில் தகுதிப் பட்டயம்: வழக்கமாக தகுதிச் சான்றினை (சைட்டேஷன்) எழுத்துகளில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில் பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்தது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியம் படைத்த தொல்காப்பியர் உருவமும், தற்காலத்தில் வாழ்நாள் முழுவதும் படைப்பிலக்கியம் படைத்துவரும் முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் “எழுதுகிற தோற்றமும்’ தகுதிப் பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் நிகழ்ச்சிகளை விளக்கும் உருவங்கள் இதில் வெள்ளியில் பொறிக்கப்பட்டுள்ளன என்றனர்.










