அடிப்படை வசதிகளுக்குப் போராடி பலனில்லை! கிராமத்தை காலிசெய்து வெளியேறினர் ஹரிஜனங்கள்
எம்.ஷேக் முஜிபுர் ரகுமான்
தாராபுரம், ஆக. 18: அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாததால் ஹரிஜன காலனி மக்கள் வீட்டைக் காலி செய்ததுடன் கிராமத்தைவிட்டே வெளியேறி விட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்; ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்படியும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.
தாராபுரத்தில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஹரிஜன காலனியில் மொத்தமுள்ள 15 வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
பொங்கலூர் பேரவைத் தொகுதியில் (தொடர்புள்ள தேர்தல் அலசல்: அப்பிடிப்போடு: தேர்தல் அலசல் – 2006 -கோயம்புதூர்
) – குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது இக் கள்ளிப்பாளையம். நிலத்தடி நீரில் “ப்ளோரைடு’ கலந்துள்ளதால் குடிக்க, குளிக்க, சமைக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இக்கிராமம் தவிர ராசிபாளையம், அழகியபாளையம் ஆகிய ஊர்களில் இதேநிலை நீடிக்கிறது. இப்பகுதி மக்களின் ஒரே நீர் ஆதாரம் அமராவதி – காங்கயம் கூட்டு குடிநீர் திட்டம் மட்டுமே.
குடிநீர்த் தட்டுப்பாடு
கள்ளிப்பாளையத்தில் உள்ள மேனிலைத் தொட்டியில் ஓரளவு குடிநீர் பெற்று வந்த இம்மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அமராவதி- காங்கயம் கூட்டுக் குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தினர். இதன் பலனாக பொங்கலூர் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.50 லட்சம் செலவில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. எனினும் குடிநீர் கிடைக்கவில்லை.
பொதுமக்கள் குறைகேட்பு நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை.
கள்ளிப்பாளையத்தில் இருந்து நொச்சிப்பாளையம், நல்லிமட்டம் ஆகிய ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் சென்றே குடிநீர் எடுத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள். ஹரிஜன மக்களுக்கு வாகன வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை வசதி ஏதும் செய்து தரப்படவில்லை.
பல்வேறு போராட்டம் நடத்தியும் பயன் இல்லாததால் வேறு வழியின்றி தங்களது வீடுகளைக் காலி செய்து கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் ஹரிஜன மக்கள். இதே நிலை தொடர்ந்தால் அந்த கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தினரும் வீட்டைக் காலி செய்து விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கடந்த 6 மாதங்களுக்கு முன் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். ஒரே வாரத்தில் குடிநீர் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
இக்கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச் செல்கிறது. இதை சீரமைத்தால் மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்கலாம் என்றார். இது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ஏதும் பேச மறுத்து விட்டனர்.











சதா பிராமணர்கலைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள் கவனிப்பார்களாக..
ஒரு சிறு சமுதாயமே அழிவு பாதையை நோக்கி போகிறது. எங்கு போவார்களோ, எந்த ஊர் அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமோ? சிதறுண்டு ஆளாய் ஒரு பக்கம் போய், விலாசம் தெரியாமல் எங்காவது தொலையவேண்டியது தான் கதியோ? வாழ்க வல்லரசு இந்தியா!