குடியரசுத் தலைவரின் துணைச் செயலர் கார் திருட்டு!
புது தில்லி, ஆக. 17: குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பத்திரிகைத் தொடர்பு துணைச் செயலர் நிதின் வகாங்கர் என்பவருடைய கார் தில்லியில் திங்கள்கிழமை திருடுபோனது.
இந்திய பத்திரிகைகள் சங்க அலுவலகத்துக்கு வெளியே காலை 11 மணிக்கு காரை விட்டுவிட்டு உள்ளே சென்றார். கார் திருடுபோனதைத் தெரிந்து கொண்ட 5 நிமிஷத்துக்கெல்லாம் போலீஸில் புகார் செய்தார். அதில் அவர் வங்கிக்கான சில ஆவணங்களை வைத்திருந்தார்.
சுதந்திர தினம், ஜன்மாஷ்டமி ஆகியவற்றின்போது நகரில் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று தில்லி மாநகரின் எல்லா பகுதிகளிலும் சாலையில் தடுப்புகளை அமைத்திருக்கிறார்கள். வாகனங்களைத் தணிக்கை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்துகொள்கின்றனர். இந் நிலையில் இந்தக் கார் களவு போனதும், அதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் வியப்பாக இருக்கிறது.










