அதிமுக நிர்வாகிகள் மாற்றம்: தலைமை நிலைய செயலாளராக செங்கோட்டையன் நியமனம்
சென்னை, ஆக. 16: அதிமுக தலைமை நிலையச் செயலாளராக கே.ஏ. செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார் அவர்.
இதுவரை அதிமுக தலைமை நிலைய செயலாளராக இருந்த டி.ஜெயக்குமார், மீனவர் பிரிவு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நிர்வாகிகள் மாற்றம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், வரகூர் அருணாசலம், ஆர். சரோஜா, எஸ்.என். ராஜேந்திரன், விஜயலட்சுமி பழனிசாமி, அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைமணி ஆகியோர் அந்தந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை நிலையச் செயலராக செங்கோட்டையன், மீனவர் பிரிவு செயலாளராக டி. ஜெயக்குமார், மீனவர் பிரிவு இணைச் செயலாளராக கலைமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி நீக்கப்பட்டு, அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.கே. சிவசாமி அந்த மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுப. கருப்பையா நீக்கப்பட்டு, சோழன் சித். பழனிசாமி அப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முருகேசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் எம். சுந்தரபாண்டியன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.










