2.40 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் – ஆர்க்காடு வீராசாமி
சென்னை, ஆக.17: சுயநிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்ற 2.40 லட்சம் விவசாயிகளுக்கு இனி இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மின்துறை மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பேற்றவுடன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், சுயநிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்ற 2.40 லட்சம் விவசாயிகள் பம்ப் செட்டுகளுக்கு இனி மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 11-8-2006-ல் எரிசக்தி துறை ஆணை வெளியிட்டுள்ளது. எனவே, சுயநிதி திட்டத்தின் மூலம் பம்ப் செட்டுகளுக்கு மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் யாரும் இனி மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, மின்துறை அதிகாரிகளும் மேற்படி பம்ப் செட்டுகளுக்கு விவசாயிகளிடம் மின் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஆர்க்காடு வீராசாமி.
ரூ.10,000 செலுத்தினால் விவசாய பம்ப் செட்டுகளுக்கு விரைவில் மின் இணைப்பு தரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவில்லை. அதனால் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அத்தகைய பம்ப் செட்டுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, நிதி அமைச்சர் க.அன்பழகன் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிப்படி சுயநிதி திட்டத்தின் கீழ் சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2.40 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும் இனி இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதையொட்டி கடந்த 11-ம் தேதி இதற்கான உத்தரவை எரிசக்தி துறை வெளியிட்டுள்ளது.
மானியம் ரூ.1530 கோடி
விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கும், வீட்டு மின் இணைப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கும், கிராமங்களில் உள்ள குடிசைகளுக்கு இலவச மின் வசதி வழங்குவதற்கும் தமிழக அரசு, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மானியம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மானியமாக ரூ.1530 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.











Savithri Kannan Article: எப்படி ஏற்பட்டது மின்சாரத்தட்டுப்பாடு?