யாருடைய சான்றிதழும் தேவையில்லை: ராமதாஸýக்கு லாலு பதில்
புது தில்லி, ஆக. 11: “யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார் ரயில்வே அமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.
லாலு பிரசாதை செவ்வாய்க்கிழமை சந்தித்தார் ராமதாஸ். அப்போது, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவசரப்படக்கூடாது என்றும், படிப்படியாக அமல்படுத்த அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆதரவு கொடுப்போம் என்றும் லாலு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “இட ஒதுக்கீடு விவகாரத்தில் லாலு பின்வாங்கப் பார்க்கிறார்’ என்று கடுமையாகச் சாடினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய லாலு,
“யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. எந்த ஒரு இயக்கத்துக்காகவும் தியாகி பட்டம் வாங்க வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை’
“இட ஒதுக்கீடு தேவை என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் அதில் சில பிரச்சினைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அது கல்விக்குப் பொருந்துமா என்று எனக்குத் தெரியாது’ என்றார். “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை விரைவில் சுமுகமாக முடிப்போம். ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம்’ என்றார் அவர்.










