ராசுக்குட்டிக்கு ஒரு பாக்யராஜ் வகை பதில்:
—-தேன்கூடு போட்டிக்கு படைப்பவர் பெயரே போடக்கூடாதுன்னு… இந்த கருத்துக் கணிப்பெல்லாம் பரவாயில்லயா—-
எனக்கு ரொம்பப் பிடித்த கதை ஒன்று :-D)
பக்கத்து ஊர் சந்தைக்கு குதிரை வாங்க அப்பாவும் மகனும் போறாங்க. நிறைய குதிரை வந்திருக்கிறது. தங்கள் பொக்கீடுக்கு ஏற்ற குதிரையை வாங்கி, தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வருகிற வழியில் ‘பஹேலி’ படத்தில் வருமே… அந்த மாதிரி ஒரு குக்கிராமம்; பஞ்சாயத்து கூடும் மரநிழல். அதன் அடியில் இருவர் பேசிக் கொள்கிறார்கள்.
‘என்னங்க… காசு கொடுத்து வாங்கிட்டீங்க இல்ல? சவாரி செய்வதற்குத்தானே குதிரை இருக்கு… எதுக்கு ரெண்டு பேரும் நடந்து போறீங்க? பெரியவர் உட்கார்ந்து வரலாமில்ல!’
நல்ல யோசனையாக தென்பட, அப்பா குதிரை மேல் ஏறிக் கொள்கிறார்.
அடுத்த ‘வானத்தைப் போல’ குக்கிராமம். இன்னொரு மரத்தடி. இரண்டு வழிப்போக்கர்கள்.
‘அநியாயத்தப் பாருடா! கொளுத்தற வெயிலில் சின்னப் பையனை நடக்க விட்டு வேடிக்கை பார்த்துண்டே, பெருசு போடற ஆட்டத்தப் பார்த்தியாடா?’
அப்பாவுக்கு சுருக்கென்று மனம் நோகிறது. சடாரென்று குதிரையை விட்டு குதித்து, அவர்களின் கண் முன்னாலேயே, பையனை ஏற்றிவிட்டு, பயணத்தைத் தொடர்கிறார்.
இன்னொரு குறுக்கு சந்து. பிறிதிரண்டு பொழுதுபோகாதவர்கள்.
‘இதப்பாருடா… குதிரையை வாங்க தெரிஞ்சிருக்கு. அது எப்படி பயன்படும் என்று கூட அறியாதவங்களா இருக்காங்க. ஜம்முன்னு ரெண்டு பேரும் ஏறிக் கொண்டு, ஊருக்கு போய்சேருவதை விட்டுட்டு, ஒருத்தர் அன்ன நடை நடக்கிறார்.’
சரிதானே என்று மின்னல் வெட்ட, அப்பாவும் ஏறிக்கொள்கிறார்.
அடுத்த முக்கு. டீக்கடை பெஞ்சு. வேறொரு அலசல்வாதிகள்.
‘அய்யோ பாவம்… எனக்கு மட்டும் மனேகா காந்தி ஃபோன் நம்பர் கிடைச்சா உடனே சொல்லிடுவேன். வாயில்லா ஜீவண்டா அது. இரண்டு தடிமாடுங்களும் புஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சு முட்ட குதிரையை நோகடிக்கறத பார்த்தா ஆத்தாமையா இருக்குடா. காசு கொடுத்து வாங்கிய பணத்திமிர். நல்லது செய்ய வேண்டாம். இந்த மாதிரி கொடுமையை பார்க்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்’
மிரண்டு போகிறார்கள் இருவரும். அப்பா முடிவெடுக்கிறார். குதிரையின் முன்னங்கால்களைத் தானும், பின்னங்கால்களை மகனும் தாங்குவது. தாங்களே புத்தம்புதிய உச்சசிரவஸ் குதிரையை தலைமேல் தூக்குகிறார்கள். குதிரை மிரண்டு போய், நாலுகாலில் ஓடியே போய்விட்டது.
இந்தக் கதையில் நான் இந்த சந்துதோறும் கருத்து சொல்லும் சாதி 😉 அப்பா/மகன் மாதிரி பங்குபெறுவோர் குழம்பாத வரைக்கும் சந்தோசமே ;-))
Tamil Story | Fable | Advice











