வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
வங்கிப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் கொள்கையை எதிர்த்தும், வங்கிகளில் ஒரு லட்சம் காலி இடங்களில் ஊழியர்களை நியமிக்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
வங்கிகளின் பணிகளை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்க ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கைத் தொடங்குவது, பணத்தை வங்கியில் செலுத்துவது, பணத்தை எடுப்பது, டிராப்ட் தருவது, கடன் வழங்குவது போன்ற பணிகளை வாடிக்கையாளர்களுக்காக தனியார் ஏஜென்சிகளே இனி மேற்கொள்ளும்.
இது வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு ஒப்பாகும். நிறுவனங்கள் மற்றும் அரசின் காசோலைகளை பணமாக மாற்றும் பணியை ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றுமுள்ள பொதுத்துறை வங்கிகள் செய்து வருகின்றன. இனிமேல் நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் என்ற தனியார் கம்பெனி இந்த பணியைச் செய்யும். இதனால் வங்கிகளில் பணியிடங்கள் குறையும் என்று இச்சங்கம் கூறியுள்ளது.










