Continuing School Mishaps and Kumbakonam Inaction


Dinamani.com – Editorial Page

தரமான, பாதுகாப்பான கல்வி :: எஸ்.எஸ். இராஜகோபாலன்

ஜூலை 16 – தமிழகப் பள்ளிக் குழந்தைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் நாள். இரண்டாண்டுகட்கு முன்னர் இதேநாளில்தான், கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் தீயில் வெந்து கருகி 94 குழந்தைகள் மாண்டனர். கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில் அக் குழந்தைகள் பள்ளி நாடி தொலைதூரத்தினின்று வந்தனர். சமுதாயத்தின் அடித்தள மக்களைச் சார்ந்தவர்களாகவே அக் குழந்தைகள் இருந்தனர்.

ஏன் அவர்கள் கும்பகோணம் பள்ளியை நாடினர் என்ற வினாவிற்கு விடை காண முற்படாது, பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓலை வேய்ந்த கூரையே விபத்திற்குக் காரணம்

என்று மக்கள் கவனம் திசைதிருப்பப்பட்டது.

அனைத்துப் பள்ளிகளிலும் ஓலை வேய்ந்த கூரைகள் நீக்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட 24 மணி நேரத்தில் எல்லாப் பள்ளிகளிலும் ஓலைக்கூரைகள் நீக்கப்பட்டன. மாற்றுக் கூரைகள் பல பள்ளிகளில் போடப்படாத நிலையில், மாணவர் திறந்த வெளியில் வெய்யிலையும் மழையையும் பொருள்படுத்தாது கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல அரசுப் பள்ளிகளில் மாணவரிடமிருந்தே கட்டாய வசூல் செய்யப்பட்டு மாற்றுக் கூரைகள் போடப்பட்டன. அரசு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

தீ விபத்திற்குக் காரணத்தைக் கண்டு தவிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிவுரை வழங்க நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்றிருந்தும், அவர் விபத்து நடந்து ஓராண்டு முடிவதற்கு முதல் வாரத்திலேயே அறிக்கை கொடுத்தார். பட்டிதொட்டியெல்லாம் சென்று பள்ளிகளைப் பார்வையிட்டார்.

மாற்றங்களைப் பெரும் பொருள்செலவில் செய்ய பள்ளிகள் நிர்பந்திக்கப்பட்டனர். ஓராண்டாகியும் அவர் அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கையில் கூறப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி யாரும் அறிய மாட்டார். எனவே சம்பத் கமிஷன் சம்பிரதாயத்திற்கு அமைக்கப்பட்ட கண் துடைப்பு பணியே என்று அறியலாம். குழந்தைகள் பாதுகாப்பு மீது உண்மையான அக்கறை இருந்தால், விரைவாக அறிக்கை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.

கடந்த முப்பதாண்டுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் இலவச, தரமான கல்வி மறுப்பே கும்பகோணம் விபத்திற்குக் காரணம். விபத்தில் இறந்த 13 குழந்தைகள் வாழ்ந்த நத்தம் கிராமத்தில் பள்ளி கிடையாது. கும்பகோணம் அங்கிருந்து ஏறக்குறைய 7 கி.மீ. எனவே 1 கி.மீ தூரத்தில் பள்ளி அமைத்திருக்கிறோம் என்ற அரசின் அறிவிப்புகள் உண்மையல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கட்டடத்தில் ஒரு பள்ளிதான் இருக்க வேண்டும். கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் மூன்று பள்ளிகள் செயல்பட்டன. ஒன்று அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, மற்றொன்று ஆங்கில வழிப் பள்ளி. அரசுப்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் போதுமான ஆசிரியர்களின்றி இயங்குவதால், பெற்றோர் கட்டணப் பள்ளிகளை நாடும் கட்டாயம் ஏற்பட்டதன் விளைவே கிருஷ்ணா பள்ளியைப் பெற்றோர் நாடக் காரணம். மேலும் ஆங்கில வழிக் கல்வி உயர்தரமானது என்ற மாயை தமிழகத்தில் பல ஆண்டுகளாக வளர்த்து விடப்பட்டுள்ளது. தரமான இலவசக்கல்வியை வீட்டிற்கருகில் அரசு அளித்திருந்தால், குழந்தைகள் கிருஷ்ணா பள்ளியை நாடியிருக்க மாட்டார்கள். எனவே விபத்திற்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டியது அரசே ஆகும்.

ஜூலை 16 ஆம் நாளை “”குழந்தைகள் பாதுகாப்பு நாள்” என்று அறிவிக்கவும், இறந்துபட்ட குழந்தைகளின் நினைவை நிறுத்த ஒரு நினைவுத்தூண் நிறுவ வேண்டுமென்றும்” விடப்பட்ட வேண்டுகோள்களை அரசு நிறைவேற்றவில்லை. இறந்து பட்டவர் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது காரணமோ!

கும்பகோணம் விபத்து தரும் முதல் பாடம் அரசு தரமான கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் தர வேண்டுமென்பதே. வீட்டிற்கருகில் பள்ளிகள் இருக்க வேண்டும். இம்மாதம் ஒரே வாரத்தில் ஆறு விபத்துகளில் பள்ளிக் குழந்தைகள் இறந்திருக்கின்றனர். பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்தும், மின்சாரம் தாக்கியும் குழந்தைகள் பள்ளிகளிலேயே இறந்துள்ளதும் வரலாறு. பள்ளிகள் பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயர்கல்வியும் தமிழ்வழியில் கற்பிக்க வகை செய்வது ஆங்கில வழிக் கல்வியின் மீதுள்ள மோகத்தைக் குறைக்கும். கலை அறிவியல் கல்லூரிகளில் முன்னர் வழங்கி வந்த தமிழ்வழி வகுப்புகளைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல, அரசின் பொறுப்பிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு மருத்துவக் கல்லூரியிலும் தமிழ்வழி வகுப்புகள் பரீட்சார்த்தமாகத் தொடங்க வேண்டும். தமிழ் வழியில் பயிலும் பெரும்பான்மையான மாணவர் நம்பிக்கையோடு உயர் கல்வி தொடர உதவுவதுடன், தமிழ் மொழியும் அறிவை அள்ளித் தரும் மொழியாக உருவாகும்.

தமிழகத்தில் தற்போதைய அரசு கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. நான்கு கல்வி வாரியங்களை இணைத்து ஒரே வாரியம் அமைத்து, பொதுவான கலைத்திட்டம், தேர்வு முறை கொண்டு வர முடிவு செய்திருப்பது கல்வியாளர்கள் நெடுநாள்களாகக் கோரி வந்த ஒரு மாற்றம்.

அதுபோலவே, தமிழினைக் கட்டாய முதன்மொழியாக அறிவித்ததும், பள்ளிகள் நன்கொடைகளைத் தடை செய்ததும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதும், தொகுப்பூதிய ஆசிரியர்களை முறைப்படுத்தியதும் நல்ல கல்வி அளிப்பதில் அரசின் அக்கறையை எடுத்துக்காட்டுகின்றன. இதுபோலவே பள்ளிக்கல்வியில் மேலும் பல சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளின் நம்பிக்கையைப் பெறும்வகையில் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளின் உயிர்த் தியாகம் நல்ல கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க வழி செய்வதன் மூலமே ஈடுகட்ட முடியும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.