Siruthavoor Encroachment by Jayalalitha


BBCTamil.com

தலித்துகள் நிலத்தில் முன்னாள் முதல்வர் தங்கியிருந்த பங்களா: சர்ச்சை வலுக்கிறது

தமிழக தலைநகர் சென்னையை அடுத்த சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தங்கி வந்த சொகுசு பங்களாவின் ஒரு பகுதி, 1967 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது அவருடைய தோழி சசிகலாவின் ஆட்களால், இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தை தமிழக அரசு மீட்டு, மீண்டும் தலித்துகளுக்கே வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களும், அவர்களின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் பல்வேறுவகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் பற்றி சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, சிறுதாவூரில் தானும், தனது தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல என்றும், வாடைக்குத்தான் அந்த பங்களாவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், அந்த பங்களா தன் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த பங்களா கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பான சர்ச்சை ஏதேனும் இருந்தால், அதை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், ஜெயலலிதா கூறினார்.

இது தொடர்பாக தன் மீது அவதூறு பரப்பி, தன் மீது பழி போடவும், தனது நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் இதை தாம் சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டப்போவதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட கருணாநிதி, சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவோ, சசிகலாவோ உரிமையாளர் இல்லை என்றால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக சிறுதாவூர் பங்களாவுக்கு உண்மையான உரிமையாளருக்கும், ஜெயலலிதா, சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? அந்த பங்களாவுக்கான வாடகையை யார் கொடுத்தது? என்று அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

கருணாநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தனக்குச் சம்பந்தம் இல்லாத சிறுதாவூர் பங்களா குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி, அவர் பெயரிலும் அவரது சொந்த, பந்தங்களின் பெயரிலும் இருக்கும் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளளர்.

சிறுதாவூர் பங்களாவுக்கான வாடகையை தாமே தமது சொந்த பணத்தில் கொடுத்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முழு உண்மைகளையும் வெளியில் கொண்டு வரும் பொருட்டு, தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் உள்ளிட்ட சில தலித் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம் அஇஅதிமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் இது தொடர்பில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

தமிழக அரசால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் இன்னாள் முதல்வரின் குடும்ப சொத்துகணக்கு எவ்வளவு என்கிற விவாதமாக திசைமாறிச் செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

6 responses to “Siruthavoor Encroachment by Jayalalitha

  1. Unknown's avatar கோவி.கண்ணன்

    சிறிதா ஊர் ? பங்களா சிறிதா ? சர்சைகள் சிறிதா ? பெரிது படுத்தாதீர்கள் 🙂

  2. நண்பர் சீமாச்சு சொன்னது போல, இது ஒரு மாநில முதலமைச்சரால் 1 நிமிடத்தில் கண்டுபிடித்து விடக் கூடிய ஒன்றே!

    அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

    ஜெ. வாயைப் பிடுங்கி அவரை அவர் சொற்களிலேயே மாட்டிவிடச் செய்யும் முயற்சியே இது!

    வெட்கக்கேடு!

    கேப்டனுக்குப் போடுங்கன்னு தலையா அடிச்சுக்கிட்டேன்!

    யாரு கேட்டாக!

    அனுபவிங்க சாமிகளா!

    :))

  3. If justice is to be done to Dalits
    then the questions would be:
    1,was there an enroachment
    2,is so from when and by who
    and what is the area enroached
    3, what is the solution to the
    problem.
    As JJ is not the owner it makes
    no sense except to politicise
    for petty gains to bring in JJ
    here.The govt. can find out the
    owner and check whether there
    has been any enroachment.If there
    is an enroachment then the govt.
    can take action. Buthad Dalits sold it or transferred ownership or leased it, then it would be a different issue.

  4. முதல்வர் வாய் பிடுங்குவது இருக்கட்டும்.. வாடகை வீட்டிலிருந்த , மிடில் க்ளாஸ் முன்னால் முதல்வருக்கு தன் வீட்டுக்காரர் யார் என்று சொல்வதில் உள்ள சிக்கல் என்ன? இதற்கு பதிலளித்துவிட்டு , முதல்வர் மேல் குற்றம் சாட்டினால் அர்த்தம் இருக்கும். அதை , எப்பொழுதும் போல, கழக அர்சியல் முறைப்படி , திசை திருப்புதலில் ஈடுபடுவதின் அவசியம் என்ன?

    கேப்புட்டன்னா? துப்பாக்கியையும், தன் இரு கால்களையும் தூக்கிக்கொண்டு , ஆக்ரமிப்பாளர்கள் தலை குனியுமளவும் அறிவுரை அளித்து, நிலத்தை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு, நெஞ்சு தூக்கி, நடக்கும்போது,ஏழைகள், அவருக்கு மாலை அணிவித்து , எதுகை மோனையில் பாட்டு பாடி டான்ஸ் ஆடி …. ஐயோ.. உண்மையிலே நீங்க அப்பிராணியா?

  5. அய்யா

    இந்த வாரம் ஜுவி யில் இது குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது…

    அதில், மிகத் தெளிவாக அந்த நிலம் பஞ்சமி நிலமும் அல்ல, தலித் மக்களுக்கு ஒதுக்கப் பட்ட நிலமும் அல்ல… அந்த பங்களா தலித் நிலத்தில் கட்டப்பட வில்லை…என பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன…

    அந்த பங்களா, ஜெவுக்கோ, சசிகலாவுக்கோ சொந்தமானது அல்ல என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளது…

    இவ்விஷயங்களை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் தான் தெரிவித்துள்ளார்…

    அரசியல்வாதிகள் தான் இப்பிரச்சினையை திசை திருப்புகிறார்கள் என எண்ணுகிறேன்…

    நீதி விசாரணை நடக்கட்டும் உண்மை என்னவென்று பார்ப்போம்…

  6. ஜூனியர் விகடனில் இருந்து சில பகுதிகள்: சென்னையிலிருந்து மாமல்ல புரம் செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூரைத் தாண்டி சற்று உள்வாங்கியிருக்கும் கிராமம்தான் சிறுதாவூர். இது, திருப்போரூர் டு திருக்கழுக்குன்றம் சாலையில் இருக்கிறது. ஆனால், இந்தக் கிராமத்தின் எல்லை, பழைய மாமல்லபுரம் சாலை வரை நீண்டிருக்கிறது. இந்தச் சாலையை ஒட்டித்தான் இப்போது பெரும் விவாதப் பொருளாகியிருக்கும் சிறுதாவூர் பங்களா இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புதுப் பொலிவு பெற்ற இந்தப் பங்களாவில் அவ்வப்போது தங்கியிருந்தார். தோழி சசிகலாவும் தங்கியிருந்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் மனோகரன் என்பவர்தான் இந்த விவகாரத்துக்கு மூல காரணம் என்பதால் அவரிடம் முதலில் பேசினோம்.

    ‘‘இது பஞ்சமி நிலம் என்று பிரச்னை கிளப்பப்படுகிறது. ஆனால், இது பஞ்சமி நிலமல்ல… சுதந்திரத்துக்கு முன்பாக தலித்களுக்கு வழங்கப்பட்டதுதான் பஞ்சமி நிலம். இது, 1967&ம் வருடம் தமிழக முதல்வராக அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டபோது நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக அறிவித்தார். அதன்படி, சிறுதாவூர் கிராமத்துக்குட்பட்ட ஏரியாவில் சுமார் 54 ஏக்கர் நிலத்தை அரசு நிலமற்ற விவசாயிகளுக்காக வழங்கியது. அதில் தலித்களும் அடக்கம். இந்த நிலத்துக்கு வடக்குப் புறத்தில்தான் சிறுதாவூர் பங்களா இருக்கிறது.

    ஏழை விவசாயிகளுக்குத் தெரியாமல் சென்னையைச் சேர்ந்த பணபலம் படைத்த சிலர், அந்த நிலத்தைத் துண்டுதுண்டாக விற்கத் துவங்கியிருக்கிறார்கள். போன வருடம்தான் இந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது. இதைப்பற்றி கேட்கப் போனபோது, ‘உங்களுக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் இந்த நிலத்துப் பக்கம் வரக்கூடாது’ என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்துபோன விவசாயிகள், தங்கள் நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள பங்களாவில் அவ்வப் போது தங்கிச் செல்லும் முன்னாள் முதல்வர் சார்பாகத்தான் மிரட்டல் வருகிறதோ என்றெல்லாம் நினைத்திருக்கிறார்கள்.

    கடுமையான முயற்சிக்குப் பிறகு, 1990&ம் வருடத்திலிருந்துதான் இந்த நிலங்களை சில சீமான்கள் தங்கள் பெயரில் மாற்றத் துவங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் தங்கள் பெயர்களுக்கு மாற்றிய நிலத்தை சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், ஒரு இசையமைப்பாளர் என சிலருக்கு விற்றிருக்கிறார்கள். அந்த இசையமைப்பாளர், தான் வாங்கிய நிலத்தைத் தன் மனைவி மற்றும் மகன்கள் பெயருக்கு மாற்றியிருக்கிறார். இப்போதைக்கு அந்த நிலத்தை அவர் குடும்பம் ஒரு ரிசார்ட் நிறுவனத்துக்கு விற்றிருக்கிறது.

    நாங்கள் மீட்க நினைக்கும் இடத்துக்கும் சிறுதாவூரில் ஜெயலலிதா தங்கும் பங்களாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் பங்களா சில வருடங்களுக்கு முன் சசிகலாவின் உறவுப் பெண்மணி ஒருவர் பெயரில் இருப்பதாக பலமான பேச்சு இருந்தது. இதை அ.தி.மு.க&வினரும் எங்களிடம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சில அ.தி.மு.க&வினர், அந்தப் பங்களாவைக் கடக்கும்போது பவ்யமாகக் கும்பிடு போட்ட காலங்கள் எல்லாம் உண்டு. அப்படியிருக்கும்போது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக, ‘அந்த பங்களா என்னுடையது அல்ல, அரசு கொடுத்த நிலத்தை நான் ஆக்கிரமிக்கவில்லை’ என்றெல்லாம் ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். யாரும் ஜெயலலிதா தங்கும் பங்களா குறித்து எந்த விவகாரத்தையும் எழுப்பவில்லை. எங்கள் போராட்டமெல்லாம் அந்தப் பங்களாவுக்கு வடக்குப்புறம் இருக்கும் 54 ஏக்கர் நிலத்தை மீட்பதில்தான். புதிய அரசு இப்பிரச்னையில் தலையிட்ட பிறகுதான் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் சுதந்திரமாக அதில் கால்வைக்கிறார்கள், அதைச் சுத்தம் செய்கிறார்கள். சிறுதாவூர் பங்களாவின் சொந்தக்காரர் யார் என்பது எங்களுக்குத் தேவையில்லாத கேள்வி’’ என்று முடித்தார் மனோகரன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.