Mine is a Dravidian Party – Vijayaganth


Former DMK mla joins Vijaykanth’s party

எங்கள் கட்சி திராவிட கட்சி: விஜய்காந்த்

நான் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்ததில்லை, சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைத்ததில்லை, கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததில்லை. இவையெல்லாம் என்னைத் தேடி வந்தவை

என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஏஜி.சம்பத் தலைமையில் மாவட்ட பாமக முன்னாள் தலைவர் குரு ஜெயக்குமார், மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கடசிகளை சேர்ந்த 1,000 பேர் தேமுதிகவில் இணைந்தனர்.

புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய விஜயகாந்த் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி நம்மை திராவிட கட்சியில்லை என்று சொல்லியிருக்கிறார். நாம் வளர்ந்து வரும் கட்சி. நம்மை அவர் விமர்சனம் செய்திருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அந்த அளவுக்கு நாம் வளர்ந்திருகிறோம்.

இது 3வது தலைமுறை. நாம் திராவிட கட்சியா, இல்லையா என்பதை மக்கள் உணர்த்துவார்கள். நாம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இல்லை.

திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு கன்னடம் உள்பட 7 மொழி பேசுபவர்கள் சேர்ந்தது. இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் தான். நம்மைப் பார்த்து இப்படி ஒரு கருத்தை அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மீது நான் ஒரு மரியாதை வைத்திருக்கிறேன்.

தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி தவிர மற்ற அனைத்துமே தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது தான். இதில் ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் என்ன இருக்கிறது என்று கேட்டேன்.

இதை சொன்னதற்காகவும், ஏஜி சம்பத் நமது கட்சியில் இணையப் போவதை உளவுப்பிரிவு போலீஸ் மூலம் தெரிந்து கொண்டும் தான் என்னை விமர்சித்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வரியில்லாத பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். வரி எப்படி போடாமல் இருக்க முடியம். பெட்ரோல், டீசல் விலை உயராது என்று சொல்லிக் கொண்டே உயர்த்துவது இல்லையா, அதுபோல வரியையும் நிச்சயம் போடுவார்கள்.

சட்டசபை தேர்தலில் 8.5 சதவீதம் ஒட்டு பெற்றிருக்கிறோம். அதனால் நம்மை வளர விட்டு விடாதீர்கள் என்று கூறி வருகிறார்கள். எல்லோரும் தனியாக நில்லுங்கள். உங்களது சக்தியை காட்டிவிட்டு கூட்டு வையுங்கள்.

என்னுடைய மண்டபத்தை இடிப்பதாக பயம் காட்டுகிறார்கள். தாராளமாக இடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். போனால் போகிறது, இன்னொரு முறை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் கட்சியை மட்டும் அழிக்க விடமாட்டேன்.

ஒரு குழியில் சிறுவன் விழுந்துவிட்டான், அவனை காப்பாற்ற 2 நாட்களாக போராடினார்கள் என்று அவனை மீட்டவர்களை பாராட்டுகிறார்களே. அந்த குழியை மூடாதவர்களை கைது செய்தார்களா?

நான் சினிமாவுக்கு வில்லனாகத்தான் வந்தேன். கதாநாயகனாக வருவேன் என்று நினைக்கவில்லை. சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைக்கவில்லை. நடிகர் சங்க கடனை அடைப்பேன் என்று நினைக்கவில்லை. கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. அதெல்லாம் என்னைத் தேடி வந்தது.

நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படும். நமது தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டில் அறிவித்ததே நமக்கு கிடைத்த வெற்றி தான். ஏன் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய கியாஸ் அடுப்பு பற்றி பட்ஜெட்டில் கூறவில்லை.

எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தான் மக்களுக்கு நேரடியாக நன்மைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்.

நாம் வளர்ந்து கொண்டே இருந்தால் தான் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் பயந்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றார் விஜய்காந்த்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.