Sivaji Statue Opening Vizha


சிவாஜி சிலைத் திறப்பு சன் தொலைக்காட்சியில் தொகுத்திருந்தார்கள். கவர்ந்த சில தருணங்கள்.

  • பங்குப் பெற்றோரின் பெரும்பாலானவர்களின் ஆடை வெள்ளை நிற சட்டை, வேட்டி. எங்கெங்கு காணினும் வெளுப்புதான்.
  • எல்லோரும் சோகமே உருவாய் குடிமுழுகிப் போனது போல் இருந்தார்கள். சாதனையாளரை கௌரவிக்கும் விழாவில் சந்தோஷமாகப் பட்டுப் புடைவையில் இருந்தவர் லதா ரஜினிகாந்த்.
  • சிவாஜியின் மனைவி கமலா மேடையேறாததற்கு பிரபு காரணம் சொன்னார். அண்ணன் இராம்குமார் முதல் வரிசையிலோ, அரங்கில் பேசாததற்கோ என்ன காரணம் என்று விளங்கவில்லை.
  • ‘சந்திரமுகி’யில் ஜோதிகா பேய் போல் கண்களை உருட்டுவதற்கு சிவாஜியின் நடிப்பு உதவியிருக்கிறது. பாரதியாக சிவாஜி கனவு காணும் ‘கை கொடுத்த தெய்வம்‘ படத்தின் ‘சிந்து நதியின் மிசை’ கை கொடுத்ததாக பி. வாசு சொல்லியிருக்கிறார். ஓவர் ஆக்சனுக்கு வஞ்சப் புகழ்ச்சி அணி.
  • பேச்சுக்களில் சாதாரணமாக கமல் தான் நிமிர்ந்து உட்கார வைப்பார். இன்று அது கேயெஸ் ரவிக்குமாருக்கு மட்டுமே சொந்தம். வெளிப்படையான எதார்த்தமான் பேச்சு. ‘படையப்பா’வில் ரிகர்சல் எடுக்கும்போது உரத்த உச்சரிப்பு அதிகமாகப் பட்டிருக்கிறது. நேரில் சொல்லவும் பயமாய் இருந்திருக்கிறது. டேக் எடுக்கப் போவதற்கு முன்

    ‘அண்ணே… ஒரு வாட்டி என் காதோடு வசனத்தை மட்டும் சொல்லிடுங்களேன்!’

    சொல்லி முடித்தவுடன்…

    ‘இதை விட அதிகமாய் ஒரு இன்ச் கூட வேணாங்க’

    என்று சொல்லி விட்டு, இடத்தை விட்டு ஓடி, கேமிராவிற்கு அருகில் சென்று ‘ஸ்டார்ட்’ சொல்லி மறைகிறார்.

    சிம்மக்குரலோனை இயக்குவது எவ்வளவு நகாசான வேலை என்பதையும், நடிப்பைக் கறக்கும் இயக்குநரின் சிரமத்தையும் அலாதியாய் சொன்னார்.

  • சிவாஜியிடம் இருந்து நேரந்தவறாமையையும், ‘இயக்குநர் சொல்வதை இம்மியளவும் மாறாமல் அப்படியே நடப்பதையும்’ கற்றுக் கொண்டதாக விஜய் பகிர்ந்தார்.
  • சிவாஜியின் வரலாற்றில் துவக்கமும் (பராசக்தி சக்சஸ்) கலைஞரால் தான்; சுபம் போட்டு முடிப்பதும் (மெரீனா சிலை) கலைஞரால் தான் என்றார் பாக்கியராஜ்.
  • தமிழன் ஒவ்வொருவரிடமும் நால்வரின், நாலு தமிழர்கள் மட்டுமே தாக்கமாக இருக்கும் என்றார் வைரமுத்து:

    1. கருணாநிதி;
    2. எம். ஜி. ஆர்.;
    3. சிவாஜி &
    4. கண்ணதாசன்.

    தனக்குப் பொருத்தமானதை ‘என் தாழ்மையான கருத்து’ என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை ‘உலகத்தின் கருத்து’ என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு.

  • கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா என்று பேசிய ஒவ்வொருவரும் ஐயப்பட வைத்தாலும், விஜயகாந்த் சிவாஜியைத் தவிர்த்து கருணாநிதி துதியோடுப் பேச்சை முடித்துக் கொண்டார்.
  • கருத்துக் கேட்ட பலரும் சிவாஜியின் பிடித்த படப்பட்டியல் கொடுத்தார்கள். இது எனக்கு டக்கென்று வந்த படங்களின் பெயர்கள்:

    * பலே பாண்டியா,
    * சபாஷ் மீனா,
    * தேவர் மகன்,
    * திருமலை ரகசியம்,
    * தூக்கு தூக்கி,
    * உத்தம புத்திரன்,
    * திருவிளையாடல்,
    * பராசக்தி,
    * திரும்பிப் பார்,
    * கப்பலோட்டிய தமிழன்,
    * விடுதலை

  • ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது. எழுதி வைத்துக் கொண்டு படிக்காமல், குட்டிக் கதை, சுவாரசியமான மேற்கோள்கள் என்று இயல்பாய், ஆளுமையோடு வெளிவந்தது. மேடையிலேயே விஜயகாந்த்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி, தன்னுடைய அரசியல் திறமையையும் ஓரளவு காட்டிக் கொண்டார். ‘அரசியல் ஒரு குதிரை; சினிமா ஒரு குதிரை’ என்று ஆரம்பித்து குதிரைப் பந்தயமாக வருணித்து அலுக்காதமாதிரி பேசினார்.
  • பாண்டிச்சேரியில் பெப்ரவரி 12 சிவாஜியின் சிலையைத் திறந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை.

    | |

  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.