இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு சோதனைச் சாவடி தேவைப்பட்டது. ஸ்பெயினில் நடந்த உரிமைப் போராட்டத்தில் ஜெர்மனியின் புஜபலத்தைக் காட்டி சோதித்து, இரண்டாம் உலகப் போருக்கு கால்கோளிட்டார். ஈரானுக்கும் தன்னுடைய இராணுவ மிடுக்கை பரிசோதிக்க ஆசை. ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் அப்பாவிகளைக் கொன்று தளவாடங்களை production environment-இல் விட்டுப் பார்த்திருக்கிறார்.
ஈரானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எதுவும் ஜி-8 மாநாட்டில் எடுக்கக் கூடாது; என்ன வழி என்று யோசித்தது ஈரான். அடியாள் ஹெசபொல்லாவை அழைத்து கண்ணீர்ப் புகை குண்டுகள் போல் இஸ்ரேலிய படைவீரர்களைக் கைப்பிடித்தது.
இஸ்ரேலில் இராணுவத்தில் சேருவது இந்தியாவைப் போல் விருப்பப் பாடம் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் போல் கட்டாயப் பாடம். வயதுக்கு வந்தவுடன் வாக்களிக்கிறார்களோ, இல்லையோ, இராணுவத்தில் பணிபுரிய வேண்டும். ஏழை உயிர்தானே… போனால் போகிறது என்று பொதுஜனம் விட்டேத்தியாய் விடாமல், செய்தித்தாள் படித்து விட்டு எல்லையில் இருவர் இறப்பு என்று புறந்தள்ளாமல், ‘நம்மில் ஒருவர்’ என்று ஒவ்வொரு இஸ்ரேலியும், நமக்கும் இந்த மாதிரி நிலை வந்திருக்கலாமே (வரலாமே) என்று எண்ணும் சமூகம்.
இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா குரல் கொடுக்கும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. லெபனானும், பாலஸ்தீனமும் தேர்தல் நடத்தும் சுதந்திர நாடுகளாக இருப்பது தான் அமெரிக்காவையும் அதன் தலைவர் புஷ்ஷின் ‘எங்கெங்கு காணினும் சுதந்திர நாடடா’ கொள்கையையும் அசைத்துப் பார்க்கும் என்றும் நம்புகிறது. ஈராக் போருக்கு கூறப்படும் காரணங்கள் இந்த இரட்டை நிலையினால் உலக அரங்கில் தவிடு பொடியாகியுள்ளது.
2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விலக்கியவுடன், ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட முடியவில்லை. சிரியாவின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்தது. லெபனானின் பிரதம மந்திரியே ஹெசபொல்லாவை ‘எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா, தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.
கோலன் ஹைட்ஸின் ஷாபா ஃபார்ம்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் தேர்தலில் வென்று அரியணை ஏறிய பிறகும், ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. இரகசியமாக பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாய், இஸ்ரேலுக்குள் கன்னம் போடுவது, குண்டு வெடிப்பது என்று ஹமாசும்; பாலஸ்தீனத்துக்கு நியாயமாக சேரவேண்டிய அவர்களின் வரிப்பணத்தைக் கொடுக்காமல் அடாவடி செய்வது, அன்றாடம் வேலை செய்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தினக்கூலியில் கைவைப்பது என்று இஸ்ரேலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.
இது நவீன போர்களின் காலம். ஈராக் போரில் சதாம் தலைமை இல்லாவிட்டாலும், அந்த நாட்டு இராணுவமே பொதுமக்களை பாதுகாக்க நினைத்தாலும், கெரில்லா போரில், அமெரிக்காத் தோற்றுப் போய் பல ஆண்டுகள் கடந்து விட்டது. (ஈராக் – அமெரிக்க போர் குறித்து இந்த வருட ஆரம்பத்தில் எழுதிய ரிப்போர்ட்)
‘கடவுளின் கட்சி‘க்கு கிட்டத்தட்ட 6,000 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை அழிப்பது இஸ்ரேலுக்குப் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், தப்பித்துப் போவது ஒரு சிலரேயானாலும், ஈராக்கை போல் புதிய போராளிகளை நியமிப்பது, குடும்பத்தை இழந்தவர்களுக்கு தூபம் போட்டு தீவிரவாதி ஆக்குவது, கொரில்லா யுத்தத்தைத் முன்னெடுத்து செல்வது போன்றவற்றை சளைக்காமல் தொடர்வார்கள்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தொலைதூரப் பார்வை இருக்கிறதா, வெற்றி பெறுமா என்பதைத்தான் – ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் இரானும், நிரந்த்ரப் பகை பாராட்டும் சிரியாவும், விஷயமே தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கும் ஹிசபொல்லாவும் ஆராய வேண்டும். அமெரிக்காவைத் தாக்காத வரைக்கும் உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இரானிய் பிரதமருக்கும் இதே எண்ணம்தான். ஈரானை நேரடியாக பிறர் தாக்க முடியுமா, எப்படி தற்காத்துக் கொள்ள முடியும் என்று சோதனைச்சாலையாக லெபனானைப் பயன்படுத்துகிறார்.
ஹெசபொல்லா என்னும் அண்டை வீட்டார் சொற்படி நடக்கும் முரட்டு குழந்தையைக் கட்டுப் படுத்த முடியாததால், லெபனான் தன்னுடைய வீட்டையே பாழாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கிலோபைட் குவித்துக் கொண்டே போகலாம். நான் ஒத்துப் போகும், லாஜிக் உடைய எண்ணப் பதிவுகளை படிக்க கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சாலச் சிறந்தது:

இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான பிரச்சினை குறித்து கீழ்க்கண்ட பதிவுகள் படிக்க கிடைத்தது:
1. தமிழ் சசி
4. வஜ்ரா ஷங்கர்
இஸ்ரேலும் அதன் சுற்றுப்புறமும் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவுகள்:
1. தி சிரியன் ப்ரைட் (திசைகள்)
2. யாஸர் அராஃபத் (தமிழோவியம்)
3. சண்டக்கோழி அமெரிக்கா :: Why We Fight (தமிழோவியம்)
தொடர்பான தகவல்கள்:
கார்டியன் நாளிதழ் :: Interactive guides
இஸ்ரேலின் சரித்திரம் | ஜூன் 2006: காஸா நுழைவு | அஹ்மத் யாஸின் | ஜெனின் போர் | இஸ்ரேலும் லெபனானும் | ஹெசபொல்லா – லெபனான் : தற்கால நிகழ்வுகள்
சமீபத்திய நிகழ்வுகள் – வரிசைப்படி
1999 | 2000 | 2001 (1) | 2001 (2) | 2002 (1) | 2002 (2) | 2002 (3) | 2002 (4), 2003 | 2004 | 2005











பிங்குபாக்: கருத்து சுதந்திரமா - லிட்டருக்கு எத்தன ரூபா?? « Snap Judgment