Ullatchi Therthalum, Avasara Sattamum!


Aaraamthinai.com

உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்! :: கேடிஸ்ரீ

மறுபடியும் ஒரு தேர்தலை சந்திக்கவிருக்கிறது தமிழகம். வரும் அக்டோபர் மாதத்துடன் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி தமிழக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை அக்டோபர் மாதத்திற்குள் முடித்துவிடுவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலை மனதில் கொண்டு தமிழக முக்கியக் கட்சிகள், பல்வேறு மட்டங்களில் அதிரடியான மாற்றங்களை தங்கள் கட்சிக்குள் செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றும் விதத்தில் தங்களுக்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது.

முன்னதாக முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளையும், செயலர்களையும் அதிரடியாக மாற்றியமைத்து வர எண்ணியது. இதன் விளைவாக அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது செய்து வருகிறார். ஒருபுறம் இதுவரை ஒதுங்கியிருந்த பலருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி அதிர்ச்சி அளித்திருக்கிறார் என்றால் மறுபுறம் முந்தைய அ.தி.மு.க அரசின் அமைச்சராக இருந்த பாண்டுரங்கன், தென் செனனை மாவட்டத் தலைவராக இருந்த ஆதிராஜாராம் போன்றவர்களை அப்பதவியிலிருந்து நீக்கி அதிர்ச்சி அளித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு முக்கிய பொறுப்பு அளித்து அவரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதிரடி நடவடிக்கைகளும், களையெடுப்பும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கணிசமான அளவிற்கு இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியப் பிறகு நடைபெறவிருக்கும் முதல் உள்ளாட்சி தேர்தல் இது. இத்தேர்தலில் எப்படியாவது அதிகளவில் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார். சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்கால் நகராட்சியை கைப்பற்றியது அக்கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தங்கள் கூட்டணியை அப்படியே தொடர முடிவு செய்துள்ளன. ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை போன்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அ.திமு.கவுடனான தங்களது கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலாவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல்

மேயர் அல்லது துணை மேயர்களின் செயல்பாடுகள் திருப்தியில்லாதபட்சத்தில் அவர்கள் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கும் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.

இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டம் மூலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மேயரோ அல்லது நகராட்சித் தலைவரோ வீற்றிருக்கும் மன்றத்தில் அவரது கட்சியை சேராத அதிக மன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தால் அந்த மேயரோ அல்லது தலைவரோ அந்த கூட்டத்தை சுமூகமாக நடத்தி செல்வதில் மிகவும் சிரமத்திற்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.மேலும் அங்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கிற போது இந்த அவசர சட்டம் வரவேற்கபடுகிற ஒன்று.

ஆனால் கட்சி சார்பில்லாமல் அந்தந்த ஊர்களில் – அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் நேரிடையாக தலைவராக இனி வருவதை இந்த வகையான சட்டம் தடுக்கும் என்பது இதில் உள்ள பாதகமான அம்சம் எனலாம். இதனால் எல்லா இடங்களிலும் கட்சிகளின் ஆதிக்கம் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தில் 500க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை பஞ்சாயத்துக்கள் 561ஐ தற்போது பேரூராட்சிகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை பாட்டாளிகட்சி தலைவர் ராமராஸ் வரவேற்றாலும், ஒரு கட்சியின் சார்பில் தேந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து விடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க அப்படி வாக்களிக்கும் மன்ற உறுப்பினரின் பதவியைப் பறிக்க வகை செய்ய வேண்டும் என்றும் யோசனை ஒன்றை அரசுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிமாற தடைச் சட்டம் உள்ளதுபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி மாறுவதைத் தடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்றும், மற்றும் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இல்லாமல் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை அ.தி.மு.க பொதுசெயலரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா கடுமையாக விமரிசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவசர அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான காரணம் என்ள என்றும், சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பே இச்சட்டம் கொண்டு வருவதன் நோக்கம் என்ன? என்றும் வினா எழுப்பிய அவர், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டு வரவில்ல என்று ஆளும் தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் உருவாக்கப்படவில்லை என்றும் குறை கூறியுள்ளார்.

எது எப்படியிருந்தாலும் இந்த அவசர சட்டத்தின் மூலம் பலன் அடையக்கூடிய கட்சிகள் தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான் என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த இரு கட்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் நிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில்தான் போட்டியிட முடியும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.