Strategy for upliftment vs Possible execution plan


Dinamani.com – Editorial Page

எளியோருக்காகத் திட்டமிடுதல் :: ஆர். கண்ணன்
வளரும் நாடுகளைப் பொறுத்த அளவில் ஏழை மக்களை எவ்வாறு அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பது என்பதும் அதற்கான வழிமுறைகளை வகுப்பதும் 21-ம் நூற்றாண்டிலும் தொடரும் மிகப்பெரிய சவால்களாக அமைந்துள்ளன. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த அளவில் எழுத்தறிவின்மை, வேலையின்மை, வறுமை, சரிவிகித உணவின்மை, ஆரோக்கிய வாழ்வின்மை, வாழ்விடமின்மை போன்றவையே மக்களை ஏழ்மை, அதிகாரமின்மை, வளமின்மை எனும் நிலைக்கு உட்படுத்துகின்றன.

உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள் (வளமான நாடுகளின் அரசாங்கங்கள் உட்பட) சந்திக்கின்ற பிரச்சினைகள் குறித்து உலக வங்கியைச் சேர்ந்த பெனிலோப் புரூக் மற்றும் வார்ரிக் ஸ்மித் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமானவையாகும்.

உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், நீர், சுகாதார வசதி, தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனும் அவர்களின் கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உலகில் ஏறத்தாழ 2 பில்லியன் (200 கோடி) மக்கள் சுற்றுப்புறச் சுகாதார வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையிலுள்ள மக்கள் மின்சார வசதியின்றி இருக்கின்றனர். ஒரு பில்லியன் மக்கள் (100 கோடி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றியும் உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தொலைபேசியைப் பயன்படுத்தாதவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலைக்கு இருவகைக் காரணங்கள் உள்ளன. உலகின் ஒருசில இடங்களில் இந்த வசதிகள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்விடங்களிலோ அல்லது அருகாமையிலோ இல்லாதிருத்தல்; வேறு சில இடங்களில் இந்த வசதிகள் இருப்பினும் ஏழை மக்களிடம் இவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதி இல்லாதிருத்தல் என இந்த இரண்டையும் முக்கியக் காரணங்களாகத் தெரிவிக்கும், இக்கட்டுரையாளர்கள், திட்டமிடுதலில் உள்ள குறைபாடுகளையும் சுட்டுகிறார்கள்.

இறுதியாக கோட்பாடு எனும் தளத்திலிருந்து நடைமுறைச் சாத்தியம் எனும் நிலைக்கு வருவதற்கென ஐந்து உபாயங்களைக் கூறியுள்ளனர். அவை:

1. திட்டமிடுதலில் பங்கேற்பாளர்கள் (Stakeholders) குழுக்களை அமைத்தல் மற்றும் அவர்களின் ஆலோசனை பெறுதல்.

2. பயனாளிகள், பங்கேற்பாளர்கள் இவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல்.

3. உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்வடிவு மற்றும் அவற்றின் வழிமுறைகள் இவற்றில் தேவைக்கேற்ப நுணுக்கமான மாறுதல்களைச் செய்தல்.

4. தனியார்மயமாகும் தருணங்களில் மறுசீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதலில் கவனம் செலுத்துதல்.

ஏறத்தாழ ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமைப்பு ஆகியவற்றின் கருத்துகளும்கூட மேற்கூறப்பட்ட கருத்துகளை ஒட்டியே அமைந்துள்ளன. நகர்ப்புறச் சேவைகள் அனைத்தையும் அரசு நிறுவனங்கள் மட்டுமோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாத்திரமோ ஆற்றிட இயலாது என்று உணர்ந்த உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள் இப்போது நிறுவனச் சீர்திருத்தங்களில் (Institutional reforms) தனியார் அமைப்புகளைப் பங்கேற்கும்படிச் செய்துள்ளன என்கின்றது ஆசிய வங்கியின் அறிக்கை. சுலப் இண்டர்நேஷனல் எனும் இந்தியாவைச் சேர்ந்த தனியார் சேவை அமைப்பு, சூழல் பாதுகாப்பில் அடைந்த வெற்றியை இவ்வறிக்கை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. அரசாங்கங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இவை மட்டுமே, ஏழ்மையை அகற்றிட இயலாது என்று சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமைப்பின் அறிக்கையும் கூறுகிறது. ஏழை மக்களின் வாழ்விடங்களில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அந்த மக்களின் திறமைகளையும் பயன்படுத்திச் செயல்படும்போது ஏழ்மையிலிருந்து மக்களை மீட்க இயலும் என்கிறது இந்த அறிக்கை.

அனைத்திற்கும் மேலாக அரசாங்கங்களின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாதிருப்பதற்குரிய காரணங்களை ஆராய்ந்தால், முக்கியமான காரணமாக அமைவது மக்களைத் தகவல் சென்றடையாதிருப்பதேயாகும். விந்தையான ஒரு செய்தி என்னவென்றால் தகவல்புரட்சி நடைபெற்றுவிட்டதாகக் கூறப்படும் இந்த யுகத்தில் தகவல் இடைவெளி (Information gap) குறைக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் மக்களிடையே கலந்துரையாடல் இடைவெளி (interaction gap) அதிகரித்துவிட்டது. இதனால்தானோ என்னவோ நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும் கூட முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வர முடியாமல் போகிறது.

இன்றைய யுகத்தில் பணம் படைத்தவர்கள், ஏழைகள் என்ற பாகுபாட்டைக் காட்டிலும் தகவல் பெறுபவர்கள், தகவல் பெறாதவர்கள் (அல்லது பெற இயலாதவர்கள்) ஆகியோருக்கிடையே உள்ள இடைவெளிதான் சமூகப் பொருளாதார மேம்பாட்டை எதிர்காலத்தில் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக அமையக்கூடும்.

(கட்டுரையாளர்: இயக்குநர், யுஜிசி கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21).

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.