1. வில்லங்கத்தில் சிக்காத விஜயகாந்த் அறிவிப்புகள் : Dinamani – Assembly Polls 2006 – கே.எம். சந்திரசேகரன்
திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிவிப்புகள் தொடர்பாக பரஸ்பரம் மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு கட்சிகளையும்விட அதிகமான மானியச் சுமையை ஏற்படுத்தும் அறிவிப்புகளைக் கொண்டிருக்கிறது நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழக தேர்தல் அறிக்கை. இருந்தாலும் அது பெரிய விவாதப் பொருளாகவில்லை.
ஏழைகளின் வீடுகளுக்கு சீமைப் பசு தருவதாகச் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த். சீமைப் பசு கிடைத்துவிட்டால், எந்தக் குடும்பமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்காது என்பது நிச்சயம். இருந்தாலும், இது உண்மையிலேயே சாத்தியமா என்று பொருளாதார நிபுணர்கள் கேட்கின்றனர். தினமும் 10 முதல் 15 லிட்டர் வரை பால் கறக்கும் சீமைப் பசு வாங்க வேண்டுமானால், குறைந்தது ரூ.12,000 செலவாகும். இதை குறைந்த விலையில் மொத்தமாக வாங்கவோ, இறக்குமதி செய்யவோ முடியாது.
அதேபோல ஏழைக் குடும்பங்களின் குடும்பத் தலைவியின் பெயரில் தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் மாதந்தோறும் ரூ.500 போடப்படும் என்கிறார். இது ஆண்டுக்கு ரூ.6,000 ஆகும்.
தமிழகத்தில் மொத்தம் 1.90 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். கிராமங்களில் மட்டும் 1.25 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவர்கள் எல்லோருக்கும் சீமைப் பசு, மாத உதவித் தொகை கிடைக்குமா? என்பது பொருளாதார நிபுணர்கள் எழுப்பும் சந்தேகம்.
மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு மாதம் ரூ.500 வீதம் 3 ஆண்டுகளுக்குத் தரப்படும் என்றும் ஓர் அறிவிப்பு உள்ளது. இப்போது ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அரசே ஊட்டச்சத்து மையங்கள் நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு 5 வயதாகும் வரையில் அங்கு ஊட்டச்சத்து மாவு மற்றும் உணவு வகைகள் கிடைக்கிறது. ஒரு பெண் கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்தே, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, பெண்ணுக்கும் ஊட்டச்சத்து மாவு உள்ளிட்டவை தரப்படுகின்றன.
ஆட்சி அமைக்கப் போவது யார் என்கிற போட்டியில் விஜயகாந்த் இல்லை என்று கருதி இரு முன்னணிக் கூட்டணிகளும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லையா என்று தெரியவில்லை.
2. தென் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்துமா பார்வர்டு பிளாக்? : Dinamani – Assembly Polls 2006 – ப. இசக்கி
தென் மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் இக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இக் கட்சி போட்டியிடும் 75 தொகுதிகளில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகள் தனித் தொகுதிகளே.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள்தான் பெரும்பான்மையானவை. எஞ்சிய 9 தொகுதிகளில் 2-வது இடம் முதல் 4-வது இடம் வரை அச்சமுதாய வாக்குகள்தான் பெரும்பான்மையாக உள்ளன. எனவே, இந்த தொகுதிகளில் எல்லாம், பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர்கள் பெறும் வாக்குகளில் 75 சதவீதம் அதிமுக வாக்குகள்தான். அந்த இழப்பை அதிமுகவினர் எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி.
3. புதுக்கோட்டை: 54 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் சார்பில் ஒரே பெண் வேட்பாளர் : Dinamani – Assembly Polls 2006 – பி. செந்தில்வேலன்
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் தற்போது அமைந்துள்ள பேரவைத் தொகுதிகளில் கடந்த 54 ஆண்டுகளில் போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளர் அதிமுகவின் குளத்தூர் (தனி) தொகுதி எம்எல்ஏ கருப்பாயி (என்ற) ரோஹினி மட்டுமே.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் மற்றும் குளத்தூர்(தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.
4. ஜன்னல்: எம்ஜிஆர் – சிவாஜி யுகம் : Dinamani.com – Editorial Page – பா.ஜெகதீசன்
5. பணம் சேர்க்கவா அரசியல்? : Dinamani.com – Editorial Page – எஸ். ராமசாமி
இலவச பரபரப்புக்கு இடையே மற்றொரு முக்கியமான விஷயம் அதிகம் பேசப்படாமல் அமுங்கிப் போய்விட்டது. அதுதான் வேட்பாளர்கள் வெளியிட்ட சொத்து மதிப்பு. கோடிகள் ஏதோ தெருக்கோடிகளில் கிடைப்பது போல சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிக்குக் கூட கோடிக்கணக்கில் சொத்து. இதெல்லாம் அவர்கள் பெயரில் உள்ள சொத்துகள் மட்டும். இது தவிர உறவினர்கள், சொந்தங்கள், பினாமிகள் பெயரில் சேர்க்கப்பட்ட சொத்துகள் தனி.
அரசியலில் நுழையும்போது ஒருவரின் சொத்து மதிப்பு என்ன? தற்போது அவரது சொத்து என்ன என்பதை கணக்குப் பார்த்து, இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்பதை விசாரிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்கை அளவில் தடுமாறி இருக்கலாம். அவர்களது இலக்கில், அவர்கள் பயணிக்கும் பாதையில் தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசியலை பணம் ஈட்டும் தொழிலாக நினைக்கவில்லை.
எந்த சொத்து வாங்கினாலும் கட்சிக்குக் கணக்குக் காட்ட வேண்டும். பதில் சொல்லவேண்டும்.










