கல்கி தலையங்கம் – தேர்தல் ஷோ!
தி.மு.கவில் சீட் தரவில்லையா… அ.தி.மு.கவுக்குப் போய்விடு; அ.தி.மு.கவில் சீட் தரவில்லையா…
தி.மு.கவுக்கு ஓடு! இதுதான் இன்று தேர்தல் டிரெண்ட்! கோபித்துக் கொண்டு போய்ச் சேர்கிற கட்சியில் டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன.. பேப்பரில் போட்டோவுடன் செய்தி வெளியாக, டிக்கெட் மறுத்த கட்சியைப் பழி வாங்கியாகிவிட்டதல்லவா! இதைவிட வீர தீர பராக்கிரமம் நிறைந்த அரசியல் சேவை வேறென்ன இருக்க முடியும்!
தி.மு.கவுக்குள் பாக்யராஜ், சேடப்பட்டி என்று புதுமுகங்கள்புக, அங்கிருந்து வெளியேறிய நிர்மலா சுரேஷ், திருவாரூர் எம்.எல்.ஏ. அசோகன் போன்றோர் அம்மா புகழ்பாட அ.தி.மு.கவுக்குப் போகிறார்கள். “நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?” என்று பத்தாம் பசலித்தனமாக யோசித்துக் கொண்டிராமல், “இந்தக் கட்சி என்ன செய்தது எனக்கு?” என்று சிந்தித்துத் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் இவர்களல்லவா முற்போக்குவாதிகள்! தமது ரசிகர் மன்றத்தினருக்கு வேட்பாளர் வாய்ப்புத் தரப் படாததால் சரத்குமார் தி.மு.கவை விட்டு வெளியேறுகிறார். அக்கட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று இப்போது புலம்புபவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை ஏற்றபோது அந்த உண்மை தெரிந்திருக்கவில்லை என்றால், அதற்கு அவரா பொறுப்பாக முடியும்? அவரை எம்.பியாக நியமித்த தலைமைதானே பொறுப்பு!
இப்படி ஆயா ராம்கள் கயா ராம்களாக தமிழக அரசியல் பிரமுகர்கள் அணி மாறி – கட்சி மாறி நடைபோடும் கேளிக்கையைப் பார்த்துவிட்டு சினிமா துறையினர் சும்மா இருப்பார்களா? வெள்ளித் திரையிலிருந்து கட்சிப் பிரசாரத்துக்குப் பளபளப்பைச் சுமந்து வருகிற நடிகைகளின் அணிவகுப்பு அட்ராக்ஷன் கண்ணைப் பறிக்கிறது! சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் இன்றிச் சுயமாக வசனம் பேசும் ஆற்றல் இவர்களுக்கு இல்லாவிட்டால் என்ன? அரசியல் மேடைகளில் “இவர்கல் கொட்டி முளக்கி நமது பொன்னான வாக்குகலை அல்லிக்கொல்லாமலா” போய்விடுவார்கள்! பிரசார பீரங்கிகளும் பரிவார தேவதைகளும் கலக்குகிற கலக்கில் நாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடப் போகிறதே என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மெகா சீரியல் ரேஞ்சில் மூளைச் சலவை செய்யும் தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இலவச கலர் டீ.வி என்கிற இமாலய புரட்சியைத் தாங்கி வரும் தி.மு.க. அறிக்கை, ஒரு மெகா பட்ஜெட் கனவு சீனைக் காட்சிப்படுத்த… அ.தி.மு.க. அறிக்கைகள் மத்திய அமைச்சர்களையும் தேர்தல் கமிஷனையும் எதிர்த்துச் சீறிப் பாயும் ஸ்டண்ட் சீனாகத் திகழ, ம.தி.மு.க. அறிக்கை மீனுக்குத் தலையாகவும் பாம்புக்கு வாலாகவும் காமெடி டிராக் காட்ட, தே.மு.தி.க. அறிக்கை வீடு தேடி வரும் ரேஷன் சென்டிமெண்ட் காட்டி இலவச அரிசி மழை பொழிய, பா.ஜ.க. அறிக்கை கிளைமேக்ஸாகச் சங்குபிடித்து ஊதுகிறது கள்ளுக்கடைகளைத் திறக்கப்போவதாக!
இப்படி எல்லா கட்சிகளும் தலைவர்களும் ஷோ காட்டிக் கொண்டிருக்க, தேர்தல் களம் ரஜினி படத்தைத் தூக்கிச் சாப்பிடும் கேளிக்கை அம்சங்களுடன் மின்னிக் கொண்டிருக்கிறது.
“அது சரி, தமிழ்நாடு முன்னேற வேண்டாமா?”
என்று சீரியஸாகக் கேட்கும் அப்பாவிகளுக்கு பதில் இருக்கிறது: யார் ஆட்சிக்கு வந்தாலும் அள்ளிவிடப் போகும் இலவசங்களுக்குத் தமிழக ஏழை – பாழைகள்தானே உழைத்துக் களைத்து கூடுதல் வரி செலுத்த வேண்டும். உழைத்த களைப்பில் தாங்கள் ஏழைகள் என்பதுகூட அவர்களுக்கு மறந்துபோய்விடாதா என்ன?
அந்த ஏழைகள் பரம ஏழைகளாகவே தொடர, தமிழக அரசியல்வாதிகளும் அவர்களுக்குக் கறுப்புப் பணம் அருளும் தமிழக தொழில் – வர்த்தக முதலைகளும் முன்னேறத்தானே போகிறார்கள்!










