சரத்குமாரும் ராதிகாவும் அ.தி.மு.க.வில்


எம்.பி.பதவி ராஜினாமா: ஜெயலலிதாவுடன் சரத்குமார்- ராதிகா `திடீர்’ சந்திப்பு: அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

டெல்லி மேல்-சபை எம்.பி.யும், நடிகருமான சரத்குமார் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் பின்பு சரத்குமார் கட்சியில் ஓரம் கட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. அவரது ரசிகர்களும் தங்களுக்கு கட்சியில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் சரத்குமார் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். ரசிகர் மன்றத்தினர் எடுத்த முடிவு தி.மு.க.வினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு சரத்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சரத்குமார் திடீரென ராஜினாமா செய்தார்.

இதுபற்றி அவர் கருணாநிதிக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், `கட்சியில் தங்களை சார்ந்த சிலரே எங்களை அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகாவுக்காகவும் சில காலம் தாங்கி கொண்டேன்.

தங்களது இயக்கத்தில் தற்போது வாய் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள். எனவே நான் இந்த இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சரத்குமாரின் முடிவுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தென்மாவட்டங்களில் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்தினர். மேலும் தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்ட சரத்குமார் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இன்னும் சிலர் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.

இதனால் சரத்குமார் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியது.

இந்த நிலையில் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் திடீரென சிங்கப்பூர் சென்றனர். அங்கு ராதிகா நடத்தி வந்த ராடன் டி.வி. அலுவலக தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் இன்று காலை சென்னை திரும்பினார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதாக அவரது ரசிகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தென்மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கார், வேன்களில் இன்று காலையிலேயே மதுரை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.

அவர்கள் `சுப்ரீம் ஸ்டார் வாழ்க.. அண்ணன் நாட்டாமை வாழ்க…’ என்று வாழ்த்து கோஷம் எழுப்பியபடி விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்தனர்.

காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் விமானம் வந்தது. அது மதுரை மண்ணை தொட்டதும் ரசிகர்களின் வாழ்த்து கோஷம் விண்ணை எட்டியது. அப்போது சரத்குமாரும், ராதிகாவும் விமானத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை ரசிகர்கள் தயாராக இருந்த காரில் ஏற்றி மதுரை சங்கம் ஓட்டலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சங்கம் ஓட்டலுக்கு வந்ததும் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. அதன் பின்பு சரத்குமாரும், ராதிகாவும் `பச்சை நிற உடை’ அணிந்தபடி வெளியே வந்தனர்.

அப்போது ஓட்டலுக்குள் இருந்த நிருபர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ரசிகர் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும், அ.தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா? என்றும் கேட்டனர்.

அதற்கு சரத்குமார், `தேனியில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை சந்திக்க செல்கிறேன். சந்திப்பு முடிந்த பின்பு உங்களை சந்திப்பேன்’ என்று கூறி விட்டு விறுவிறு வென வெளியே வந்தார். அவருடன் ராதிகாவும் சென்றார்.

இருவரும் அங்கிருந்து ஒரு தனி காரில் தேனி நோக்கி புறப்பட்டனர். காரை சரத்குமாரே ஓட்டி சென்றார். அவரது கார் வெளியே சென்றதும் ரசிகர்களும் தாங்கள் வந்த வேன், கார்களில் ஏறி அவரை பின் தொடர்ந்தபடி சென்றனர்.

1.20 மணிக்கு அவர்கள்ப தேனி சென்றடைந்தனர். தேனி என்.ஆர்.டி. நகரில் தங்கி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்தனர். அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சரத்குமாரும், ராதிகாவும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். பிறகு மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே டெல்லி மேல்சபை எம்.பி. பதவியை சரத்குமார் ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்தார்.

எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் சரத்குமார் அதை கடிதம் வாயிலாக கருணாநிதிக்கு தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

6 responses to “சரத்குமாரும் ராதிகாவும் அ.தி.மு.க.வில்

  1. ஸ்ஸ்ஸ்ஸ்… யப்பா இப்பவே கண்ணகட்டுதே, இன்னும் 22 நாள் இருக்கே, என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ. ஆண்டவா எல்லா வியாபாரத்தையும் காப்பாத்துப்பா.

  2. “ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே
    என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது”
    :-((((((((((((((((((((((((((((

  3. Unknown's avatar லக்கிலுக்

    20 கோடி பின்னணியில் இருக்கிறதாமே? ஏற்கனவே 40 கோடியாரை நாடு முழுவதும் நாக்கை பிடுங்கிக் கொள்கிறார் போல அவர் தொண்டர்கள் கேள்வி கேட்கின்றனர்…. புதியதாக இவரா?

  4. ராதிகாவை சரத் மணந்த போதே நம்ப முடியாமல் இருந்தது.

    அப்பா என பாசம் காட்டியவரையே ராதிகா மறந்தாரெனில் அப்பா என்ன செய்திருப்பார் என யோசிப்பார்கள். ஆனால் அது எடுபடுமா?

    ராதிகா விருப்பமில்லாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அவர் முகத்தில் இருக்கும் சங்கடம் காட்டுகிறது.

    இப்போதைக்கு ராதிகா அமைதியாய் இருந்தால் அவருக்கு நல்லது.

    பின் விளைவுகள் தேர்தலுக்கு பிறகு தான் தெரிய வரும். சரத்குமார் ராதிகா தம்பதியனர் தேர்தல் முடிவு வரை பொறுமை காத்திருக்கலாம்.

    ஆனால் அவர்களுக்கான கடன் தொல்லையை ஜெ தீர்த்ததால் சென்றார்கள் என்றால் “அவர்கள் கவலை அவர்களுக்கு”. நாம் “அப்படியா?!” எனக் கேட்டுவிட்டு மறந்துவிட வேண்டியது தான்.

  5. அப்படி ஒன்றும் கடன் தொல்லை இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் சித்தியின் வருமானமே போதுமானதாக இருந்திருக்கும்.

    சன் டிவியில் பிரைம் ஸ்லாட்டுகளில் ராடனின் தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. போதாக் குறைக்கு டி ஆர் பி ரேட்டிங்குகளிலும் செல்வி போன்ற தொடர்கள் முன்னணி வகிப்பதாக நம்பப் படுகிறது.

    ஏற்கனவே சரத்தைக் கைப்பிடித்தது மூலம் அவரது கடன்களை சித்தி அடைத்ததாகக் கேள்விப் பட்டோம்.

  6. இதெல்லாம் ஒருமாதிரி வியாபாரமப்பான்னு சொல்றது சரிதான் போலருக்கு..

    ஊம்.. என்னமோ பண்ணுங்க..

    பாக்கறவனும், கேக்கறவனுந்தான் முட்டாள்ங்க போலருக்கு..

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.