Ambedkar Brithday – Dinamani


போற்றுதல் பொருட்டு… :: ஆதவன் தீட்சண்யா

வழக்கம்போலவே தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே சில விழாக்கள் நடைபெறும். மற்றபடி பொதுவாக சில தலைவர்கள் தாங்களாகவே நேரடியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பர். சிலர் தம் சார்பாக யாரையாவது அனுப்பி வைப்பர். ஒருவேளை இது தேர்தல் காலமாக இருப்பதால் மாலைகளின் தடிமன் மற்றும் எண்ணிக்கைகள் கூடும் வாய்ப்புள்ளது.

எப்படியாயினும், அம்பேத்கர் என்கிற உருவம் இன்று அரசியல் களத்தில் ஒதுக்கி வைக்கப்படுவதாயில்லை. அது பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கட்சிகளின் பதாகைகளில் மிகுந்த பெருந்தன்மையோடும் சகஜ மனோபாவத்தோடும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. அதாவது தன்னை சாதிய உணர்விலிருந்து விடுபட்டவராகக் காட்டிக்கொள்ள விரும்பும் தலித் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் அம்பேத்கர் என்கிற உருவம் அப்படியானதொரு அங்கீகார முத்திரையாக மாறியிருக்கிறது.

உண்மையில் அம்பேத்கர் தனக்கான அங்கீகாரத்திற்காக வாழ்நாளில் எதுவொன்றையும் செய்தாரில்லை. தனது உழைப்பையும் அறிவையும் தனக்குக் கிடைத்த அதிகாரங்களையும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் மனிதஜீவிகளுக்குள் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமே பயன்படுத்தினார். ஆனால் இன்று அவரைக் கொண்டாடுபவர்கள், அவர் பெயரால் இயங்கும் அமைப்புகள் பெரும்பாலானவற்றுக்கும் அவரது உருவம்தான் தேவைப்படுகிறதேயன்றி அவரது சிந்தனைகளல்ல.

பன்முகப்பட்ட ஆளுமையும் செயல்திறமும் கொண்டு விளங்கியவர். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் இருக்கின்ற சாதியத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

கல்வியும் தகுதியும் திறமையும் உள்ள யாரையும் இச்சமூகம் கொண்டாடும் என்னும் பசப்பலான வாதங்களின் பின்னே பதுங்கியிருக்கும் போலித்தனங்களையும் சாதி உளவியலையும் அவரது வாழ்க்கையே அம்பலப்படுத்துகிறது. அவரளவுக்கு படித்தவர்கள் நம் நாட்டில் இன்றளவும்கூட வேறெவரும் இல்லை. இருந்தும் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக, பெருமைமிக்க நமது முன்னோடிகளில் ஒருவராக, மாபெரும் கல்வியாளராக, வரலாற்றாய்வாளராக, சட்ட வல்லுநராக, ஒடுக்குமுறைக்கு எதிரான போராளியாகக் கொண்டாடுவதைத் தடுப்பது எது?

நகரமயமாக்கமும் கல்வியும் நவீனத் தொழில்நுட்பமும் சாதியத்தைப் பொருள்படுத்துவதில்லை என்றும் எனவே அம்பேத்கரின் குற்றச்சாட்டுகளும் வாதங்களும் இன்று பொருந்தாது என்றும்கூட வாதிக்கப்படுகிறது. ஒரு தலித் சத்துணவு ஊழியர் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்குத் தமது குழந்தைகளை அனுமதிக்காத கிராமத்தாருக்கும், வால்மீகி சாதிப் பெண்களை வீட்டு வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிற தில்லிக்காரருக்கும் வாய்த்திருப்பது ஒரே மனநிலைதான். அது தீட்டு குறித்த அச்சமும் தலித்துகள் குறித்த இழிவான பார்வையும்தான்.

உண்மையில் நகரத்திற்கென்று ஒரு சொந்த முகம் கிடையாது. சாதியத்தால் ஊரென்றும் சேரியென்றும் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வு என்பதை இயல்பானதொரு மதிப்பீடாகப் பயின்று வாழும் கிராமங்களிலிருந்து தனது சொந்த சாதி சார்ந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், மொழி, பெருமிதங்களோடு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டவர்களின் தொகுப்பாகத்தான் நமது நகரங்கள் உள்ளன.

தற்காலத்தில் ஒரு பஸ்ஸில் பயணிப்பது அல்லது திரையரங்கில் படம் பார்ப்பதைப் போலவே குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஒரு தொழிலகத்திலோ அலுவலகத்திலோ கூடுவதற்கும் சாதி ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படுவதில்லை. ஆனால் அவ்விடத்திலும் அவர் தன் சாதியைத் துறக்க வேண்டியவராயில்லை. அவ்விடத்தில் அவர் வெளிப்படுத்தும் அதிகபட்ச சமத்துவ குணம் என்னவென்றால் தனது சக ஊழியர்கள் இன்னின்ன சாதியராகத்தான் இருக்க வேண்டும் என்று கோராமல் இருப்பதுதான். அந்த அலுவல் நடக்கும் போதும் முடிந்தபின்னும் வீடு திரும்பிய நிலையிலும்கூட அவர் தனது சுயசாதி சார்ந்த எதுவொன்றையும் இழப்பதில்லை. வெளியிடத்தில் அவர் தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவராகத்தான் இருக்கிறாரேயொழிய சாதியைக் கைவிட்டவராக அல்ல. தவிரவும் சமூகம் என்பது குடும்பம் என்கிற சிற்றலகுகளின் தொகுப்புதானே? அந்தக் குடும்பங்கள் சாதியின் அடிப்படையில்தானே கட்டமைக்கப்படுகிறது… குடும்பத்திற்குள் – தனிமனித வாழ்வில் சாதியத்தின் இருப்பு நீடிக்கிறவரை சமூகத்திலும் சாதி நீடிக்கவே செய்யும்.

அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் ஆட்சியோ ஒரு தலைவனோ வாய்க்கும்போது வலுவான சட்டங்களின் மூலமாகக்கூட சிலவகையான ஒடுக்குமுறைகளை ஒழித்துவிட முடியும்.

சாதிரீதியான ஒடுக்குமுறைக்கும் மீறியதாய் பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது. சாதியைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற தலித்துக்கும் கூட இங்கே இழப்பதற்கு அவரது ஆணாதிக்க மனோபாவம் மிச்சமிருக்கிறது. சமத்துவமின்மையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துக் களம் கண்ட மகத்தான போராளியான அம்பேத்கரின் சிந்தனை வெளிச்சத்தில் சாதி கடந்த, ஆண் பெண் பேதம் கடந்த மனிதநிலைக்கு மேலெழும்புவதற்கு நாம் யோசிக்கலாம். ஒருவேளை அதுதான் அவர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்குமான அர்த்தம் பொதிந்த நமது போற்றுதலாயிருக்கக்கூடும்.

(அம்பேத்கரின் பிறந்தநாள்)


| |

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.