Petite Parties’ Ballot Symbol Allotments


சின்னத்தை எதிர்பார்க்கும் சிறியக் கட்சிகள்வீர.ஜீவா பிரபாகரன்

சின்னக் கட்சிகளின் நிலைதான் பரிதாபம். சின்னம் பெறுவதற்காகவே வேறு கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளன. அதிமுக, திமுக கூட்டணிகளில் இடம் கிடைக்காததால் பல சிறிய கட்சிகள் தனித் தனியாக அணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

பாஜக அணியில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி, டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, அம்பேத்கர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் சின்னம் இல்லாத சிறிய கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

திமுக கூட்டணியில், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு) கதிரவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த இல. சந்தானம், மூவேந்தர் முன்னேற்ற கழக திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகிய இருவரும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளிலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.


தேமுதிக சின்னம்?: தமிழகத்தில் இம்முறை அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடும் ஒரே கட்சியான நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சின்னம் என்ன என்று தெரியாததால் சின்னத்தைச் சொல்லாமல் வாக்கு கேட்கும் நிலையில் அக்கட்சியினர் உள்ளனர்.

“அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். மோதிரம், தீபம், புத்தகம் ஆகியவற்றை சின்னமாக அளிக்க கேட்டுள்ளோம். ஆனால், இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எனவே, சின்னம் கிடைத்த பின்னரே தீவிர பிரசாரத்தை தொடங்கும் நிலையில் உள்ளோம்” என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.


சிங்கத்தில் சிக்கல்? நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் அதற்கு “சிங்கம்’ சின்னம் வழங்க வேண்டும். ஆனால் அச்சின்னத்தை வழங்குவது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், அக்கட்சியினரும் பொதுச் சின்னம் பெறும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். 75 தொகுதிகளில் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.


யானை – அம்பு: டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இம்முறை 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் யானைச் சின்னத்தில் இக்கட்சி போட்டியிடுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலைக் கட்சி, நாடார் பேரவை உள்ளிட்டவை ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து “அம்பு” சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

ஒரே சின்னம் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் நிலை சின்னக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.