பாண்டிச்சேரி திமுக காங்கிரஸ் உடன்பாடு


நடக்க இருக்கும் பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் (ஐ) கட்சி திமுகவுடன் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதன்படி காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். மிச்சம் மூன்று தொகுதிகளில் பாமகவுக்கு இரண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்றும் தருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாமக இதற்கு உடன்படாது என்று தெரிகிறது. தனியாக நின்றாலே நான்கு தொகுதிகளில் ஜெயிக்கலாம் என்று பாமக கருதுவதாக தினமணி செய்தி கூறுகிறது.

கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த இடமும் இந்தக் கூட்டணியில் இல்லை. ஆனால் தனியாக அவர்கள் மூன்று-நான்கு இடங்களில் நிற்கப்போகிறார்கள். ஆகவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பாண்டிச்சேரியில் பிரிந்துவிடும் என்றே தோன்றுகிறது. இது நான் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதான். வெறும் 30 இடங்களை வைத்துக்கொண்டு ஏழு அல்லது எட்டு கட்சிகளுக்கு என்று பிரித்துத் தர முடியாது. அதிலும் காங்கிரஸ் (ஐ), திமுக இரண்டுமே முன்னர் பதவியில் இருந்தவர்கள். பாமக தம்மால் தனியாகவே பதவிக்கு வரமுடியும் என்று நினைத்தவர்கள்; நினைப்பு இன்னமும் இருக்கும்.

பாமக முன்னதாகவே திட்டமிட்டு பாண்டிச்சேரியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுடனும் தொகுதி உடன்பாடு செய்திருக்கலாம். பாமக 22 தொகுதிகள் என்றும் இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 4 தொகுதிகள் என்றும் கொடுத்து மும்முனைப் போட்டியாக நடந்திருக்கலாம். கேப்டன் வேறு தன் பங்குக்கு எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறார்! பாஜகவும் பிற தோழமைக் கட்சிகளும் நிற்கப்போகிறார்கள்.

பாமக கூடிய விரைவில் தனது நிலையை வெளிப்படுத்தும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.