எஸ். கலைவாணன் :: சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சென்று சந்திப்பதைப் போல, பா.ம.க.வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து, ராமதாஸ§க்கே சவால் விட்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். துடிப்புமிக்க ரசிகர் பட்டாளம் மற்றும் பண்ருட்டியாரின் பக்கபலத்தோடு, நகரப்பகுதியில் வசிக்கும் வன்னியர் அல்லாத பிற சாதியினர் ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக வாங்கி, பா.ம.க.வைப் பழிதீர்க்கும் கணக்கோடுதான் மிகத் துணிச்சலோடு இந்தத் தொகுதியை கேப்டன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
விருத்தாசலம் அவரது சொந்த ஊர் கூட கிடையாது. அவரது ஜாதியைச் சேர்ந்தவர்களோ, உறவினர்களோ கூட அங்கு இல்லை. அப்படியிருக்கும்போது, அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் கேப்டன், இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்பதுதான் எல்லோரது கேள்வியுமே!
வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இங்கு, பா.ம.க.வுக்குச் செல்வாக்கு அதிகம். பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் கோவிந்தசாமி தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் விருத்தாசலம் வருகிறது. இதன் எம்.பி. பொன்னுசாமியும் பா.ம.க.வைச் சேர்ந்தவர்தான். விருத்தாசலம் நகராட்சி கூட, பா.ம.க. வசம்தான் இருக்கிறது. கடந்த எம்.பி. தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில்தான் பா.ம.க. அதிக ஓட்டு வாங்கியது. பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட சமயத்திலும் இங்கு கணிசமாக ஓட்டு வாங்கியிருக்கிறது. கடந்த கால வரலாறு, தற்போதைய கூட்டணி பலம் என எல்லாமே பா.ம.க.வுக்குச் சாதகமான சூழ்நிலையோடுதான் உள்ளன. ஆனாலும் இந்தத் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்த ரகசியத்தின் சூட்சுமம் தெரியாமல் விழிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, அவரைச் சீண்டிப் பார்த்தவர்கள் பா.ம.க.வினர்தான் . கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜயகாந்த், மத்திய அமைச்சர் அன்புமணியை விமர்சித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பல இடங்களில் மோதிக்கொண்டனர். இதனால் ‘கஜேந்திரா’ படத்தை வெளியிட விடாமல் பா.ம.க.வினர் தகராறு செய்தனர். கடும் நெருக்கடிக்கு உள்ளான விஜயகாந்த், தேர்தல் மூலம் பா.ம.க.வினருக்குப் பாடம் புகட்ட முடிவு செய்தார். மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கிய போதே, இப்படியரு எண்ணம், அவரது ஆழ்மனதில் இருந்திருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை விட, தங்களை அதிகம் சீண்டிப்பார்த்த பா.ம.க.வினர் மீதான அவரது கோபம், இன்னமும் தணியவில்லை. எந்த ஜாதியை பின்னணியாக வைத்துக்கொண்டு பா.ம.க. ஆட்டம் போடுகிறதோ, அதே ஜாதியினரின் வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு, பா.ம.க.வுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதால்தான் அவர் பா.ம.க. வின் கோட்டையான விருத்தாசலத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது.
ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டதாகத் தான் பலரும் விஜயகாந்த்தைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால், அவர் எல்லா விதத்திலும் கணக்குப் போட்டுத் தான் களத்தில் குதித்திருக்கிறார். விருத்தாசலம் தொகுதியில் கிராமப்புறங்களில்தான் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அடர்த்தியாக உள்ளனர். ஆனால், மொத்தமுள்ள இரண்டு லட்சம் வாக்காளர்களில், நான்கில் ஒரு பங்கான ஐம்பதாயிரம் பேர், விருத்தாசலம் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இந்த ஐம்பதாயிரத்தில் வன்னியர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் குறைவுதான். மீதமுள்ள வன்னியரல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த 45 ஆயிரம் வாக்காளர்களைத்தான் விஜயகாந்த் குறிவைத்திருக்கிறார். குறிப்பாக, பெண்களின் வாக்குகளைக் கவர, அவரது மனைவி பிரேமலதாவை முழு வீச்சில் பிரசாரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம். பிரேமலதா தங்குவதற்காக இப்போதே வீடு பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர் கேப்டனின் விசுவாசிகள். அவரது டார்கெட் பெண்கள் ஓட்டுதான். பெண்களைக் கவர, வீடு வீடாகப் படியேறி ஓட்டு கேட்கப் போகிறார் அவர். அவருக்கு உதவியாக அவரது தம்பி சுதீஷும் களத்தில் குதிக்க உள்ளார்.
நகரத்துக்கு பிரேமலதா என்றால், கிராமப் பகுதிக்கு வன்னியர் இனத்தைச் சேர்ந்த பண்ருட்டியார் தான் இன்சார்ஜ். விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளதால், விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியைக் கவனித்து கொள்ளும் முழு பொறுப்பும் பண்ருட்டியார் கையில் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முன்பு ரசிகர் மன்றத்தில் இருந்த இளைஞர்கள்தான் இப்போது கட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் வேகத்தோடு உள்ள அவர்களை, அரசியல் கட்சிக்கே உரிய பக்குவத்துக்குக் கொண்டு வந்து, தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதும் அவரது வேலைகளில் ஒன்று. இதனால் தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் சங்கரை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளரான வன்னியர் இனத்தைச் சேர்ந்த பாலகுமாரை நகரச் செயலாளராகப் போட்டுள்ளார் அவர். பா.ம.க. மீது அதிருப்தியில் இருக்கும் வன்னியர்களை மூளைச் சலவை செய்து தே.மு.தி.க.வுக்குக் கொண்டுவரும் பணியில் அவர் ஜரூராக களமிறங்கிவிட்டார். அவர் போட்டியிடும் பண்ருட்டி தொகுதி, விருத்தாசலத்துக்குப் பக்கத்தில் தான் உள்ளது. இதனால் தனது தொகுதியில் வேலை நேரம் போக, அடிக்கடி விருத்தாசலத்துக்கு வந்து கூடுதலாக கேப்டன் தொகுதி பணியிலும் ஈடுபட உள்ளார்.
எம்.பி., எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் எனத் தொடர்ந்து எல்லாப் பதவிகளையும் பா.ம.க.வே தட்டிப்பறித்துக் கொள்வதால் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. வினரை, தங்கள் பக்கம் திருப்பும் வேலையையும் தே.மு.தி.க.வினர் ரகசியமாகச் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தொகுதியில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் உள்ளூர் பிரச்னையிலும் கூடுதல் கவனம் செலுத்தி வாக்கு சேகரிக்க உள்ளனர்.
2004_ம் ஆண்டு பெய்த கன மழையில், 125 ஆண்டு பழைமை வாய்ந்த மணிமுத்தாறு பாலம் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் திருச்சி, பெண்ணாடம் போன்ற பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், எட்டு கிலோ மீட்டர் சுற்றித்தான் விருத்தாசலம் நகரத்துக்கு வரமுடிந்தது. சில நாட்களில் நாச்சியார்பேட்டை பாலமும் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் 36 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு வாகனங்கள் நகருக்குள் வந்தன. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதுப்பாலம் கட்டப்படவில்லை. தற்போதுதான் ஐந்தரைக் கோடிக்கு டெண்டர் விடப்பட்டு வேலை நடந்து வருகிறது. ‘பாலம் கட்ட இவ்வளவு தாமதத்துக்குக் காரணமே, அ.தி.மு.க., பா.ம.க.வின் மெத்தனம்தான்’ எனச் சுட்டிக்காட்டி விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாகக் கிசுகிசுக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
விருத்தாசலத்தில் எங்கு திரும்பினாலும் இப்போது விஜயகாந்த் போட்டியிடப்போவதைப் பற்றித்தான் பரபரப்பாகப் பேசுகின்றனர். கேப்டன் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று அவரது கட்சிக்காரர்களே கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, ரசிகர்கள் சென்னைக்குக் கிளம்பிவிட்டனர். அங்கு கேப்டனைச் சந்தித்து, தங்கள் தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிடுவதற்கு சென்டிமெண்டாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
“விஜயகாந்துக்கு ராசி நெம்பர் 5. விருத்தாசலத்தில் உள்ளது புகழ்பெற்ற சிவன் கோயிலான விருத்தகிரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஐந்து கோபுரங்கள் உள்ளன. அதேபோல், இங்குள்ள கொடிமரத்தின் எண்ணிக்கையும் ஐந்து தான். ஐந்து பிராகாரம், ஐந்து நந்தி, ஐந்துதீர்த்தம், ஐந்து தேர் என எல்லாமே இங்கு ஐந்து தான். அதனால்தான் ஐந்தை ராசியாகக் கொண்ட கேப்டன் இங்கு போட்டியிடுகிறார்”
என்று கூறுகிறார்கள்.
…….
“விருத்தாசலம் தொகுதியில் கம்மாபுரம் ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 156 கிராமங்களில் எங்க மன்றத்துக்குக் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையிலும் 100 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல், விருத்தாசலம் ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 126 ஊர்களில் எங்களுக்குக் கிளைகள் உள்ளன. இங்கும் ஒரு கிளைக்கு சராசரியாக 200 முதல் 300 உறுப்பினர்கள் உள்ளனர். இப்படிக் குக்கிராமங்களில் கூட எங்களுக்கு கிளைகள் இருக்கின்றன. எங்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், முழு வீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டு, கேப்டனை வெற்றிபெற வைத்து விடுவார்கள்.
கள்ளக்குறிச்சி கூட்டத்துக்குச் செல்லும் போதும், கடலூரில் சுனாமி சேதத்தைப் பார்வையிட்டுச் சென்றபோதும் கேப்டன் எங்கள் ஊர் வழியாகத் தான் சென்றார். அப்போது, எங்கள் ஊரில் நிற்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நிற்காமல் சென்றுவிட்டார். விருத்தாசலத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி ஐந்து ஆண்டுகள் சேவை செய்யப்போகிறோம் என்பதற்காகத்தான், அவர் அப்போது நிற்காமல் சென்றிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. பா.ம.க.வின் பலவீனமே அவர்களின் எம்.பி., எம்.எல்.ஏ., சேர்மன் ஆகியோர்தான். இவர்கள் இந்தத் தொகுதிக்கு உருப்படியாக எதையுமே செய்யவில்லை. இதனால் மக்கள் இவர்கள் மீது வெறுப்பில் உள்ளனர். இந்த முறை விருத்தாசலம் மக்கள் கேப்டனைத் தான் எம்.எல்.ஏ., ஆக்குவார்கள்” என்று விஜயகாந்த் போலவே, புள்ளி விவரத்தோடு பேசினார் தே.மு.தி.க.வின் நகரத் தலைவர் பாலகுமார்.
முழு கட்டுரை: Kumudam Reporter










