முந்தாநாள் ‘வணக்கம் தமிழக’த்தில் பாவண்ணன் வந்திருந்தார். பாவண்ணனோடு என்னுடைய பழக்கம் என்பது, தொடர்ந்து திண்ணையில் வாசித்தது, கொஞ்சம் ஆங்காங்கே புத்தகங்கள் படித்ததது மட்டும்தான். இருந்தாலும் நீண்ட நாள் பழகியவரை பார்ப்பது போல்தான் இருந்தது. பேச்சுத் தமிழில் இயல்பான உரையாடலில் அவர் மொழிபெயர்க்கும் கன்னடமும், எனக்கு ஆங்காங்கே வந்துவிழும் ஆங்கிலமும் ஒரு சொல் கூட விழாமல் பதிலளித்தார்.
எழுத்தாளர்களை சந்திக்க செல்லுதல் விபரீதமான நிகழ்வு. வேலைக்கு சேர்ந்திருந்த இளவயதுகளில் மாதாமாதம் மிச்சம் பிடித்து, டிக்கெட் எடுத்து, சிவராம் கரந்த்தை நேரில் பார்க்க செல்கிறார்.
‘மாக்கோலம் போடுவதற்கு அவள் வரவில்லையே…
அவள் கோலம் காண்பதற்கு வழியில்லையே’
என்று ஏமாற்றம் அடையாமல், சாய்வு நாற்காலியில் நாளிதழ் படிப்பதை தூரக்க நின்று தரிசித்துவிட்டுத் திரும்பி விடுகிறார். ஏற்கனவே எங்கோ படித்த நினைவிருந்தாலும், அவர் வாயால் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரி காலத்தில் பாவண்ணன் ‘மண்ணும் மனிதரும்‘ படித்துவிட்டு பல காலத்துக்கு அதன் தாக்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.
வாசிப்பனுபவத்திற்கு மரம், கனி, சுவைக்கு நிகர் என்றார். மரம் போன்ற புத்தகத்தின் நிழலை அணுக வேண்டும். கிட்டப் போனால்தான் கனி என்னும் அனுபவம் கிடைக்கும். நாவில் நிற்கும் தனிச்சுவையாக வாசகனின் மனத்தை அது சென்றடைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். பாவண்ணன் விவரிக்கும்போது சுவையாக இருந்தது.
படிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தவர், விபத்தாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். சரஸ்வதி ராம்நாத்தின் வற்புறுத்தலின் பேரில் கன்னட நாடகத்தை முதன்முதலில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து அவருடைய ஆதர்ச சிவராம் கரந்த், கன்னட நாடகங்கள் என்று சாகித்ய அகாடெமி கிடைத்திருக்கிறது.
ராஜாஜியின் வியாசர் விருந்தில் மஹாபாபாரதப் போர் மிகவும் நேர்த்தியாக சூட்சுமங்களையும் சூழ்ச்சிகளையும் வியூகங்களையும் குயுக்திகளையும் விவரிக்கும். பாவண்ணனுக்கு விருதைக் கொடுத்துள்ள ‘பர்வா‘வும் குருஷேத்திரப் போரை குறித்த படைப்பு. பெண் கதாபாத்திரங்களின் பார்வை மூலமே கதை சொல்லப் படுகிறது.
போர் தொடுக்கும்போது காரணங்கள் தேவையில்லை. சண்டை மூண்டபின்பே ‘ஏன்… எதற்கு’ என்பதெல்லாம் சமைக்கப் படுகிறது என்பது தற்காலத்துக்கும் (ஈராக்) பொருந்தும்வகையில் என்பதை நாவல் விவரிக்கிறது.
பாஸ்கரன் என்ற இயற்பெயருடைய இவர் பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல் திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்.
சிறுகதை தொகுப்பு
வேர்கள் தொலைவில் இருக்கின்றன
வெளிச்சம்
தொலைந்து போனவர்கள்
நாவல்
பாய்மரக் கப்பல்
வாழ்க்கை ஒரு விசாரணை
கவிதை தொகுப்பு
குழந்தையைப் பின் தொடரும் காலம்
1986ஆம் ஆண்டில் மிகச்சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றது இவரது “முள்” சிறுகதை. 1981-இல் புதுவை அரசு நடத்திய குறுங்காவியப் போட்டியில் பரிசு பெற்றார். இலக்கிய வீதியின் சிறுகதைப்பரிசு, கணையாழி இதழ் நடத்தும் தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டிப் பரிசு என்பவற்றைப் பெற்றுள்ளார். இவருடைய நாவல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது.
பாவண்ணனின் கதைகள் பற்றி ஜெயமோகன்
[நன்றி: சதங்கை ஏப்-ஜுன் ’97]
பாவண்ணனின் படைப்புலகின் முதல் சிறப்பு அதன் நேர்மையும் பாசாங்கின்மையும் ஆகும். வாழ்க்கையை முன்வைத்து படைத்தல் என்ற கடமையிலிருந்து இந்த பதினைந்து வருடக் காலத்தில் அவர் ஒரு முறைக்கூடப் பிறழ்ந்ததில்லை.
தமிழிலக்கிய சூழலில் சீரிய படைப்பாளிகளிடம் கூட வணிக எழுத்தின் ஜாலங்களின் சாயம் ஒட்டியிருக்கும். குறிப்பாகக் கடைசித் தலைமுறைப் படைப்பாளிகளிடம். பாவண்ணனின் உண்மையுணர்வு கவசம் போல அவரைச் சூழ்ந்து அவர் படைப்புலகின் தனித்தன்மையைப் பாதுகாக்கிறது.
பாவண்ணனுக்கு நன்றி கலந்த வணக்கம்
தமிழ் | Tamil | Ilakkiyam | Book | Lists












