Monthly Archives: ஜூன் 2005

எ.பி.சி.

எ.பி.சி. – எனக்குப் பிடித்த சித்திரம்
(அல்லது)
எனக்குப் பிடித்த Caர்டூன்
(அல்லது)
எடுத்து(ப் போட முடியாத அளவு) பிசி
(அல்லது)
எங்கிருந்தோ B.C.

76, 76.1, 76.125, 76.1251…

Chandramukhi celebrates 75 Days

Chandramukhi celebrates 75 Days 

Chandramukhi celebrates 75 Days Posted by Hello

சரியா? தவறா?

வாசகர் டிஷ்யூம்JuniorVikatan.com :: சமீபத்தில் ஆந்திர மாநில பேருந்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். பஸ் வேலூருக்குள் நுழைந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று தள்ளி ஜன்னலோர இருக்கையில் இருந்த பயணி, ரோட்டில் எச்சில் துப்பினார். பஸ்ஸுக்கு பின்னால், மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒரு நபர் மீது எச்சில் பட்டுவிட்டது.

சட்டென்று வேகமெடுத்த பைக் நபர், ஒவர்டேக் செய்து, பஸ்ஸை நிறுத்த வைத்தார். சடசடவென பஸ்ஸுக்குள் ஏறியவர், தன்மீது எச்சில் துப்பிய பயணியை சரியாக அடையாளம் கண்டு அவரை நெருங்கினார். அதேவேகத்தில் அந்தப் பயணி மீது “த்தூ… த்தூ…”வென சரமாரியாக எச்சிலை துப்பிவிட்டு, வந்தவழியே இறங்கிவிட்டார்.

ஒரு கன்னத்தில் அடித்தாலும் நமக்குத் தெரியும்; பதிலுக்கு பதில் கொடுத்தால் உலகமே கண்ணில்லாதவர்கள் ஆகிப் போவதும் அறிவோம்; சமீபத்திய ‘அன்னியன்’ எச்சில் துப்பலையும் படித்திருப்போம்.

இந்த சமயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருப்பீர்கள்?

அறிந்தும் அரிந்தும்

Test reveals gender early in pregnancy – The Boston Globe:

முன்பெல்லாம் பத்து மாதம் சுமந்து பெற்ற பின்புதான் கள்ளிப்பால் புகட்ட முடிந்தது. சிறிது காலம் முன்புதான், நான்கு அல்லது ஐந்து மாதங்களில் கண்டுபிடித்து, கருக்கலைத்தார்கள்.

நவீன மருத்துவம் ஐந்தே வாரங்களில் வயிற்றில் என்ன பால் என்று சொல்கிறது.

275 அமெரிக்க டாலர்கள் செலவு செய்தால், ஆண்பாலா, பெண்பாலா என்று உடனடியாக அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆண் மகவு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஆணாக இருந்தால், இரண்டு பேரை சமாளிக்க முடியுமா என்று யோசித்து முடிவெடுக்கலாம்.

இந்தியாவில் தற்போது ஆயிரம் பையன்களுக்கு 762 பெண்கள் பிறக்கிறார்கள். பன்னிரெண்டாயிரம் ரூபாய் மெனக்கிட்டால் பேறுச்செலவு மற்றும் மனக்கிலேசம் இல்லாமல் ஆண் குழந்தையை கண்டெடுத்து, இந்த விகிதாசாரத்தைக் குறைக்கலாம்.

சாண் பிள்ளையானாலும் குழந்தை தன்னுடையதுதானா என்னும் சந்தேகம் அப்பாக்களுக்கு இருப்பதை வைத்த் வடிவேலுவும் செந்திலும் நகைச்சு வைப்பதை பார்த்திருப்போம். இனி அந்த சந்தேகத்துக்கும் இடம் வைக்காமல் ‘எளிய முறையில் துரித விடை‘களும் தெரிந்து கொள்ளலாம்.

தொலைந்த பத்து (1)

1. அன்னியன்
2. துணுக்குச் செய்தி
3. மஜா பூஜா
4. உஷார்
5. உஷ்
6. சிதையா நெஞ்சு கொள்
7. ப. மு. ப. மே.
8. கணினிமயமாக்கல்
9. உதயம்: ப ம கட்சி
10. ஸென் கதை

ஒரு நாள் ஒரு கனவு

இசை: இளையராஜா

எண்பதுகளில் இளையராஜா யாருக்கு இசையமைத்தாலும் ஹிட்டாகும். ஆனாலும், கோவைத்தம்பி, ஃபாசில் என்றால் சிறப்பான கவனிப்பு தென்படும். ‘உயிரே உயிரின் உயிரே’, ‘சின்ன சின்ன ரோஜாப்பூவே’, ‘பூப்பூக்கும் மாசம் தைமாசம்’ என்று TDK-வில் 90 நிரம்பிவிடும்.

இதையே வாலி கம்போஸிங்கின் போதும் கோடிட்டுப் பேசுகிறார். அவர்களின் இயல்பான உரையாடலும் இருக்கிறது. இந்த மாதிரி சிறப்பு ‘Making of’ எல்லா ஒலிப் பேழைகளிலும் இடம் பிடிக்கவேண்டும்.

ஏற்கனவே ‘கல்யாண அகதிகள்’ படத்திற்கு கே. பாலச்சந்தரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைக் கொடுத்தார். வி எஸ் நரசிம்மன், பாலச்சந்தர் மற்றும் பாடலாசிரியர் (யார்?) எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் வெளிவந்த நிகழ்ச்சிகளின் தலைப்பைக் கொண்டு பாடல் எழுதுவதையும் மெட்டுப் போடுவதையும் பதிவாக்கியிருந்தார்கள்.

ஃபாசிலும் இளையராஜாவும் மீண்டும் அசத்தியிருக்கிறார்கள்.

1. கஜுராஹோ – ஷ்ரேயா கோஸல், ஹரிஹரன் – 3.5/4

பிடித்த பாடகி; பிடித்த பாடகர்; பிடித்த இசையமைப்பாளரும் சிரத்தையாக டூயட் போடுகிறார். அவிழ்த்துப் போட்டு கிளர்ச்சியை மட்டும் கிளப்பி விடாமல் நினைவில் நிற்கும்படி காட்சியமைக்கும் இயக்குநர். ஸ்ரீகாந்த்தும் சோனியா அகர்வாலும் ‘கனா கண்டேன்’ போல் ஏமாற்றாமல் பட்டை கிளப்பும் பாடல்.

2. என்ன பாட்டு வேண்டும் – சோனு நிகம் – 2/4

இளையராஜாவின் அட்வைஸ் பாடல். (ஏவிஎம் சரவணன்: படத்தில் ஐந்து பாடல்கள்தான். ஆனால் கேசட்டில் ஆறு பாட்டுகள் இருக்கும். ‘இளையராஜா டைட்டில் சாங் பாடினால் படம் நன்றாக ஓடும்’ என்று ஒரு சென்ட்டிமெண்ட் இருந்தது. வாலி ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்று ஒரு பக்திப் பாட்டு எழுதித் தந்தார். ராஜா பாடினார். அதுதான் கேசட்டில் ஒரு பாட்டு எக்ஸ்ட்ராவாக வந்தது.)

‘புரியாத பாட்டை விட்டு
புரிகின்ற பாட்டைக் கேள்’

3. காற்றில் வரும் கீதம் – ஷ்ரேயா கோஸல், பவதாரிணி ஹரிஹரன், சாதனா சர்கம், இளையராஜா – 3.5/4

இன்றைய தூள் பாடல்.

‘வருந்தும் உயிருக்கு
அரு மருந்தாகும்
இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும்’

4. கொஞ்சம் திற – சோனு நிகம், ஷ்ரேயா கோஸல் – 2/4

இந்தப் பாடலுக்கு சோனு நிகம் தேவையா 😦

5. காற்றில் வரும் – இளையராஜா

வாலி: ‘ஸ்ரீமுகுந்தா கேசவா… நான் உன் புகழைப் பேசவா…’ எப்படியிருக்கும்?
ராஜா: நல்லாருக்கு. ஆனால், பாட்டில் வந்து ‘பேசவா’ என்றிருக்கிறது
வாலி: பாடவா என்றிருக்கணும்கிறியா? கேசவா என்றவுடனே இயைபுத் தொடை பேசவா என்று போட்டுட்டேன். பாடவா என்று போட்டா ‘கேசவா’வை ‘ஆடவா’ என்றுதானே போடணும்.
ராஜா: அது நல்லாருக்காது
வாலி: இன்னும் ஒரேயொரு தடவைப் போட்டுக் காட்டேன்.
ராஜா: ஒரு தடவை என்னண்ணா… ஆறுவாட்டி பாடலாம்.
வாலி: …
ராஜா: ஆஹா… நீங்களே நல்லா பாடறீங்க
வாலி: நான் பாடி யார் கேக்கறது? நீதான் கேக்கணும்

6. இளமைக்கு – சோனு நிகம் – 1.5/4

ரஜினி, விஜய், அஜீத் பாதையில், நாயகனின் எழுச்சிப் பாடல். திரைப்படத்தில் இடம்பெறும் சமயத்தில் தம்மடிக்கவோ, பாப்கார்ன் வாங்கவோ, வலைப்பதிவுக்கு விமர்சனக்குறிப்புகள் எடுக்கவோ பயன்படும் நேரம்.

7. காற்றில் வரும் – ஷ்ரேயா கோஸல், பவதாரிணி

8. பொண்ணுகிட்ட மாப்பிள்ள – டிப்பு, மஞ்சரி – 3/4

குடும்பம், நண்பர்கள் எல்லாரும் இணைந்த குரல்களாய் கலாட்டா பாடல். நடுவே கொஞ்சம் ரம்மியமான பார்வை பரிமாறல். மீண்டும் குழுவோடு கும்மாளம்.

ஜூலி கணபதிக்குப் பிறகு ஏமாற்றாத (ஆனாலும் 101% திருப்தி கொடுக்காத) இளையராஜா படப் பாடல்கள். (oru naal oru kanavu)

அமுதசுரபி – ஜூன் 05

வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி:: கரு: பெண்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமை, புதிய சிந்தனை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும். 2005 ஜூன் முதல் 2006 ஏப்ரல் வரை மாதம்தோறும் ஒரு சிறுகதை, முத்திரைக் கதையாகத் தேர்வுபெற்று அமுதசுரபியில் வெளியாகும். கதைகளை அந்தந்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கதைகள், அமுதசுரபியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கதைக்கும் ரூ.1,000 பரிசு வழங்கப்படும்.

மாதம்தோறும் சிறந்த ஒரு கவிதை தேர்வாகும். கவிதை, எந்தக் கருப்பொருளிலும் இருக்கலாம். முப்பது வரிகளுக்குள் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கவிதைக்கு ரூ. 500 பரிசு வழங்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.


ஒருத்தி படுத்தும் பாடு

முந்தைய தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் உள்ள படைப்பாளிகளிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முன்னவர் பலர், பள்ளி – கல்லூரி – பல்கலைக்கழகம் எனச் சென்று முறையான கல்வி பெற்றதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் நிறைய வாசித்தனர். இன்றைய படைப்பாளிகளோ, முறையான கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெறுகிறார்கள். ஆனால், இவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் முறையான கல்வி பெற்ற – பெறாத படைப்பாளிகள் இடையிலான ஊடாட்டங்கள் பல. அவற்றுள் சிலவற்றை முறையான கல்வி கற்ற முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் இங்கு இலேசாகத் தொட்டுக்காட்டுகிறார்.

பண்டிதர், பண்டிதர் அல்லாதார் எனப் படைப்பிலக்கியவாதிகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம். முறையாகக் கல்வி கற்றவர்களைப் பண்டிதர்கள் என்று சொல்லலாம். கல்விக் கூடங்களில் முறையாகப் பயிலாதவர்களைப் பண்டிதர் அல்லாதார் வரிசையில் சேர்க்கலாம். முனைவர் மு.வரதராசன், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி இவர்களெல்லாரும் பண்டிதப் படைப்பாளிகள். கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்றோர் பண்டிதர் அல்லாத படைப்பாளிகள்.

பண்டிதர் அல்லாத படைப்பாளிகள் முறையாகக் கல்வி கற்கவில்லையே தவிர மற்றபடி மெத்தப் படித்தவர்களே. தனிப்பட்ட முறையில் அவர்கள் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்துத்தள்ளியிருப்பார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் எப்படி எழுத்தாளர் ஆக இயலும்?

ஜெயகாந்தன் முறையாகக் கல்வி கற்றதில்லை. ஆனால் பழைய இலக்கியங்கள் பலவற்றையும் வரிவரியாகப் படித்தவர். பாரதி விழாவொன்றில் பேசும்போது ‘மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!’ என்ற பாரதி வாசகம் பற்றி ஜெயகாந்தன் சொன்னார்: ‘மாதர்களை நாமா இழிவு செய்கிறோம்? தேவையற்ற ஆடம்பர உடைகள் மூலமும் அணிமணிகள் மூலமும் மாதர்களே அல்லவா அவர்களை இழிவு செய்துகொள்கிறார்கள்? ஆகையால்தான் மகாகவி சொன்னார், மாதர் – தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று!’ இப்படி ரா.அ. பத்மநாபன், சீனி விஸ்வநாதன் போல ஆய்வு நோக்கில் கருத்துச் சொல்ல வேண்டுமானால் பாரதி இலக்கியத்தை எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. ஜெயகாந்தன், முறையாகக் கல்வி கற்ற பண்டிதர் அல்லா விட்டாலும் இளமைக் காலங்களில் முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நட்புறவில் ஏராளமான பழைய இலக்கியங்களைத் தனிப்பட்ட முறையில் பயின்றதுதான் அவரது எழுத்தின் இலக்கியச் செழுமைக்குக் காரணம். (இதைப் புதுமைப்பித்தனையும் அழகிரி சாமியையும் ஜானகிராமனையும் கூடப் படிக்காமல் இன்று எழுத வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.)

புதுவைப் பல்கலை முன்னாள் துணை வேந்தரான அமரர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன் அழைப்பை ஏற்று, முறையாகக் கல்வி கற்காவிட்டாலும் புதுவைப் பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் கி.ராஜ நாராயணன். தமக்கு ஆங்கில இலக்கிய அறிவு சுத்தமாகக் கிடையாது என்பது போல் சொல்லிக்கொள்வார். ஆனால் அவரிடம் உரையாடும் போது ஆங்கில இலக்கியங்கள் குறித்து அவர் பேசும் பேச்சு பிரமிக்க வைக்கும்.

உயர்கல்வி கற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன சிலர் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எழுத்தாளர்கள் போல் தோற்றம் காட்ட முயன்றதுண்டு. (பழைய தீபாவளி மலர்களில் அப்படிப்பட்ட சிலரது மிகச் சராசரியான படைப்புகளை நாம் பார்க்க முடியும்.) நல்ல எழுத்தாளர்களாக இருந்த மிகச் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உண்டு. வி.எஸ். சுப்பையா ஐ.ஏ.எஸ். எழுதிய, அஞ்சல் ஊழியரைக் கதா நாயகனாகக் கொண்ட ‘இரட்டை வாழ்க்கை’ என்ற நாவல் எளிமையான நடையில் எழுதப்பட்ட ஒரு நல்ல படைப்பு. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ. இறையன்பு, நல்ல கட்டுரை யாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். (சிறந்த கட்டுரையாளரான பேராசிரியை வெ.இன்சுவையின் சகோதரர்.) எஸ்.வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்., சிறந்த பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதிய படைப்பாளி. அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு “பிரயாணம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதற்கான நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி உள்பட, பலர் பங்கேற்றார்கள்.

ஜெயகாந்தன் “இலக்கணத்தை மீறலாம். இலக்கணம் அறிந்து ஒரு தேவை கருதி மீற வேண்டும். அப்படித் தேவை நேர்ந்தால் நான் மீறுவேன். அறியாமையால் இலக்கணத்தை மீறுவது சரியல்ல’ என்று கருத்துச் சொன்னார். பிறகு சில மாதங்கள் கழித்து ஆனந்த விகடனில் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்‘ என்ற தொடரை அவர் தொடங்கினார். “இலக்கணப்படி ஓர் உலகம் என்று தான் இருக்க வேண்டும். ஆனால் என் கதாநாயகன் ஹென்றியின் தனித்த உலகம் என்பதைப் புலப்படுத்தவே ஒரு உலகம் என இலக்கணத்தை மீறி எழுதுகிறேன்’ என்று அவர் விளக்கமளித்தார்.

நா.பா.வுக்கு கல்வியை முறையாக மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தீராத வேட்கை இருந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரி மாலை வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐம்பது வயதுக்கு மேல் முத்து கண்ணப்பரிடம் சேர்ந்து முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வையும் முடித்தார். ஆனால் பிஎச்.டி. பட்டம் வரவிருந்த தருணத்தில் அதைப் பெற இயலாமலே காலமானார்.

கல்வியாளர்கள் சிறந்த படைப்பிலக்கிய கர்த்தாக்களாக இருக்கமாட்டார்கள் என்பதாக தமிழ் எழுத்தாளர்களிடையே முன்பு பரவலாக ஒரு கருத்து இருந்தது. பிரமிள் கூட இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார். இ.பா. போன்றவர்கள் வந்த பிறகுதான் இத்தகைய கருத்து மாறத் தொடங்கியது. ‘தமிழின் பழைய இலக்கியங்களைப் படித்தால் சிறந்த படைப்பிலக்கியவாதி ஆவதை அது தடுத்துவிடும்’ என்பது போன்ற அபத்தமான கருத்துகள் கூடச் சில சிறு பத்திரிகைகளில் எழுதப் பட்டது உண்டு.

சச்சின்

மூன்று பொங்கல் படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினியின் ஐ.எஸ்.ஓ. 9000 முத்திரையுடன் சந்திரமுகி வெற்றி.

ரஜினி திரைக்கதை எழுதினால் ‘பாபா’. கமல் எழுதினால் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’. நடிகர்கள் திரைக்கதை அமைத்தால் அறுவை. கமலின் சில படங்கள் மனதை வருடும். சிரிப்புக்காக வருபவை மனதில் தங்கும். மசாலா கூட ‘கிஸ்ஸை பாருங்கப்பா’ என்று பேச வைக்கும். கமல் ரசிகர்களே ‘Take a break… Kamal’ சொல்ல வைக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வி.

விஜய்யும் மூன்று விதமான படங்களில் நடிக்கிறார். கதாநாயகிகளை நம்பி எடுக்கும் படங்கள் முதல் வகை. அதிரடி சண்டைக் காட்சிகளை மசாலா தூவி கொடுக்கும் படங்கள். கடைசியாக ஷாஜஹான், யூத் போன்ற காதல் படங்கள்.

கத்திரிக்காயைக் கண்டாலே எனக்கு ஆகாது. கத்திரி பிட்லாவை நன்கு வதக்கி காய் தெரியாவிட்டாலும், உட்பொருளில் கத்தரிக்காய் இடம்பெற்றிருக்கிறது என்றால் பகிஷ்கரிப்பேன். ஒரு காலத்தில் விஜய் படம் என்றாலே aversion. மோகினி, சங்கவி, நாயகிகளை அரையாடையில் திரையில் நீச்சலடித்ததால் சில வெற்றிகளை அடைந்தார். விஜய் ரசிகர் அல்லாத என்னைப் போன்றோரைக் கூட ‘பூவே உனக்காக’, ‘மின்சார கண்ணா’ போன்ற மென்மையான இயக்குநர் காவியங்களின் மூலம் கவனிக்க வைத்தார்.

சச்சின் மற்றுமொரு இதமான படம். திருப்பாச்சி, மதுரவின் சத்தம் இல்லாமல், தன்னுடைய பன்ச் வசனங்களை தானே கிண்டலடித்துக் கொள்ளும் பதிவு. கல்லூரிப் பெண்கள் அடிக்கடி சொல்லும் ‘So silly’, ‘Shut up’ போன்ற பிரயோகங்களை அதே மாதிரி உபயோகிக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்திற்கு மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்னும் பயம் உண்டு. படம் நெடுக தேவையற்ற போலித்தனங்கள் சாடப்படுகிறது.

ஜோதிகாவின் அதீத சுட்டித்தனத்தாலும் சூர்யாவின் மீதான வாலி எதிர்பார்ப்புகளினாலும் மும்தாஜின் நடிப்பினாலும் ‘குஷி’ கொட்டாவியாக இருந்தது. காய்கறிக்காரன் கூடக் கொஞ்சம் கொசுறு போட்டுக் கொடுப்பது போல் பாய்ஸ் நாயகியும் கொஞ்சமே கொஞ்சம் செயற்கை காண்பிக்கிறார். ஆனால், கல்லூரிப் பெண்களிடையே இவ்வித செயற்கைத்தனம் இயல்பு. உதட்டளவில் ஹாய் சொல்வது, நவீன இலக்கியத்திற்காக மேஜிகல் ரியலிஸம் எழுதும் படைப்பாளி போல் நாகரீகத்திற்காக உவப்பில்லாத ஆடைகளை அணிவது, தனிமையில் சுதந்திரத்தை ரசிப்பது என்று பதின்மர்களை படம் பிடித்திருக்கிறார்கள்.

இளைய தளபதி இயல்பாக வந்து போகிறார். இரண்டே சண்டைக் காட்சிகள். காலேஜ் கோமாளித்தனங்கள். சச்சினாக விஜய் வருடத்துக்கு ஒரு முறையாவது நடிக்க வேண்டும்.

குமுதம் ஹெல்த்

எதற்குமே அனுசரித்துப் போகாதவர்கள் மனநோயாளிகளா?

ப்ரியா ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கம்பெனி எடுக்கும் பல முடிவுகளை இவரிடம் இறுதியாக ஆலோசித்து எடுக்கும் அளவிற்கு திறமைசாலி. கை நிறைய சம்பளம். வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். எல்லா திறமைகள் இருந்தும் இவரது குடும்பத்தார் முதல் கம்பெனி வாட்ச்மேன் வரை முகம் சுளிக்க வைக்கும் ஒரு குறைபாடும் இவரிடம் உண்டு. எந்த சூழ்நிலையிலும் யாரையும் எதையும் எதற்காகவும் அனுசரித்துப் போகவே மாட்டார். தான் சொன்னால் சொன்னதுதான். அதில் மாற்றமே இல்லை என்பதில் கொஞ்சம் அதிகப்படியான பிடிவாதமாக இருந்தார். அதனால் பல வழிகளில் இவர்மேல் பலருக்கு வெறுப்பு.

எல்லோரும் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டார். எதையும் அனுசரித்துப் போகாததால் (Adjustment disorder) இவருக்குள் எழுந்த உள்மனப் போராட்டம் இவரை நடைப்பிணமாக்கிவிட்டது.

சில சமயம் விரக்தியாகப் பேசுவார். சில சமயம் எரிந்து விழுவார். யாருடனும் ஒட்டாமல் தனிமையில் இருந்தார். குறிப்பாக ஆண்களை அனுசரித்துப் போகவே கூடாது என்பது அவரது ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை மனதளவில் முடக்கிப் போட்டுவிட்டது. விளைவு, அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாமல், கை கால் பலம் இழந்து, கன்னம் ஒட்டிப்போய் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலைக்கு வந்துவிட்டார். அதன் பிறகுதான் வேறு வழியில்லாமல் மனநல மருத்துவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

இவருக்குள் இருக்கும் அனுசரித்துப் போக முடியாத மனநிலை தான் இவரது மனநலக் கேட்டிற்குக் காரணம் என்று மருத்துவர் கூறிவிட்டார்.

நமக்கு வரும் பல மனநோய்களுக்கு நம்முடைய உள்மனம் தான் காரணம். உள்மனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப சிலர் உணர்வுபூர்வமாக கொதிப்படைந்து பேசுவதும், தாறுமாறான எண்ணங்களைக் கொள்வதும்தான் மனநலக்கேடுகள் வர மிக முக்கியக் காரணங்களாக அமைகின்றன. உள்மனத்தில் ஏற்படும் குறைபாடு மேல் மனக்கோளாறாக மாறும்போது உடலிலும் பலவித நோய்கள் வெளிப்படும் என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை.

அச்சப்படுவது, வெட்கப்படுவது, எரிச்சல் அடைவது, எதிலும் அனுசரித்துப் போகாத போக்கைக் கடைப்பிடிப்பது, ஆதங்கப்பட்டுப் பேசுவது என்று சின்னச்சின்ன உணர்வுகள் உள்மனத்தின் வேலையாக நம்மை ஆட்டிப் படைப்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.

காரணங்களும் அறிகுறிகளும் :-

  • சிலருக்கு புதிய சூழ்நிலையில், புதிய வேலையில் சேர்ந்தால் அனுசரித்துப் போக முடியாமல் போகும். ஆனால் நாளாவட்டத்தில் அதை அவர்கள் சரி செய்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு புதிதாக யார் வந்தாலும் அனுசரித்துப் போக மனம் வராது.
  • தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்காத பட்சத்தில் அவர்களை எதிராளியாக நினைக்கத் தொடங்கிவிடுவர்.
  • தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற மனோநிலை அடிக்கடி எழும்.
  • தன் பரம்பரை பற்றி தற்பெருமை அதிகம் பேசுவார்கள். இந்த சென்னை மாநகரமே தன் மூதாதையர் நிர்மாணித்ததுதான் என்ற ரீதியில் கூட அவர்கள் பேச்சு எழும்.
  • திருமணமான பெண்கள், மாமியாருக்கு அடங்கி நடப்பதுபோல் தெரிவார்கள். ஆனால் ஏறுக்குமாறாக எதையாவது செய்து வைப்பார்கள். கணவருக்கும் சமுதாயத்திற்கும் பயந்து தன்னுடைய அனுசரித்துப் போக முடியாத நிலையை – வெளிப்படுத்த முடியாத நிலையில் இப்படி நடந்து கொள்வார்கள்.
  • சிலருக்குக் குறைவாக இருக்கும். சிலருக்கு மிதமிஞ்சி இருக்கும். இதில் ஆபத்து என்னவென்றால், மிதமிஞ்சி இருப்பவர்கள் வெளியில் காட்டமாட்டார்கள். அதனால்தான் அவர்களின் உள்மனம் அவர்களை தேவையற்ற எண்ணம் கொள்ளச் செய்து மனக்கேடுகளை உருவாக்கி விடுகின்றது.

    அனுசரித்துப் போகாதது ஒரு பெரிய பிரச்னையா? இதைப் போய் எப்படி மனநோய் லிஸ்ட்டில் சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்புவர்கள் இருக்கிறார்கள். அப்படி கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவுதான் ப்ரியா போன்றவர்கள் மனநலம் கெட்டு சிகிச்சை வரை வந்து போக வேண்டியதாகிவிட்டது. அனுசரித்துப் போக முடியாத மனநிலை கொண்டவர்களுக்கு, அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர, கீழே சொல்லப்பட்டுள்ள யோசனைகள் உதவக்கூடும்.

    1. நடத்தை சிகிச்சை:

    அனுசரித்துப் போக முடியாத மனநிலைக்கு உட்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் காரணங்களை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள். யார் யாருடன் எந்தந்த காரணங்களுக்காக நம்மால் அனுசரித்துப் போக முடியவில்லை என்று எழுதிப் பாருங்கள். திரும்பப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே சில விஷயங்கள் சிரிப்பைத் தரலாம். சில விஷயங்கள் உங்கள் மேலேயே கோபத்தை ஏற்படுத்தும். நாம் அதில் கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாமே என்று உங்கள் மனமே சொல்லும். இவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, மறுநாள் அவர்களிடம் அனுசரித்துப் போக முயற்சி செய்யுங்கள். நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போனால், அவர்கள் அதைவிட இருமடங்கு உங்களுடன் அனுசரித்துப் போவார்கள்.

    2. மனதையும் உடலையும் தளர்வுபடுத்துங்கள்:

    உங்கள் உடலும் மனமும் ஸ்டிப்பாக இருப்பதால்தான் உங்களுக்கு இந்த மனநிலை. அதனால் ஓர் அமைதியான தனி இடத்தில் படுத்துக்கொண்டு கைகால்களை அவற்றின் போக்கில் விட்டு உடம்பைத் தளர்த்தும் பயிற்சியில் ஈடுபடுங்கள். அதே போல் மனதையும் தளர்ச்சிகொள்ள, எந்த துன்பம் தரும் எண்ணத்தையும் இந்த சமயம் நினைக்காதீர்கள்.

    3. உடற்பயிற்சி, யோகா, தியானம்:

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் முடிந்தளவு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்திற்கு இது உதவும். யோகா, தியானம் மனத்தை ஒரு முகப்படுத்தும்.

    4. நல்ல தூக்கம்:

    தூங்கி எழுந்த பின் உங்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் நீங்கள் நல்ல மூடில் இருப்பீர்கள். கண் எரிச்சல், மனத்திற்குள் ஒரு வித பயம், பதற்றம் இருந்தால் நீங்கள் சரியாகத் தூங்கவில்லை. நல்ல மனநிலையில் இல்லை என்று பொருள். எனவே குறைந்தது 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் வேண்டும். அதற்காக நல்ல நூல்களைப் படிப்பது, தூக்கம் வரும் வரை இசை கேட்பது நல்லது.

    5. புகை, மது கூடவே கூடாது:

    பிறருடன் அனுசரித்துப் போக முடியாதவர்கள், துணைக்கு நாடுவது புகையையும் மதுவையும்தான். இது இம்மனநிலையை மேலும் மோசமடைய வைக்கும். அதனால் புகை, மது கூடவே கூடாது.

    6. போட்டி மனம் வேண்டாம் :

    தேவையில்லாமல் பிறருடன் போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. போட்டி மனம் தான் உங்களை பலவீனப்படுத்தி, மற்றவர்களுடன் அனுசரித்துப் போகவிடாமல் செய்யும்.

    7. சமூக உறவைப் பலப்படுத்துங்கள்:

    தோழமையுள்ள நல்ல சமூக உறவை மற்றவர்களுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக முயன்றாலே இம்மனநிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களைத் தவிர்த்து விடலாம்.