சந்திரமுகிக்கு தேவைப்படாத தணிக்கை


ஞாநி – ஓ பக்கங்கள் : விகடன் :: பொதுவாக உலகெங்கும் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது என்பதற்கு, ‘ஜோ போலே சோ நிஹால்’ படத் துக்கு எழுந்துள்ள எதிர்ப்பே சாட்சி! படத்தை எதிர்க்கும் சீக்கிய வன்முறையாளர்கள் டெல்லி தியேட்டர்களில் குண்டு வெடித்ததில், 50 பேருக்குக் காயம். ஒருவர் மரணம்.

படத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன? தலைப்பு, சீக்கியர்கள் மத ரீதியில் முழக்கமிடும் ‘ஜோ போலே சோ நிஹால் சத் ஸ்ரீ அகால்’ (கடவுள் பெயரைச் சொல்பவர் ஆசீர்வதிக்கப் பட்டவர்) என்னும் கோஷத்தின் ஒரு பகுதி என்பது. படம் பக்திப்பட மல்ல. சன்னி தியோல் சீக்கிய போலீஸ்காரனாக நடிக்கும் அசட்டு காமெடி.

இந்தப் படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பையடுத்து, சீக்கியக் கோயில்களை நிர்வகிக்கும் சிரோமணி குருத்வார பிரபந்தக் கமிட்டி, இனிமேல் சினிமாவில் சீக்கியர்கள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்று விதிகளை அறிவித்திருக்கிறது. சீக்கியப் பாத்திரங்களில் இனி சீக்கியர் அல்லாதவர்கள் நடிக்கவே கூடாதாம்! சீக்கியராகப் புனித முழுக்குப் பெற்றவர் மட்டுமே நடிக்கலாம். சீக்கியப் பாத்திரம் எதுவும் மது குடிப்பதாகவோ, குற்றங்கள் செய்யும் வில்லனாகவோ காட்டப்படக் கூடாது. தணிக்கைக் குழுவிலும் ஐந்து சீக்கியர்களை நியமித்து, எந்தப் படத்தில் சீக்கிய வேடமோ, வாழ்க்கை முறையோ வந்தாலும், அதை அந்தக் குழு அங்கீகரித்த பிறகே படத்தை அனுமதிக்க வேண்டும்.

சகிப்புத்தன்மை, அன்பு இவற்றைத்தான் மதங்கள் போதிக்கின்றன என்று எல்லா மதவாதிகளும் நம்மை நம்பச் சொல்கிறார்கள். ஆனால், எங்கோ பிரான்சில், காலணியில் இந்து சாமிப் படங்களைப் போட்டால், இங்கே கலவரம் வெடிக் கிறது. இராக் சிறையில் குர்-ஆன் புத்தகங்களைக் கழிவறையில் போட்டதாகக் கேள்விப்பட்டதும், வேறு தேசத்தில் கலவரம் எழுந்து பல பேர் செத்துப் போகிறார்கள். மராத்திய வீரன் சிவாஜி, பிரிட்டிஷ் அடிவருடியாக இருந்தான் என்று ஆங்கிலத்தில் ஒருவர் புத்தகம் எழுதினால், புனேவில் இருக்கும் ஆவணக் காப்பகத்தை சிவசேனை சூறையாடுகிறது.

அதாவது, முதல் ‘இழிவை’ச் செய்தவர்களின் தரத்துக்கு நாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று இவர்களும் நிரூபிக்கிறார்கள்.

சட்டங்கள் கடுமையாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். அது முழு உண்மையல்ல என்பதற்கு, சினிமா தணிக்கைச் சட்டமே சாட்சி. தணிக்கை விதிகளை நூறு சதவிகிதம் பின்பற்றினால், வருடத்துக்குப் பத்துப் படம் கூட ரிலீஸாகாது!

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, நானும் சில சகாக்களும் ஒரு படத்துக்குச் சான்றிதழே தர முடியாது என்று சொல்லிவிட்டோம். வில்லன் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கிராஃபிக்ஸ் மூலம் ஒரு மண்டபத்தில் பேய் பிசாசுகள் நடமாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்தப் பக்கமே மக்கள் வராமல் தடுத்து விடுகிறான். மண்டபத்தைச் சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்து கிறான். க்ளைமாக்ஸில் அம்மனின் வேல் வந்து பாய்ந்து, வில்லனின் கம்ப்யூட்டர் சாதனங்களை எல்லாம் வெடிக்கச் செய்து அழித்துவிடுகிறது. வில்லனும் செத்துப் போகிறான். தணிக்கை விதிகளில் இரண்டு சொற்றொடர்கள் உள்ளன. ஒன்று, scientific temper (அறிவியல் கண்ணோட்டம்). இன்னொன்று, obscurantist tendencies (மூடத்தனமான, பிற்போக்கான கருத்துகள்). படம் அறிவியல் பார்வைக்கு எதிராக மூடத்தனத்தை வளர்ப்பதால் அனுமதி மறுத்தோம். மறுபரிசீலனைக் குழுவுக்குப் போய், படம் சில வெட்டுகள் பெற்றது. அடுத்த அப்பீலில் எந்த வெட்டும் இல்லை என்றாகி விட்டது. கடைசியில் படம் ‘தாய்க்குலத்தின் பேராதரவுடன்’ 150 நாள் ஓடி வசூலைக் குவித்தது.

One response to “சந்திரமுகிக்கு தேவைப்படாத தணிக்கை

  1. ////அடுத்த அப்பீலில் எந்த வெட்டும் இல்லை என்றாகி விட்டது. கடைசியில் படம் ‘தாய்க்குலத்தின் பேராதரவுடன்’ 150 நாள் ஓடி வசூலைக் குவித்தது.///

    🙂 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.