வாசகர் டிஷ்யூம்


பதில் சொல்லுங்கள் பாரதிராஜா – ரவிபாபு

Vairamuthu, Bharathiraja, Ilaiyaraja - Tamil Thirai TV Opening Celebrationsஇயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாக்காரர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை கடுமையாகச் சாடியிருந்தார். தமிழ் மீது அவருக்கிருக்கும் பற்றை நினைத்தால் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்த்திரை சேனலைப் பார்க்கும்போது, ‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

தமிழ்த்திரை சேனலில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளின் பெயர்களைப் பார்ப்போமா… ‘ரெடி ஜூட், செட் தோசை, மைக்செட், ஸிக் ஸாக் ஸூம், நான்ஸ்டாப் நான்சென்ஸ், டாப் டக்கர்’ இப்படிப் போகிறது பட்டியல்.

Thamizh Thirai TV Channelபாரதிராஜா சார்… இதெல்லாம் தமிழ் பெயர்களா… இல்லை, உங்கள் கோபமெல்லாம் சினிமாவில் ஆங்கிலப் பெயர் வைப்பதில் மட்டும்தானா?


குத்திக் கிழிக்காதீர்கள் – ஏ.எம்.ஆனந்தன்

மைக் கிடைத்தால் போதும்… எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். கடந்த வாரம் ரேடியோ மிர்ச்சி எஃப்.எம் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி. நேயர்களிடம் லூசுத்தனமான கேள்வி கேட்பதும் அதற்கு நேயர்கள் மொக்கையான பதிலைச் சொல்வதும் தான் அந்த நிகழ்ச்சியின் ஸ்டைல்.

அன்று நிகழ்ச்சி துவங்கியதும் Radio Jockeyயான சுசித்ரா கேட்ட கேள்வி, ‘இன்ஜினீயரிங் படிச்சிட்டு சில வருஷமா வேலை இல்லாம இருக்குற இளைஞர்களுக்கு எதனால வேலை கிடைக்கலை? அதுக்கு அவங்க என்ன பண்ணலாம்?’ என்பதுதான். நானும் ஒரு இன்ஜினீயர் என்பதாலும் எனக்கும் இன்னும் ஸ்திரமான வேலை கிடைக்கவில்லை என்பதாலும் ஆர்வமாக நிகழ்ச்சிக்குக் காது கொடுத்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் சுசித்ரா அடித்த கமென்ட்களும் நிகழ்ச்சியில் பேசிய நேயர்கள் பேசிய பேச்சுக்களும் என்னை நோகடித்து விட்டன.

தனியார் கலைக் கல்லூரியில் படிப்பதாகச் சொன்ன ஓர் இளம்பெண், ‘வேலை இல்லாத இன்ஜினீயரிங் பட்டதாரிகள் படிக்கும்போது பலான படம் பார்த்து வெட்டியாக பொழுது போக்குவார்கள்’ என்று சொன்னதோடு, ‘வேலை கிடைக்கலைன்னா அவங்க மெரீனாவில் சுண்டல் விற்கலாம், வீடு வீடாக பேப்பர் போடலாம்’ என்றெல்லாம் யோசனை சொன்னார்.

உடனே சுசித்ராவும், ‘அடடே… அருமையான யோசனை!’ என்று பாராட்டினார். எனக்கு வந்த கோபத்தில் ரேடியோவைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம் போல இருந்தது. ஆனால் என் காசுதானே வீணாகப் போகும். ரேடியோவை அணைத்து விட்டு உருப்படியான வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ரேடியோ, டி.வி. ஆசாமிகளே… முடிந்தால் இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள். இல்லையா… நீங்கள் எப்போதும்போல, ‘சாப்டாச்சா… என்ன படம் பாத்தீங்க… இட்லிக்கு தொட்டுக்க காரச்சட்னி சிறந்ததா… எண்ணெய் பொடி சிறந்ததா’னு பட்டிமன்றம் நடத்துங்க. எங்களை மாதிரி ஆளுகளைக் குத்திக் கிழிச்சு சந்தோஷப்படாதீங்க!

நன்றி: Junior vikatan

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.