தோள் வலித்தாலும் தொழிலைச் சுமக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம். மிகச் சாதாரணமென்று இலையில் பதிந்த மழைத்துளியை விலக்கிவிடாத மரம்போல, இலக்கிய வேர்களில் இவர்களைப் பதிவு செய்தல் என் விருப்பம்.
இந்த மாயக் காவடி நம் எல்லோருக்குமானது. ஆளுக்கு ஒரு கை பிடித்தல் அவசியம். அன்புடன் தொடர வேண்டுகிறேன்.
ரோடு ரோலர் டிரைவர்
முன்னும் பின்னுமாக
இவன் கடந்த தூரம்
மிக மிக சொற்பம் அல்லது
கணக்கில் வராதவை
ரோலர் ஓட்டுபவரின்
இதயம் போல
இயங்கவேண்டும்
அரசாங்கம்
முன்னதில் தெளிவும்
பின்னதில் பதிவும்
எல்லா சாலையும்
ரோமை அடையுமா?
தெரியாது
ரோலரை அடைந்தே தீரும்
ஆலையிட்ட கரும்பென
ஆக்கிய உவமையை, இனி
ரோலரிட்ட எறும்பென
கூறுதல் நவீனம்
ரோலர் ஓட்டுபவன்
கடந்த காலத்தின் மனசாட்சி
சேவைகளும் தியாகங்களும்
தெரியாமல் போவதனால்
விரைவு வாகனங்கள்
விபத்துகளின் குறியீடு
எங்கேயும் நிறுத்தலாம்
ரோலரை
எந்த பயமுமில்லாது
நெடுஞ்சாலையெங்கிலும்
கேட்கும்
ரோலர் ஓட்டுபவனின்
நீண்ட நெடிய சங்கீதம்
பிறருக்கான பாதைகளை
போட்டுத்தரவே
பிறப்பெடுத்தவன் போல
என்றாலும்
வந்த பாதையை மறந்துவிடாத
இவனே விரும்பினாலும்
போக முடிவதில்லை வேகமாக
நன்றி: விகடன்.காம்










