மீண்டும் கூகிள் (அல்லது) வ.கே.ம.
‘கொடி பறக்குது’ படத்தில் ‘ஓ… காதல் என்னை காதலிக்கவில்லை’ பாடலில் “மீனுக்குத் தூண்டிலிட்டாய்! யானை வந்தது” என்பார் எஸ்.பி.பி. மணிவண்ணன் ஆகப்பட்டவர் மீனாகவும் அமலா என்பவர் யானையாகவும் சித்தரித்ததால் நெஞ்சில் நின்ற பாடல்.
ஐஸ்வர்யாவுக்காக அறுபது நிமிடத்தைப் பார்க்க ஆரம்பித்தால் கூகிள் வந்து விழுந்தார். ஐஸ்வர்யா மீன். கூகிள் குட்டி யானை.
அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு கூகிள் விதவிதமான சின்னங்களைப் போட்டு அசத்துகிறது. மைக்ரோசாஃப்ட்டை நேரடியாக குறி வைத்து உங்கள் கணினியின் தேடலை துவக்குகிறது. ‘யானுகோவிச் விஷம்’ என்று தமிழில் தேடினால் அதை மொழிமாற்றி, ரஷிய மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தில் தேடி, உங்களுக்கு வேண்டிய மொழியில் பதிலைக் கொடுக்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது.
‘ஹிந்து’வில் வெளிவரும் சென்ற வருட நிகழ்வுகள் என்னும் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியீட்டை தவற விடாமல் புரட்டுவேன். விரல் நுனியில் 2004 (மார்க்கம்) ஆண்டை கொண்டு வருகிறது கூகிள். கம்பெனியில் சேருவதற்கு உண்டான சாம்பிள் கேள்விகள் விழிக்க வைத்தது. அடுத்த வருடமாவது Google Code Jam கலந்து கொண்டு புத்தியை தீட்டிப் பார்க்கணும்.
கூகிள் வந்தபிறகு எல்லாவற்றையும் தேடிக் கண்டு கொள்வதால் GLAT – Google Labs Aptitude Test எல்லாம் தாண்டுவது உலக மகா கஷ்டம். ஆனால், விடைகள் எல்லாம் கூகிள் மூலமாகவே எளிதில் கிடைக்கிறது.
இவ்வளவு கூகிளித்து விட்டு Google Blog பற்றி சொல்லாவிட்டால் போஜனம் கிடைக்காது.
முப்பது நிமிடம் கூகிள் புராணம் பாடிவிட்டு பதினைந்து நிமிடம் ஐஸ் புகழ் பாடினார்கள். ‘சிரிக்காதே… என்னை சிதைக்காதே’ என்று பார்த்திபன் புதுமைபித்தனாக ஆக்கா விட்டாலும், டென்ஷனில் சிரித்தே கடுப்படித்தார் ஐஸ்வர்யா ராய்.
‘ஆண்கள் உங்கள் முன்னிலையில் வெட்கப்படுவார்களாமே’ என்பதற்கு சாமர்த்தியமாக பேட்டியெடுத்தவரையே திருப்பி கொக்கி போட்டு ‘நீங்க வெட்கப்படுகிறீர்களா’ என்று ஆரம்பித்தது சுவாரசியமாக இருந்தது. ஐஷ்வர்யாவின் ஃபேவரிட் சித்தி விநாயகர் தரிசனத்துடன் பேட்டி தொடர்ந்தது. அமெரிக்கர்களுக்கு பெரிய விஷயமான முப்பது வயதானாலும் இன்னும் பெற்றோருடன் ஒரே இல்லத்தில் வசிப்பதற்கு இதயபூர்வமான பதில் கொடுத்தார்.
‘நான் அம்மா அப்பாவுடன் இருப்பதே சில மணித்துளிகள்தான். அவற்றையும் வேறு வீட்டில் கழிப்பது பிடிக்கவில்லை’ என்பதை இந்தியர் எவரும் ஆமோதிப்பார்கள். கூடவே கொஞ்சம் புன்னகைத்தார். கோயிலுக்குப் போனால் கூட நிம்மதியாக சாமி கும்பிட முடியாமல் தன்னைத் தொழும் ரசிகர்கள் குறித்த செல்ல அங்கலாய்ப்பு கொடுத்தார். தொட்டுக்க தலைமுடியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிரித்தார். ரசிகர்கள் தன்னை கனவுக் கன்னியாக பார்ப்பதை விட ப்ரியஸகியாக பாராட்டுகிறார்கள் என்றார். பல் தெரிய சிரிக்கிறார்.
அமெரிக்க தொலைக்காட்சியில் ஸ்னேஹா தோன்றும்போது திகட்டல் சிரிப்பை வீசாமல் இருக்க ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்.
ஆங்காங்கே ‘ஹம் தில் தே ஷுகே சனம்’ பாடல் காட்சிகள் போடப்பட்டது. ஐஷ்வர்யாவுக்கும் அந்தப் படத்தின் இயக்குநருக்கும் இடையே நடந்த சொற்சிலம்பத்தைக் குறித்து எதுவும் சொல்லவில்லை. பாய்ஃப்ரண்ட் குறித்து விசாரிக்கப் பட்டது. சுனாமிக்காக கிராமத்தைத் தத்தெடுத்திருக்கும் விவேக் ஓபராயையும் சொல்லவில்லை. மாஜி சல்மான் கானையும் சொல்லவில்லை. சுயசரிதை எழுதப் போகிறாராம். அதில் அவசியம் இடம்பெறும் என்று நகம் கடிக்காத அவஸ்தையுடன் சமாளித்தார்.
ஃபேஷன் ஷோ நடத்தினார். பாலிவுட் படம் போலவே அபாயகரமான க்ளோஸ்-அப் கொடுக்கப்பட்டது. என்னுடைய கண்ணுக்கு மட்டும்தான் லோ-ஹிப் புடைவைகளும் ரவிக்களும் பளிச்சிட்டும் என்பதால், ஆடை அணிவகுப்புக்கும் பேட்டிக்கும் உள்ள ஆறு சம்பந்தங்களை டீபீர்ஸ், கோக் விளம்பரங்களில் தோன்றுவதோடு முடிச்சிட்டார்கள்.
காதலன் இருக்காரா ஆச்சு… எப்போ கல்யாணம் என்று பூடகங்கள் ஆச்சு… அதிமுக்கியமான நிருபர் கேள்வி கடைசியில் வைக்கப்பட்டது. ‘ஹாலிவுட்டில் படுக்கையறை காட்சிகள் இயல்பாக நடத்தப்படும். நீங்க முத்த காட்சியில் நடிப்பீர்களா? உங்கள் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்திய பாரம்பரியத்துக்கு பங்கம் வருமா? ஆங்கிலப் படங்களில் தோன்றுவதற்காக சமரசம் செய்து கொள்வீர்களா?’
என்ன சொன்னார் என்பது நடிகைகளின் வழக்கமாக கேட்கப்படும் மழுப்பல் பட்டியலை சார்ந்த்து.
குறைவாகப் பேசி, நிறைவாக கேட்-வாக் காட்டி, அலுக்காமல் சிரித்து, படபடப்புடன் முடித்துக் கொண்டார்.










