Daily Archives: திசெம்பர் 4, 2004

அன்பாதவன்

என் நிறத்தைப் பார்த்த மாத்திரத்தில்

அசூயைக் கொள்கிறாய்

சாதியை வெளிச் சொல்லாமல்

கருப்பு எனக் கேலி பேசுகிறாய்

மூச்சுக் காற்றின் தீட்டும் படாமல்

இருக்கிறாய் கவனமாய் நகர்ந்து

என் நிழலையும்

அருவருப்போடு பார்க்கிற

உனக்கு நான் சொல்ல விரும்புவது

இதுதான்

முகம் கைகால் முதுகென

புறப்பாகங்களைக் கொண்டு

எடை போடாதே என் நிறத்தை

நீண்டு விரைத்த என் குறியைப் பார்

ஒருமுறை பார்த்தால்

மாறக்கூடும் உன் முடிவுகள்

குறியின் முனையைப் பிதுக்கத் தெரியும்

உனக்குப் பிடித்த சிவப்பழகு

காலங்காலமாய்

சாதிப் பெருமை பீற்றுமுன்

நாவால் வருடிப் பார்

பொங்குமெனது ரவுத்திரம்

வெண்மையாய்

சுகிர்தாராணி

நான் திகைக்க நினைக்கையில்

அந்தரங்கம் அச்சிடப்பட்ட

புத்தகத்தையே படித்து முடித்திருந்தேன்

என் கண்களின் ஒளிக்கற்றைகள்

முன்னறையில் உறங்குபவனின்

ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன

கோப்பை நிறைய வழியும் மதுவோடு

என் உடல் மூழ்கி மிதந்தது

கூசும் வார்த்தைப் பிரயோகங்களை

சன்னமாய்ச் சொல்லியவாறு

சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை

பறவைகளின் சிறகோசை கேட்டதும்

என்னை… என்னிடத்தில் போட்டுவிட்டு

ஓடிவிட்டது இரவு மிருகம்

வளைவு – பிரமிள்

ஒப்புமைத்

தத்துவப் பின்னலை

ஓயாத வலையாக்கும்

காலவெளி நியதி

தன் வலையில் தானே

சிக்கித் தவிக்கிறது.

அண்டத்தின் அநந்த

சூரியன்களுள்

மிகைப்பட்ட ஈர்ப்பு.

அங்கே

வெளி ஒன்றை

இன்னொரு வெளி ஊடுருவும்

பிறழ்ச்சி பிறக்கிறது.

காலவெளிப் பரப்பில்

ஜடத்தினுள் ஜடம்சிக்கி

எங்கோ ஒரு

ஈர்ப்பு வலை முடிச்சில்

அதீத ஜடத்திணிப்பு

பிரபஞ்ச நியதியில்

பிறக்கிறது புரட்சி.

ஒரு ஒளிப் புள்ளி நோக்கி

சரிகிறது அண்டம்.

வளைகிறது

வெற்றுப் பெருவெளி

உள் நோக்கி விழும்

உலகங்களை விழுங்கி

ஒளிரும் ஜடப் பிழம்பு

எல்லையிலே

ஈர்ப்பின் கதி மாறி

தன் ஒளியைத் தானே

கபளீகரிக்கிறது.

வெளி வளைந்து குவிந்து

பிறக்கிறது

வெளியினுள் ஒரு

பேரிருள் பிலம் –

இன்னொரு பரிமாணம்

அங்கே உயிர்க்கின்ற

உலகங்களில்

உலவுகின்றன –

இருள் மின்னல்கள்.

வெளியான இதழ்: மீள் சிறகு 1

நாம் புதியவர்கள் – மும்பை புதியமாதவி

நான் தென்றலாக

வரவில்லை

அதனாலேயே

புயல் என்று

யார்… சொன்னது?

நான் கனவுகளாக

வரவில்லை

அதனாலேயே

நிஜம் என்று

யார்… சொன்னது?

நான் காதலியாக

வரவில்லையே

அதனாலேயே

சகோதரி என்று

யார்… சொன்னது?

நான் மழையாக

வரவில்லை

அதனாலேயே

சூரியன் என்று

யார்… சொன்னது?

நான் விடியலாக

வரவில்லை

அதனாலேயே

இருட்டு என்று

யார்… சொன்னது?

நான் அதாக

வரவில்லை

அதனாலேயே

இதாக இருக்க

யார்… சொன்னது?

நான் நானாக

நீ நீயாக

நீயும் நானும்

புதிதாகப் பிறந்தவர்கள்…

நான் யார்…?

நாளைய

அகராதி

எழுதும்…

அதுவரை இருக்கின்ற சொற்களில்

என்னைக் கழுவேற்றி

உன்னை

முடித்துக்கொள்ளாதே.

வெளியான இதழ்: நடவு – இதழ் 11