Daily Archives: நவம்பர் 29, 2004

அங்கும் எங்கும்

தேங்க்ஸ் கொடுக்கல்-வாங்கல தினம்

சாதாரண அமெரிக்கர்களைப் பொறுத்தவரை நன்றி வழங்குதல் தினம் — நான்கு நாள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கிறது.

சின்ன வயதில் பொங்கல் என்றால் நாலு நாள் விடுமுறை, சர்க்கரைப் பொங்கல், கணுப்பொடி வைத்தல், பொங்கல் கட்டுரை எழுதுதல் என்பேன். (இன்றும் அதே நிலைதான்.)

தேங்க்ஸ்கிவிங் என்றால் வான்கோழி பிடித்து ஓவனில் சமைத்தல், தொட்டுக்க க்ரான்பெர்ரி ஜெல்லி சாஸ், கொஞ்சம் அசட்டு தித்திப்போடு சாம்பார், உருளைக்கிழங்கும் இன்ன பிறவும் போட்ட கறி — இதுதான் சமையல்.

வான்கோழியை அதிகம் வேக வைக்க கூடாது. குறைந்து வெந்திருந்தாலும் விஷமாகிப் போகும். பார்த்து டைமர் வைத்து விசிலடித்தவுடன் அடுப்பை அணைப்பது முக்கியம். ஃபில்லிங் எனப்படும் மொறு மொறு கறியை கோழி முதல் உருளை வரை வறுத்து செய்யலாம்.

நண்பர்களையும் உறவினர்களையும் வியாழன் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்தக்காலத்தில் அறுவடை நடந்திருக்கும். தோட்டத்தில் விளைந்த சர்க்கரைப் பூசணிக்காயை கேக்குக்குள் அடைத்து, ஒரு வருடமாக வளர்த்த வான்கோழியை வெட்டி சமைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.

முன்னும் ஒரு காலத்தில் இக்கால அமெரிக்கர்களை வரவேற்ற, ஐ.எஸ்.ஐ. அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு நன்றி வழங்குதலாக தொடங்கியது. இன்று யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமோ உணவு உண்பதற்கு முன் நவில்கிறார்கள்.

நிறைய அமெரிக்கப் ஃபுட்பால், வியாழனின் மிச்சம் மீதியை திங்கள் மதியம் மட்டும் வெட்டுதல், உள்ளூர் கலாச்சாரத்தை தெப்பத் திருவிழாவாக தரையில் காட்டும் அணிவகுப்புகள், நத்தார் தின சாண்டா பரிசு வழங்கலுக்கான ஷாப்பிங், என அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.


  • காதல் தீவிரவாதி

    என்னை நீ கைது செய்

    ஆயுள் தண்டனை ஒன்று

    உன் நெஞ்சில் வாங்கி வை


    என்னும் ‘சத்ரபதி’ படத்தின் பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது. எஸ்.ஏ ராஜ்குமாரின் ஒரு படத்தில் ஒரு ஹிட் என்னும் ஃபார்முலா சரிதான். பாடியவர்கள் யார் என்று சொன்னால் தன்யனாவேன்.

    பாடலைக் கேட்க: Music India OnLine – Chatrapathy (2004)

  • All About Blogger Internationalization: தமிழில் எப்பங்க வரப்போகுது?
  • தள்ளுபடி: சிறுகதை என்றால் ‘சொன்ன விதத்தில்’ ஏமாற்றம்.
  • இந்தியா டுடேயின் மதிப்பீட்டின் படி தயாநிதி மாறன் ஏழாவது ரேங்கைப் பிடித்திருக்கிறார். அஞ்சல் நிலையங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சீரமைத்தலையும் பி.எஸ்.என்.எல் – எம்.டி.என்.எல் இணைப்பையும் பாராட்டியிருக்கிறது. மத்திய அமைச்சரவை அமைத்தவுடன் பத்ரி அலசல் கொடுத்தது போல், மீண்டும் ஒரு ரிப்போர்ட் கார்ட் கொடுக்கலாம். (பத்ரியின் வலைப்பதிவில் எப்படி தேடுவது? கூகிள் தேடலும் முடியவில்லை; எல்லோருடைய ப்ளாக்ஸ்பாட் பதிவுகளிலும் வரும் ஒட்டுத் தேடல் பெட்டியும் காணவில்லை!)
  • உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இன்றைய பதிவு: தூக்குமரத்தின் நிழலிலிருந்து நாம் கற்கும் பாடம்.
  • Scary Snake Stories 

    Scary Snake Stories Posted by Hello

    Snake Playing Kids 

    Snake Playing Kids Posted by Hello

    Tampered Reebok DMX Car 

    Tampered Reebok DMX Car Posted by Hello

    Tampered Reebok DMX 

    Tampered Reebok DMX Posted by Hello

    Reebok actual car 

    Reebok actual car Posted by Hello

    Kids playing with Snake 

    Kids playing with Snake Posted by Hello

    Only Vimal… or Only Mukesh or Anil Ambani 

    Only Vimal… or Only Mukesh or Anil Ambani Posted by Hello

    பாம்பு – என்.சொக்கன்

    © தினம் ஒரு கவிதை

    டெல்லி.

    நகர மறுக்கும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பது, ஒரு கொடுமையான அனுபவம்.

    வண்டி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. போகவேண்டிய இடத்துக்கு சட்டென்று போய்ச் சேரலாம். அப்படியின்றி, நகராமல் ஒரே இடத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அப்புறம் நிதானமாக போய்க்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு, சாலையோரக் கடையில் ஒரு பீடியோ, பான் பீடாவோ வாங்கிச் சுவைக்கலாம். ஆனால், இதுவுமின்றி, அதுவுமின்றி நடுத்தரமாக, லேசாக ஊர்ந்தபடி, அத்தனை வாகனப் புகையும் நம் மூக்கிலும் வாயிலும் தாக்க, செல்வதறியாது நின்றிருப்பது என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத விஷயம்.

    ஆனால், என் விருப்பமும், விருப்பமின்மையும் கேட்டா எல்லாம் நடக்கிறது ? என்னுடைய ஆட்டோ மெதுவாக, மிக மெதுவாகதான் ஊர்ந்துகொண்டிருந்தது.

    அப்போதுதான், ஆட்டோவின் வலது பக்கத் திறப்பின்வழியே அவன் எட்டிப்பார்த்தான். பல நாள் தாடி நன்கு நரைத்திருந்தது, கழுத்தில் வகைவகையான மணி மாலைகளை அணிந்திருந்தான், அழுக்கான ஆடை, அதைக்காட்டிலும் அழுக்கான தலைப்பாகை. கையில் ஒரு கூடை.

    நான் அவனை கவனிப்பதை உணர்ந்ததும், அவன் சட்டென்று கையிலிருந்த கூடையைத் திறந்து காட்டினான். அதனுள் கோதுமை நிறத்தில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருந்தது. கூடையின் மூடியை, அதன் அடியிலேயே பொருத்திவிட்டு, அவன் அந்தப் பாம்பின் மையமாய்த் தட்ட, அது சடாரென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி படுத்துக்கொண்டது.

    அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது. மிகுந்த பயத்துடனும், லேசான அருவருப்புடனும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டு, ‘என்னய்யா இதெல்லாம் ?’, என்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

    அவன் தனது எல்லாப் பற்களையும் காட்டிச் சிரித்தான். ஆரோக்கியமான ஈறுகளிடையே மெலிதாக காற்றை வெளிப்படுத்தியவாறு மெல்லமாய் விசிலடித்துவிட்டு, ‘கையில இருக்கிறதில பெரிய நோட்டு எதுவோ அதை எடுத்து நாகராஜன்மேல வை ராசா’, என்றான், ‘எனக்கு ஒரு பைசா வாண்டாம், பணத்தைத் தொட்டு, நீயே எடுத்துக்கோ, அதிர்ஷ்டம் கொட்டும்’, என்றான் ஹிந்தியில்.

    நான் அவனை அலட்சியப்படுத்தியபடி, சட்டென்று வேறு பக்கம் திரும்பி, சற்றே நகர்ந்து அமர்ந்துகொண்டேன். ஆட்டோ டிரைவரும் அவனைச் சத்தமாய்க் கத்தி விரட்டினான்.

    ஆனால், அவன் நகர்கிற உத்தேசத்தில் இல்லை, மறுபடி மறுபடி என்னைத் தொந்தரவு செய்தான், ‘ஒரே ஒரு வாட்டி, எனக்குக் காசு வேண்டாம்’, என்று அவன் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் நான் மிகக் கோபமாகி, ‘போய்யா யோவ்’, என்று கத்திவிட்டேன்.

    என் கத்தலில், நான் தமிழன் என்று தெரிந்துகொண்டுவிட்டான். ஓட்டைத் தமிழில், ‘ஒரே ஒருவாட்டி காசு வெச்சுட்டு நீயே எடுத்துக்க சாமி’, என்றான்.

    சிறிது நேரம் முயன்றும், அவனைத் துரத்த முடியவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அந்தப் பாம்பின் தலையில் வைக்க முயன்றேன்.

    என் கைகள் படபடவென்று நடுங்கிக்கொண்டிருக்க, நான் அந்தப் பாம்பை நெருங்கும் நேரத்தில், அவன் சட்டென்று என் கையைப் பிடித்துக்கொண்டுவிட்டான்.

    Seerum Paambai Nambu behind Reebok Car ;-)பயத்தில் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது, கைக்கெட்டும் தூரத்தில் பாம்பு. அதைவிட முக்கியமாய், அதனுடைய வாய்க்கெட்டும் தூரத்தில் நான். ஒரு போடு போட்டால், நான் என்ன ஆவேனோ, பயத்தில் எனக்கு மயக்கமே வராத குறைதான்.

    ஆனால், அவன் கொஞ்சமும் அசையாமல் என் கையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தான், முன்னே, பின்னே, வலது, இடது நகர்த்தமுடியாதபடி உடும்புப் பிடி.

    ‘யோவ், விடுய்யா’, என்று கதறினேன் நான். இப்போது சோம்பலாய்ச் சுருண்டிருக்கிற பாம்பு (ஏன் சோம்பல் ? இப்போதுதான் யாரையோ கடித்து விழுங்கியிருக்கிறதோ ? அந்தப் பாம்பு என் விரலில் தொடங்கி, என்னை மொத்தமாகச் சுருட்டி விழுங்குவதுபோல் ஒரு பிம்பம் உள்ளே தோன்றியது !) எப்போது அசையுமோ, எப்போது என்னைப் பிடுங்குமோ தெரியவில்லையே.

    என் கதறலைக் கண்டுகொள்ளாதவனாக, அவன் என் கையை இறுகப் பிடித்தபடி இருந்தான், ‘காசு தந்துடறேன் விடுய்யா’, என்றபோதும் விடவில்லை. எதுவும் பேசவும் இல்லை.

    சிக்னலில் பச்சை விழுந்துவிட்டது. என் ஆட்டோ கிளம்பிவிட்டது, ஆனாலும், அவன் என் கையை விடவில்லை. இறுகப் பிடித்துக்கொண்டுதான் இருந்தான். நான் அந்தப் பாம்பை பயத்தோடு பார்த்தேன், பாம்பு கொத்தி உயிர் போகவேண்டும் என்று என் ஓலையில் எழுதியிருக்கிறதோ என்னவோ.

    கடைசியில், வேறு வழியில்லாமல், என் கையிலிருந்த காசை நழுவவிட்டேன். அது அந்தப் பாம்பின் தலையில் அபத்திரமாய்ச் சென்று விழுந்ததும், அவன் சட்டென்று என் கையை விடுவித்துவிட்டான். என் ஆட்டோவும் விரைவாக சிக்னலைக் கடந்தது.

    அதன்பின், நெடுநேரத்துக்கு அவன் சென்ற வழியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இன்னும் என் பதட்டம் அடங்கியிருக்கவில்லை. ஒரு பெரிய வாழ்வு – சாவு விவகாரத்திலிருந்து தப்பியதுபோல் ஒரு உணர்வு. அநியாயமாய்ப் பிடுங்கியதுதான். என்றாலும், அதற்கு ஐம்பது ரூபாய் தரலாம் என்றுதான் தோன்றியது.

    நன்றி: Yahoo! Groups : dokavithai

    நன்றி வழங்கல்

    நாலு நாள் பயணம். கால் அலுக்க சுற்றினாலும் திகட்டாத நியு யார்க் நகரமும் அது சார்ந்த ஜெர்ஸி தமிழர் பிரதேசங்களும். கல்லூரி நண்பர்கள். புத்தம்புது இணையத் தோழர்கள். புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கத் தொடர்புகள். இன்பமாக கழிந்த நான்கு நாட்கள்.

    நியு யார்க் ஃப்ளஷிங் கோவில் மனதுக்கு மிகவும் முக்கியமானது. வேலை இன்னும் கிடைக்காத ‘பென்ச்’ தேய்த்த காலத்தில் ஒரு விஸிட் அடித்தவுடனேயே, இண்டர்வ்யூ முடிந்து, வேலையும் வாங்கிக் கொடுத்த பெரிய பிள்ளையார். திருப்பதிக்கு போகும் வழியில் திருத்தணி இருப்பதால், முருகருக்கு அரோகரா போல், நியு யார்க் போகும் வழியில் ஃபளஷிங் விநயகருக்கும் பரிவாரங்களுக்கும் சல்யூட் எப்போதும் உண்டு. இந்த முறை மேசீஸ் தேங்க்ஸ் கிவிங் பரேட் பார்க்க செல்வதால் அவரை சாய்ஸில் விட்டு விட்டோம்.

    போகும் வழி கனெக்டிக்கட்டில் புதிதாய் முளைத்திருக்கும் சத்யநாராயணாவை தரிசித்தோம். எளிமையான கோவில். ‘ஹரே க்ருஷ்ணா’ போல் ஹிப்பித் தலை வட இந்திய ஸ்டைல் ராமர், கிருஷ்ணர். ராதைக்கு கால் வரை நீளும் தலைமுடி. ஜெயின மதத்துத் துறவிகள் ‘ஏன் பப்பிஷேம் ஆக இருக்காங்க?’ என்னும் கேள்விக்கு நீட்டிமுழக்கினேன். அடுத்து துர்கை கையில் பளபளக்கும் விருமாண்டி வீச்சருவாவும் பூசி மெழுக வைத்தது.

    கோவிலில் பிடித்த விஷயம், சூரிய ஒளி எப்பொழுதும் உள்ளே விழும் அமைப்பு. இயற்கை ஒளியை அதிகம் உபயோகப் படுத்திக் கொண்டது ஒரு வித சாந்நித்தியத்தைக் கொடுத்தது. நவக்கிரங்களின் படு திருத்தமாக ஒன்பது பேரும் காட்சியளித்தார்கள். உருவம், வாகனம், அணிகலன்கள், ஆயுதங்கள், அனைத்தும் உருவங்கள் கொண்டிருந்தது.

    அங்கிருந்து கிளம்பி கனெக்டிகட் மிடில்டவுன் உடுப்பியில் சாப்பிட்டவுடன் ஸியஸ்டா மயங்க நினைத்தாலும், கடமை அழைப்பதால் டிரைவர் வேலையைத் தொடர்ந்தேன். நாங்கள் செல்வதற்குள் நியு யார்க் நகர அணிவகுப்பு முடிந்து விடும் என்பதால், நேராக கல்லூரி நண்பனின் வீட்டிற்கு வண்டி செலுத்தினேன். எல்லாரும் உறவோடு வான்கோழி உண்பதற்காக மூட்டை முடிச்சுகளுடன் சென்று கொண்டிருந்தார்கள். எள் போட்டால் எண்ணெயாகும் அளவு ட்ராஃபிக்.

    நண்பனின் வீட்டில் உண்டு கதைத்தவுடன் அனைவரையும் மகிழ்விக்க ‘How to lose a guy in 10 days’ திரையிட்டோம். மனைவிகள் எவ்வாறு எங்களை இயல்பாக தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள் என்பதை சிரிப்போடு சொன்ன படம். தமிழில் சூர்யாவும் ரீமா சென்னும் நடித்தால் அமோகமாக ஹிட் ஆகும்.

    அடுத்த நாள் காலையிலேயே நகரமையத்துக்குக் கிளம்பத் திட்டமிட்டிருந்தோம். குழந்தைகளுடன் கிளம்புவது தனிக்கலை. அவர்கள் காலணி, கோட் எல்லாம் அணிவிப்பது முதல் கட்டம். உருட்டுகட்டையாகத் தூக்கிச் சென்று கார் இருக்கையில் அமர்த்தி பெல்ட் போடுவது அடுத்த நிலை. போட்ட பின் வண்டி ஓட ஆரம்பித்த அறுபத்தி ஏழாவது விநாடியில் ‘potty’, ‘மூச்சா’ என்று விதவிதமாக குரல் கொடுப்பதை இருபத்தி இரண்டு நிமிடங்கள் சமாளிப்பது சிறப்பு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முடிவது மோன நிலை.

    இவற்றையெல்லாம் திடீரென்று ஒரு நாள் செய்ய நேருவது விபரீத நிலை.

    அன்று அம்மாக்கள் நியு யார்க் நகர மையத்தில் ஷாப்பிங் செய்ய, நாங்கள் வாண்டுக்களை சமாளித்தோம். உணவு கொடுப்பது, தூக்கம் செய்வது போன்றவற்றை ஆண் மகன் செய்யும் விதத்தை ஆடம் சாண்ட்லர் ‘Big Daddy’யில் சொல்லிக் கொடுத்த விதம் செய்து முடித்தேன். நடுவில் அனாதரவாக மகளிர் காலணி இரண்டு ஜதை நிறைந்த பையைப் பார்த்து பதைபதைத்தோம். காவலரிடன் சென்று முறையிட்டால், எங்களை சந்தேகப் பார்வை பார்த்தபடி, ஷூ தங்களுக்குப் பொருந்துமா, கேர்ள்ஃப்ரெண்ட்களுக்குப் பொருந்துமா, என்று பொருத்தம் பார்த்து எடுத்துக் கொண்டார்கள்.

    மனைவிகள் பத்து டாலருக்கு குளிர்கால ஆடைகள் கிடைக்கும் இடங்களுக்கும், பத்து மடங்குக்கு அதிகம் விலைக்கு கைப்பை விற்கும் இடங்களுக்கும் சென்று மிதிபட்டு, பிழியப்பட்டு திரும்பினார்கள். ஆறு வயதுக்குக் கீழ் வயதிருந்தால் பல இடங்களுக்கு செல்ல முடியாது. ஐ.நா. சபை பர்வையிடுதல், என்.பி.சி. தொலைக்காட்சி ஸ்டூடியோக்களைப் பார்வையிடுதலும் இதில் அடக்கம். நாங்கள் அடக்கமாக ஒரு நாளாவது முழுக்க முழுக்கக் குழந்தையைக் கவனிக்கிறோம் என முன்வந்தோம். குடும்ப உறுப்பினர்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க, சோர்வுடன் ஆண்கள் வீடு திரும்பியது அதிசயம்.

    அடுத்த நாள் தமிழோவியம் கணேஷ் சந்திரா, எடிட்டர் மீனாக்ஷியின் சந்திப்பு. சிரிக்கும் புத்தர்களும் குடைப் பிள்ளையார்களும் பீங்கான் பொம்மைகளும் நிறைந்த வரவேற்பறை. காதிகிராஃப்ட் ஷோரூம் போன்ற ரம்மியமான தேர்வுகள் கொண்ட அலங்கரிப்புகள். அவற்றில் ரசித்ததையெல்லாம் என் பெண் சுட்டிக்காட்ட ‘உனக்கே உனக்காக எடுத்துக் கொள்’ என்று அன்பு மழை.

    தமிழோவியத்தில் எழுதிய சமையல் குறிப்புகளை எல்லாம் செய்து காட்டி அசத்தியிருந்தார். மூக்குப் பிடிக்க சாப்பிட்டது போக, கண்ணையும் பிடிக்குமளவு பாயசத்துடன் உணவு. வழக்கம் போல் வலைப்பதிவுகளின் சூடான நிகழ்வுகள், முகமூடி அலசல் கொண்ட இலக்கிய உரையாடல்.

    நியு ஜெர்ஸியில் எம்.எல்.ஏ.வுக்கு நின்றால் கணேஷ் சந்திரா ஜெயித்துவிடுவார். ஓக் ட்ரீ ரோடில் சிடிக்களும் காராசேவுக்களும் கதகளி பொம்மைகளும் மேய்ந்த கடைகளில் எல்லாம் விதம் விதமாக கணேஷ் சந்திராவை நலம் விசாரித்தார்கள். அவர் பேரைச் சொன்னால், பாதிக் கடைகளில் தள்ளுபடி விற்பனை கிடைக்கும்.

    பாஸ்டன் டு நியு யார்க் நான்கு மணி நேரப் பயணம். திரும்பி வரும்போது அனைத்து கார்களும் விரும்பும் I-95 நெடுஞ்சாலைத் தொடாவிட்டாலும் ஏழு மணி நேரம் ஆகிப்போனது. அடுத்த முறையாவது இந்த முறை சந்திக்க இயலாத நட்புகளைப் பார்க்க வேண்டும்.

    திரும்பி வந்து யாஹுவைத் திறந்தால் அதிகம் தனி மடல்கள் இல்லை. முன்பெல்லாம், இவ்வாறு நான்கு நாட்கள் இணையத் தொடர்புத் துண்டித்து வாழ்ந்தால், குறைந்தது ஐம்பது நண்பர்களிடமிருந்து, பதிலெழுத வேண்டிய மின்மடல்கள் நிறைந்திருக்கும். வலையில் பதிவதாலோ என்னவோ இது போன்ற நண்பர்களின் ஊடாட்டம் குறைந்திருக்கிறது. இந்தப் புது வருடம் புதிய சபதம் ஏதாவது எடுக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நட்பையாவது தொலைபேசி மூலம் புதுப்பித்துக் கொள்வது என்று ஏதாவது எடுத்து பின்பற்றுவேன்.

    மீதமுள்ள மின்மடல்களைக் களைந்ததில் தி ஹிந்துவில் என் வலைப்பதிவு பற்றிய குறிப்பு இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

    நன்றி திலோத்தமா.

    நண்பரின் இல்லத்தில் பார்த்த ‘சிற்றகல்‘ புத்தகம் வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நூற்றியேழு கவிஞர்கள். 211 கவிதைகள். பூமா ஈஸ்வரமூர்த்தியும் லதா ராமகிருஷ்ணனும் தொகுப்பாளர்கள். மரத்தடியில் எஸ்.பாபு வழங்குவது போல் சிற்றிதழ் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். குழு மனப்பான்மை இல்லாமல் எல்லா ரகங்களும் கொண்டிருக்கிறது.

    இன்று நவீன தமிழ்க் கவிதையின் பல்வேறு தொனிகள், போக்குகள், கருப் பொருட்கள், பாணிகள் முதலியவை குறித்த அறிமுகத்தையும் பரிச்சயத்தையும், அதன் வழி அவற்றிற்கான ரசனையையும் பரவலாக்க பல கவிஞர்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு அவசியம்” என்கிறார் லதா ராமகிருஷ்ணன்.

    தினம் ஒரு கவிதை, தினம் ஒரு சொல் போல் தினம் ஒரு கவர்ந்த பதிவை (blog post) யாராவது கொடுக்கலாம். அந்த வார நட்சத்திரமாகவோ, குறிஞ்சி மலர் போல் பதிபவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. விருப்பம் கொண்ட அனைவருமே, தங்கள் வலைப்பதிவின் ஓரத்தில் தங்களைக் கவர்ந்த அன்றைய பதிவை இடலாம்.

    இன்று தமிழ்வலையை நுனிப்புல்லியதில் அமெரிக்காவில் வாழும் மனைவிகளின் கதி என்னைக் கவர்ந்தது. நிறைய எழுதவேண்டிய, பேசப்படவேண்டிய சமாச்சாரம்.

    குட்நைட் சொல்லி உறங்கச் செல்லுமுன் இந்த வார நட்சத்திரமாக்கியதற்கு என்னுடைய நன்றி. மீண்டும் உங்களை வணங்கி வலைப்பதிவதில் மகிழ்கிறேன். இந்த வாரம் முழு ஐந்து நாட்களும் வேலை. மூன்று வார வேலை நாட்கள் கொண்ட போன வாரத்தில் இருந்து நிறைய வித்தியாசம். பளுவைத் திணிக்கும் வாரம். இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

    என்னைக் குறித்த அறி(மறு)முகம்

    என்னுடைய செய்திக் கோவை (ஆங்கிலம்)