விபத்தில் அடிபட்ட
எவனோ ஒருவனைக் காட்டிலும்
அதிகமாக நீ அலறிய அன்றுதான்
என் அன்னை என்றும் உணர்ந்தேன்
உன்னை!
– ஜெயபாஸ்கரன்
ரயில் சென்றுவிட்ட
கடைசி நொடியின் நிசப்தத்தில்
பேச ஆரம்பிக்கிறேன்…
ரயிலில் சென்றுவிட்ட
உன்னிடம்.
– வீரமணி
திருவிழாவில்
தேர் பார்க்கச் சென்று
தேவதை பார்ப்பவர்களைத்
தெய்வங்களே நினைத்தாலும்
காப்பாற்ற முடியாது.
– முருகன்
கைதொட்டு தூக்கும்வரை
கதறிக் கொண்டிருக்கும்
தொலைபேசியைப் போன்றது
என் காதல்
கைதொட்டுத் தூக்கியதும்
கதறத் தொடங்கும்
குழந்தையைப் போன்றது
உன் காதல்.
– யுகபாரதி
பூமி
சூரியனைச் சுற்றினால்
வருஷம்!
தேர்
ஊரைச் சுற்றினால்
திருவிழா!
தீ
திரியைச் சுற்றினால்
வெளிச்சம்!
காற்று
உடலுக்குள் சுற்றினால்
உயிர்!
உயிர்
உயிரைச் சுற்றினால்
காதல்!
நீ என்னையும்
நான் உன்னையும்
சுற்றுவதே வாழ்க்கை!
– தாஜ்
பார்த்தாலே போதும்
பள்ளிக்காதல்.
பேசாமல் தீராது
+2 வில்.
கடிதங்களால் துவங்கும் கல்லூரி
தொட்டுக் கொள்வதாக
கனவுகள் வரும் அப்போது.
முத்தங்களும் போதாது
பிறகு.
– செழியன்
மூவர் அமரும்
இருக்கையில்
உனக்கும் எனக்குமிடையே
சம்மணமிட்டமர்ந்த
உன் வெட்கத்திற்கு
எத்தனை டிக்கெட் எடுப்பது?
– சையத் அலி
சூரியன் இல்லாத
வானவில்லும்..
நிலவு இல்லாத
பௌர்ணமியும்..
இனிப்பு இல்லாத
சர்க்கரையும்..
மணல் இல்லாத
பாலைவனமும்…
ரசிக்கப்படும்,
என்னோடு
நீயிருக்கும் பட்சத்தில்!
– தாஜ்
எங்கோ ஒரு கடையில்
காதல் விற்பது தெரிந்து
திரண்டது கூட்டம்
கடையின் கதவில்
சாவியில்லாத பூட்டு
காத்திருப்பவர்கள் கையில்
செல்லாத நோட்டு
– கவிதா பாரதி
எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்,
இருவரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
–சுகிர்தராணி
ரயில்வே சர்வீஸ் கமிஷனோ…
பேங்க் எக்ஸாமோ…
ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனோ…
எந்தப் பரீட்சைக்குப்
போனாலும்
பெஞ்சுகளில் பொறித்த
பெயர்கள்
பால்யத்தை நினைவுறுத்தி
பரீட்சையில்
ஃபெயிலாக்குகிறது..!
– சி.முருகேஷ்பாபு











hi
I am Jeyaram. I really loved all the thoughts in form of words which cant be compared with one another. Really I loved it. Specially by Veeramani,YugaBarathi, SYEDALI,Kavitha,Sukitharani, MukeshBabu are really great. fine fine fine