Daily Archives: ஓகஸ்ட் 19, 2004

(மீண்டும்) விகடன் – சுவடுகள்

விபத்தில் அடிபட்ட

எவனோ ஒருவனைக் காட்டிலும்

அதிகமாக நீ அலறிய அன்றுதான்

என் அன்னை என்றும் உணர்ந்தேன்

உன்னை!

ஜெயபாஸ்கரன்



ரயில் சென்றுவிட்ட

கடைசி நொடியின் நிசப்தத்தில்

பேச ஆரம்பிக்கிறேன்…

ரயிலில் சென்றுவிட்ட

உன்னிடம்.

வீரமணி



திருவிழாவில்

தேர் பார்க்கச் சென்று

தேவதை பார்ப்பவர்களைத்

தெய்வங்களே நினைத்தாலும்

காப்பாற்ற முடியாது.

முருகன்



கைதொட்டு தூக்கும்வரை

கதறிக் கொண்டிருக்கும்

தொலைபேசியைப் போன்றது

என் காதல்

கைதொட்டுத் தூக்கியதும்

கதறத் தொடங்கும்

குழந்தையைப் போன்றது

உன் காதல்.

யுகபாரதி



பூமி

சூரியனைச் சுற்றினால்

வருஷம்!

தேர்

ஊரைச் சுற்றினால்

திருவிழா!

தீ

திரியைச் சுற்றினால்

வெளிச்சம்!

காற்று

உடலுக்குள் சுற்றினால்

உயிர்!

உயிர்

உயிரைச் சுற்றினால்

காதல்!

நீ என்னையும்

நான் உன்னையும்

சுற்றுவதே வாழ்க்கை!

தாஜ்



பார்த்தாலே போதும்

பள்ளிக்காதல்.

பேசாமல் தீராது

+2 வில்.

கடிதங்களால் துவங்கும் கல்லூரி

தொட்டுக் கொள்வதாக

கனவுகள் வரும் அப்போது.

முத்தங்களும் போதாது

பிறகு.

செழியன்



மூவர் அமரும்

இருக்கையில்

உனக்கும் எனக்குமிடையே

சம்மணமிட்டமர்ந்த

உன் வெட்கத்திற்கு

எத்தனை டிக்கெட் எடுப்பது?

சையத் அலி



சூரியன் இல்லாத

வானவில்லும்..

நிலவு இல்லாத

பௌர்ணமியும்..

இனிப்பு இல்லாத

சர்க்கரையும்..

மணல் இல்லாத

பாலைவனமும்…

ரசிக்கப்படும்,

என்னோடு

நீயிருக்கும் பட்சத்தில்!

தாஜ்



எங்கோ ஒரு கடையில்

காதல் விற்பது தெரிந்து

திரண்டது கூட்டம்

கடையின் கதவில்

சாவியில்லாத பூட்டு

காத்திருப்பவர்கள் கையில்

செல்லாத நோட்டு

கவிதா பாரதி



எனக்கான கேள்வி

உன்னிடத்திலும்

உனக்கான பதில்

என்னிடத்திலும்,

இருவரிடமும்

எதுவும் இல்லையென

பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

சுகிர்தராணி



ரயில்வே சர்வீஸ் கமிஷனோ…

பேங்க் எக்ஸாமோ…

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனோ…

எந்தப் பரீட்சைக்குப்

போனாலும்

பெஞ்சுகளில் பொறித்த

பெயர்கள்

பால்யத்தை நினைவுறுத்தி

பரீட்சையில்

ஃபெயிலாக்குகிறது..!

சி.முருகேஷ்பாபு

நகைச்சுவை தவிர

கையில் நாற்பத்து நாலே ரூபாய் – ரா கி ரங்கராஜன்: “முன்பெல்லாம் கைதிகள், குற்றவாளிகள் என்றால் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். இங்கே குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதைக் காண மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தச் சமுதாயச் சீர்கேட்டுக்கு யாரைக் குற்றம் சொல்வது?”

இங்கே ஒரு பட்டிமன்றம் பாரீர் – துக்ளக் சத்யா:

நடுவர் கான்ஸ்டபிள் கந்தசாமி: ‘இலக்கியத்திலே குழப்பங்கள் ஏற்படப் பெரிதும் காரணம் ஆண்களா, பெண்களா?’-ன்னு தலைப்புக் கொடுத்திருக்காங்க. இது ஒரு மாமூலான பட்டி மண்டபம் இல்லை. மாமூல் மாறி இருக்கிறது. உங்க கம்ப்ளெய்ண்ட்ஸெல்லாம் பதிவு பண்ணிக்கிறேன். கடைசியிலே, எப்படித் தீர்ப்பு சொல்லணும்னு உத்தரவு வருதோ, அப்படியே தீர்ப்புச் சொல்லிடறேன். இப்ப கேஸ் எப்படிப் போவுதுன்னு விட்னெஸ் பண்றதுதான் என் வேலை.

லெண்டிங் லைப்ரரி: “குடும்ப நாவல் – ஜூலை வெளியீடு./அவள் விகடன் – ஆகஸ்ட் 13, 2004/ஆனந்த விகடன் 15.08.2004”

இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி: “தனக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி – முடிவில் அந்தப் பொய்களும், அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் – அவருக்கு ஒருங்கே சலித்துப் போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப்புகழ் கூட அவருக்கே அருவருப்புத் தட்டிவிட்டது. பரந்த சிந்தனையும் மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற போது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக இப்போது அவர் விமர்சகராகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன.”

அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை:

“நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகை என்ப வாய்மைக் குடிக்கு

– குறள்”

நன்றி: appusami.com

அத்தாளநல்லூர் ஆண்டாள் – kalki: வெளியேறுகையில், இந்தியாவின் எண்ணற்ற அத்தாளநல்லூர்களையும், அடிப்படை வசதிகள்கூட இன்றி அவற்றில் வாழ்ந்து, இறைப்பணி செய்யும் பட்டர்கள், குருக்கள்மாரையும் எண்ணி நன்றி செலுத்தத் தோன்றுகிறது. இந்த தேசத்தின் பண்புகளோடு உயரிய எளிமையையும் கட்டிக் காப்பவர்கள் அல்லவா…?

நேசமுடன் – ஒழுக்கம்

ஒழுக்கம் – இது வேறு



அதுவும் குறிப்பாக ஆணின் குரலாகத்தான் இது எங்கும் ஒலிக்கிறது.

இந்தியாவில் இந்த கருத்து உண்மையாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் ஆண்களும், பெண்களும் சம அளவில் ‘ஒழுக்கக் கேட்டு’க்காக விமர்சிக்கப் படுகிறார்கள். ஜனரஞ்சகம் என்றால் கிசுகிசு, அந்தரங்கத் தகவல்கள், கிளுகிளுப்பான வர்ணனை என்பதை எழுதப்படாத விதியாகவே அனைத்து ஊடகங்களுக்கும் வைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இந்த மாதிரி ‘ஒழூங்கீனங்களை’ அம்பலப்படுத்துவதாக கடந்த நாட்களில் அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்ட விஷயங்கள் சில:

* ஜேம்ஸ் பாண்ட் நாயகி, ‘Catwoman’ ஹாலி பாரியின் கணவர் எரிக் பெனெ வேறு சிலருடன் உறவு கொண்ட விவகாரம். எங்கே ஊர் சுற்றினார்கள் என்பதை ஆர்வத்துடன் எழுதினார்கள்.

* ‘Kill Bill’ நாயகி உமா தர்மனின் காதலர் ஈதன் ஹாக், கனேடியன் மாடலுடன் காணப்பட்டதால், காதல் உடைந்த விஷயம். ஆஸ்கார் விருது பெற்ற ‘Training Day’ போன்ற படங்களில் ஈதன் ஹாக் நடித்துள்ளார்.

* முன்னாள் உலக அழகி மற்றும் நடிகை வனேஸா வில்லியம்சூக்கும் ரிக் ஃபாக்ஸுக்கும் இடையேயான விவாகரத்து மனு. ஏன் மணமுறிவு கோரினார் என்ற விவரமான அலசல்கள்.

இதே போல் கூடைப்பந்து நட்சத்திரம் கோபி ப்ரையண்ட், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸுக்கும் அவரது காதலிக்கும் நடக்கும் அந்தரங்கங்கள் போன்றவற்றையும் அமெரிக்கப் தினசரிகளும் பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதுகிறது.

என்னுடைய கேள்விகள்:

1. இருபாலாரும் ஒழுக்கக்குறைவு ஏற்படக் காரணகர்த்தாக்களாக சுட்டிக் காட்டப்படுவது விரும்பத்தக்க மாற்றமா?

2. மணமுடித்தபிறகு மற்றவரின் மேல் ஈர்ப்பு வந்தால் அது ஒழுக்கக் குறைவா?

3. வாய்ப்பு இருப்பதால் பயன்படுத்திக் கொள்வோரும், வாய்ப்புக் கிடைக்காததால் படித்துத் தீர்த்துக் கொள்வோரும் ஒரே ரகம்தானே?

4. ஆண்களுக்கானப் பத்திரிகையில் பெண்ணும், பெண்களுக்கானப் பதிப்புகளில் ஆணும் போகப் பொருளாக சித்தரிக்கப்பட்டால் ‘equal opportunity discrimination’ என்று சொல்லலாமா?

5. டாக்டர் பிரகாஷ், பிரேமானந்தா போன்ற தவறிழைத்த ஆண்களை விவரணப்படுத்தியும், சிம்பு போன்ற நடிகர்களை கொச்சைப்படுத்தியும் ரிப்போர்ட் வருகிறதே?

கற்பனை செய்து கதை கட்டிப் பேசுவதில் சுகம் காண்பவர்கள் எல்லா நாடுககளிலும், ஆண், பெண் இருவர்களிலும், இருக்கிறார்கள். இந்தியப் பாரம்பரியம் என இல்லாமல் உலகளாவிய அளவில் ஆண் அத்தனை பேரும் ஸ்ரீராமன் என்று கற்பனை கொள்வதைப் போலவே பெண் அத்தனை பேரும் சீதை என்றும், சலனமே ஏற்படதாவர்கள் என்றும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

-பாஸ்டன் பாலாஜி