Daily Archives: ஓகஸ்ட் 17, 2004

விகடன் (சுவடுகள்)

பாஸ்கி

”என்னன்னே தெரியலே… எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் உன்னை பார்க்கறா மாதிரியேதான் இருக்கு!”

”சரிதான். இதையே சாக்கா வெச்சுக்கிட்டு பல பேரோட சுத்தறதை முதல்ல நிறுத்துங்க!”



கற்றதும் பெற்றதும் – சுஜாதா

வழக்கம்போல் ஹைக்கூ கொடுத்து உங்களைப்படுத்தாமல், பெர்சிவல் பாதிரியார் 1874-ல் வெளியிட்ட தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூலில் சில வழக்கொழிந்த பழமொழிகள் தருகிறேன். ஹைக்கூவைவிட உண்மையாக இருக்கின்றன.

காசுக்கு ஒரு புடவை

விற்றாலும் நாயின்

‘…’ அம்மணம்

கொக்கு இளங்குஞ்சும்

கோணாத தெங்கும்

கண்டதில்லை

தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்

மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?

வெட்கப்படுகிற வேசியும் வெட்கம்கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்.



நெட் மொழிகள்

குணமான பிறகு ஒவ்வொரு நோயாளியும் ஒரு டாக்டரே.

விளக்குமாற்றுக்குத்தான் தெரியும் வீட்டின் அழுக்கு.

நிறைந்த வயிற்றுக்கு எப்போதும் புரியாது பசித்த வயிறு.



வாக் போகையிலே… – மெரீனா

”என்ன சார், ஈவினிங் வாக்கா?”

”ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”



ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா

ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.

உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.

காதல் எப்போதும் – செழியன்

வீட்டில் யாருக்கும் தெரியாமல்

நள்ளிரவில் கண்விழித்து

உனக்குக் கடிதம் எழுத

விருப்பம் என்றேன்.

தீர்ந்த மைப்புட்டியில்

இரண்டு மின்மினிகளை அடைத்து

மேசைவிளக்கெனப்

பரிசளிக்கிறாய்.

கவிதையானதுதான் காதல்

எப்போதும்.

முதல் முத்தம் புறங்கையில்.

இரண்டாவது

ஃபேர் அண்ட் லவ்லி மணக்கும்

கன்னத்தில்.

மங்கிய இரவில்,

பூங்காவில்

தற்செயலாய் நீ

முகம் நிமிர்ந்த கணத்தில்

மூன்றாவது.

முத்தத்தை விடவும் இனிமையானது

பின் நிகழும் மௌனம்.

அவஸ்தையானதுதான் காதல்

எப்போதும்.

முத்தம் கேட்டால்

காகிதத்தில் முத்தமிட்டுக்

கடிதம் தருவாய்.

சிறுதுயில் கொள்ள

உன்மடி கேட்டால்

நீண்ட கனவுகள் தருவாய்.

உடனிருக்கும் வாழ்க்கை

கேட்டால்

முழுவாழ்க்கைக்குமான

நினைவுகள் தருவாய்.

ஏமாற்றமானதுதான் காதல்

எப்போதும்.

Thanks: vikatan.com