Daily Archives: ஓகஸ்ட் 16, 2004

விமர்சனம் எழுத வேண்டிய ஹாலிவுட் படங்கள்

  1. The Accidental Tourist: அமைதியான படம். முடிவு ஏமாற்றமளிக்கிறது, ஆண்,பெண்களின் திருமண உறவின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நன்கு அலசும் படம்.
  2. Duplex: தயவு செய்து பார்க்காதீர்கள். ஏன் என்று எழுதலாம்.
  3. Adaptation: நான் ஒருவிதமாகப் புரிந்து சிலாகித்தேன். என் மனைவி இன்னொரு விதமாய் புரிந்து கொண்டு ரசித்தாள். உங்கள் ரசனை எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்.
  4. Y tu mama tambien: ஸ்பானிஷ் படங்களுக்குத் தப்பாமல் கொச்சைப்படுத்தபடும் உறவுமுறைகள், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள், அடவைஸ் கொடுக்கும் தோரணை என்றிருந்தாலும், முடிவு என்ன என்று பார்த்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து மறுவாசிப்பைக் கோரும் படம்.
  5. Mulloholland Drive: வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. ஆய்த எழுத்தை ஆராதித்தால், இந்தப் படத்தையும் இரு முறை பார்க்கலாம்.
  6. Bend it like Bekham: நார்மல் படம். நம்ம ஊரு கதை.
  7. Road to Perdition: டாம் ஹான்க்ஸ் உருப்படியாக நடித்த (அரிதான) படம். அந்தக் கால நடை உடை சமாசாரங்களை இம்மி பிசகாமல் கொண்டு வந்ததற்காகவே கை தட்டலாம் என்றலாம், சிறப்பான திரைக்கதை, முடிவு என்று பலதையும் சொல்ல வேண்டும்.
  8. Inventing the Abbotts: ஜெனிஃபர் கானலி சிந்தனையைத் தூண்டாவிட்டாலும், உளவியல் அலசல்களை சப்-டெக்ஸ்ட்டாக சொல்லுகிறார்கள். உண்மை என்ன என்று தோண்டித் துருவுகிறோம்; தெரிந்து விட்ட அடுத்த விநாடியில் புழுவாய்த் துடிக்கும் சில கதாபாத்திரங்களின் ஆய்வு.
  9. Bruce Almighty: ஒரே ஒரு தபா பார்க்கலாம். அற்புதமாக எடுக்கப் படவேண்டிய கதையை எவ்வாறு கொடுமை படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள. நல்ல கரு; மோசமான திரைக்கதை + படத்தொகுப்பு!
  10. Chicago: நொடிக்கொரு பாடல் வந்தாலும், அலுக்காமல், ஒவ்வொன்றிலும் அசத்திய, தியேட்டர் டிராமாவைத் தழுவிய படம். ஒரிஜினலைப் பார்த்து விட்டு படத்திற்கு இண்ட்ரோ கொடுக்க வேண்டும்.

மறுமொழிக் கவியருவி

நடக்கும் ஐ.பி.கே.எஃப் விவாதம் (163) கஞ்சி சித்தர்களை (170) மறுமொழிகளில் மிஞ்சிவிடும் போல் இருக்கிறது. எட்ட நின்று பார்த்ததில் எனக்குத் தோன்றியவை சில:

1. தமிழ்ப் படைப்பாளிகளின் சமூக இருப்பு:

ஒரு படைப்பாளி எல்லாப் பிரச்சினைகளிலும் தனது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒருவருக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அல்லது அப்படியே இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. தன்னுடைய நிலைகளையும் கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை உரிமையே. ஆனால் ஒரு சமூகம் நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் மீறப்படும்போதுகூட ஒருவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்ற நிலை அந்த நியாயங்களை அழிப்பவர்களை ரகசியமாக ஆதரிப்பதாகிவிடும்.

மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூடத் தமிழ் எழுத்தாளர்களிடையே அவர்களது தனிப்பட்ட உறவுநிலைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. (‘கலைஞரின் கைது வைபவத்தின் போது… மனுஷ்யபுத்திரன்)

2. பலரும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட முடிவுரைகளை மனதில் வைத்துக் கொண்டுதான் மறுமொழியவே ஆரம்பிப்பது போல் தோன்றுகிறது.

3. ஒருவரின் எழுத்தை வைத்து, (கருப்பொருளை விட்டுவிட்டு) தனிமனிதரை குறித்த அபிப்ராயத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

4. மறுமொழிப் பெட்டியில் பதில் கொடுப்பதை விட சொந்த வலைப்பதிவில் எழுதுவதால், எழுத்துக்கள் கோர்வையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

5. ஈழ வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் களத்தில் இறங்கி, தங்களின் இரண்டு செண்டுகளை சொன்னார்கள். இந்தியத் தமிழர்களில் ஒரு சிலரே மௌனம் கலைத்தனர். ஏன் என்பது புரிவது போல் இருந்தாலும், ‘நோநோ’க்களும், ‘நேமில்லை’க்களும், ‘அனானிமஸ்’ திருவாய்மொழிகளும் முகம் கலைக்காதது ஏன் என்று குழப்பமாகவே இருக்கிறது.

6. அசிங்கமான வார்த்தை சொல்லி அழைத்தால், மறுத்துப் பேசுபவர்களும், கிட்டத்தட்ட அதே லெவலுக்கு இறங்குவது நாகரிகமா அல்லது ‘விடாக்கண்டன் – கொடாக்கண்டன்’தனமா என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி வருகிறேன்.

7. முகமூடி போட்ட ரியல் முகங்களுக்கும், அமைதி காத்தோரும், இட்லி-வடை போல பெரிய மனுஷத்தனத்தோடு கலந்துகொண்டவர்களை நான்கு வருடம் கழித்து ‘சுட்டி’க்காட்டி உரல் கொடுப்பார்கள்.

8. கும்புடு போட்டு பேச்சு வெட்டியாகாமல், செயல்திட்டமாகவோ, ஒவ்வொருவரின் எண்ண முடிவுரைகளாகவோ இல்லாமல், அங்கும் இங்கும் சிதறலாகவே நின்று விடுகிறது. (இதற்கும் காரணம் ஓரளவு ஊகிக்க முடிகிறது: இந்த மாதிரி ‘resolutions’களுக்கு பின்னூட்டங்களாக சில நக்கல், குத்தல் பதிவுகள் வந்து, தொடர்வதால் என்று நினைக்கிறேன்).

9. என்னதான் ஸ்மைலி, கண்ணடிப்பு போட்டாலும், இணையத்தில் எவர் பதில் பேசினாலும் ‘preconceived notion’ கொண்டே பார்க்கப்படுகிறது.

10. இந்தப் பதிவு, ‘யார் மனதையும் புண்படுத்த அல்ல; புரிந்து கொள்ளவே!’ என்று டிஸ்க்ளெய்மர் போட்டாலும்; இந்த மாதிரி போஸ்ட்களைப் போலவே எந்தப் பயனும் கொடுக்காதது.

தலைப்புக்கு நன்றி : மறுமொழிக் கவியருவி