Monthly Archives: ஜூலை 2004

The Cider House Rules

(c) IMDB.comசுஜாதா சொன்னதாக கேள்விப்பட்டது. “நான் கதை எழுதித் தருவேன். நிறைய வசனங்களோடு இருக்கும். அவற்றில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டி கொட்டி திரைக்கதை அமைத்துக் கொள்வார்கள்.” நல்ல புத்தகத்தை எழுதிவிட்டு, அவை சின்னாபின்ன படமாக்கப்பட்டு வெளிவருவதைத் தடுப்பதற்கு, இந்தப் படத்தின் கதாசிரியர் கடைபிடித்த உத்தியை பின்பற்றலாம். அவர் எழுதிய புத்தகத்துக்கு, அவரே திரைக்கதை கொடுத்து, அதற்கான ஆஸ்காரையும் வென்றிருக்கிறார்.

பாஸ்டனுக்கு வடமேற்கே, அமெரிக்காவின் ஈசானிய மூலையில் இருக்கும் ‘மெயிண்’ மாகாணத்தில் நடக்கும் கதை. இரண்டாம் உலக யுத்தத்தின் காலகட்டம். அநாதை இல்லம் நடத்துபவரின் செல்லப் பையனாக (தற்போதைய ஸ்பைடர்மேன்) டோபி மெக்வ்யெர். டோபிக்கு வாழ்க்கை போரடிக்கிறது. விடுதியின் தலைவருக்கு வயசாகிப் போனதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய விடுதியின் உரிமையாளர்கள் முடிவெடுக்கிறார்கள். மருத்துவம் படிக்காமலேயே, அனுபவத்தினாலும், திறமையினாலும், foster father போன்ற நடத்துநரின் ஆர்வத்தாலும் ob-gyn பயிற்சியுள்ள டோபி தலைமை இயக்குனராவதுதான் கதை சுருக்கம்.

புத்தகங்களுக்கேயுரிய கிளைக் கதைகள், கதாபாத்திர சித்தரிப்புகள், மெல்லிய நகைச்சுவை, மனதில் ஒட்டிக்கொள்ளும் வசனங்கள் என்று ஆஸ்கார் பரிந்துரையை படம் நியாயப் படுத்துகிறது. அறுபது வருடம் முந்திய காலகட்டத்தில் நடந்த கதையாக சொல்லப்பட்டாலும், இன்றைய நிகழ்வுகளிலும் அவற்றில் பல காட்சிகளை நினைக்கலாம். த்ரிலுக்காக போர் விமானம் ஓட்டும் ‘வாலி’யை இன்றைய ஈராக் சண்டையினால் உள்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்தி, போருக்கு சென்ற இடத்திலும் சாதிக்காமல் திரும்பிய புஷ் அரசோடு ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறேன். ஐம்பது வருடம் முன்பு பற்றியெரியும் பிரச்சினையாக இருந்த Pro-Choice கருக்கலைப்பு — இன்றும் மக்களால் மதநம்பிக்கையாலும், உணர்ச்சிபூர்வமாகவும் சிந்திக்கப் படுகிறது. உறவு கொள்ளத் துடிக்கும் இளவயதினரின் பொறுப்பற்ற தனமைகளில் பெரிய அளவில் மாற்றமேதுமில்லை.

பாசத்துக்கும், காதலுக்கும், ஆசைக்கும் உள்ள சிறிய வேறுபாடுகளை வெளிக்கொணர்கிறது ரோஸ் குடும்பம். துள்ளித் திரியும் இளம் மானாக இருக்கும் ரோஸ் (பிரபல பாடகி ‘எரிகா படு’), எவ்வாறு சுருங்கிப் போகிறாள் என்பதை இயல்பாக சித்தரிக்கிறார்கள். அன்பும் அரவணைப்பும் கிடைத்தாலும், குழந்தைகளுக்கு அப்பா, அம்மா என்னும் பந்தத்தில் எவ்வளவு ஆர்வம் என்று சொல்லும்போது நமது மனமும் கசிகிறது. ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும், மனதுக்கு உகந்தவர்களுடன் பார்ப்பதால், படம் பார்ப்பது ‘வேறு எதற்கோ’ என்று சொல்லும் போது ‘அட’ போடாமல் இருக்கமுடியவில்லை.

கட்டளைகள் நிர்ணயிப்போர் எப்பொழுதுமே அவற்றை பிறருக்காக மட்டுமே வடிக்கிறார்கள் என்று எள்ளல் செய்வது; எல்லைகள் இல்லாத உலகம்தான் இது; ஆனால், சொந்த எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணவைப்பது; செய்யும் செயல் ஒவ்வொன்றிலும், உன்னால் உலகுக்கு என்ன நன்மை என்று சுய மதிப்பீடு செய்யத் தூண்டுவது; தவறு செய்து தப்பிக்க வாய்ப்பு அமைந்தால் பயன்படுத்துவோமோ என்று யோசிக்க வைப்பது; தன்னால் அடைய இயலாதபோதும் கொண்ட கொள்கையில் நம்பிக்கை வைத்திருப்போமா என்று சந்தேகிக்க செய்வது; நிலைமையை சரி செய்ய முடியுமானால், தனக்கு ஆதாயமில்லாமல் ஆபத்தே என்றாலும், தலையிடுவோமா என்று கேள்வி கேட்பது; காத்திருந்தால், பொறுமையோடு வாழ்வின் கடனை செலுத்தினால் நன்மையே பயக்குமோ என்று வேறூன்றுவது; மனமுதிர்ச்சியின் அடையாளமே நாம் அனைவரும் அனாதைகளே என்று உணர்வதோ என்று இம்சிக்க வைப்பது; இன்னும் அலசிக் கொண்டே இருக்கவைக்கும் குணாதிசயங்களின் அணிவகுப்பாக கதை நகர்கிறது.

தமிழில் இதை மறுபதிப்பாக்கினால் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் யோசித்துப் பார்க்க ஆசை. அனாதை இல்லத்தின் தலைவராக; சட்டம், நிகழ்வியல் அபத்தங்களை அறிந்த டாக்டராக சிவகுமார். வயசுக்கு வரும் வயதின் குழப்பங்களோடு, வாழ்க்கையை வாழ நினைக்கும் இளைஞனாக ‘ஜெயம்’ ரவி. பர்மாவின் மேல் பறப்பதற்குத் துடிக்கும் போர் வீரனாக ‘புன்னகைப் பூவே’ நந்தா. காதலனை மிஸ் பண்ணும் நாயகியாக சிம்ரன். ஆப்பிள் பறிப்பவர்களின் தலைவராக பிரகாஷ்ராஜ். அப்பாவுடன் முரண்புணர்வுக்கு உள்ளாகும் சூட்டிகையான மகளாக பூமிகா. தலைமை தாதியாக சுகாசினி. Haapy-go-lucky-ஆக இரவின் நட்சத்திரங்களை ரசிக்கும் ஆப்பிள் பறிப்பவனாக விவேக். பிரும்மாண்டம் தலைநீட்டாமல், இயற்கையான இயக்குநராக ஜெனநாதன். வசனத்திற்கு இ.பா. மாதிரி யாரையாவது சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

இவ்வளவும் சொல்லிவிட்டு படத்தின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளை பற்றி எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. கடவுளை உணரவேண்டுமானால், பார்க்கவேண்டிய புத்தகம். 

 



 

 

ரெண்டு வரி நோட்: இந்தக் கதாசிரியரின் புத்தம்புதிய நாவல் A Widow for One Year, நாளை முதல் The Door In The Floor என்று வெள்ளித் திரையிடப் படுகிறது.

உதவி… உதவி… ‘குமுதம்’ எப்படிப்பட்ட பத்திரிகை?

tamilbloggers யாஹு குழுமத்தில் ஷோபா கேட்கும் கேள்வி:

I’m doing my bachelors of mass media. We have a subject called Niche magazine and journalism for which we are required to analyse one of the top 10 magazines in the country. Well, I have been assigned KUMUDHAM purely out of default coz I happen to be the only tamilian in the class.

Well.Well…., the tragedy is I dunno how to read tamil properly. I happen to read tamil very slowly and I haven’t read kumudham at all. I have been asked to talk about the style of the articles and stuff like that. Could u please spare sometime and send me ur opinions on the writing style, the kind of articles and stuff that appear in kumudham. That would be of great help. Ur comments , likes and dislikes would also be welcome.

Venkatachalam Ramakrishnan சொன்ன பதில்.

இன்னொருவர் இவரிடம் கேள்வியை கேட்குமாறு சொல்லியிருக்கிறார்.பதில் சொல்வாரா என்று தெரியாது. ஆனால், அசோகமித்திரனில் இருந்து கொல்கத்தா வரை நன்றாகவே படம் பிடிக்கிறார்.

வில்லாதி வில்லர்கள்

Lafaveஅடப்பாவீ…..

நான் எல்லாம் அழியாத கோலங்கள் ‘நல்ல படம்’ என்று இரண்டு வார்த்தை சொல்வதோடு சரி. அமெரிக்க சிறுவன்… சாரி… பதினான்கு வயது டீனேஜர் கர்மவீரனாய் (இன்று காமராஜருக்கு ஹேப்பி பர்த்டே) செயலில் இறங்கி இருபத்தி மூன்று வயது டீச்சரை கணக்கும் செய்து விட்டான். தினபூமி ரேஞ்சுக்கு சி.என்.என்-ம் மற்ற ஊடகங்களும் பொறாமையோடு பாலகனை கண்டித்துள்ளார்கள். இதுவே, ஒரு ஆண் வாத்தியாரும், மாணவியும் மாட்டிக் கொண்டிருந்தால்….

எப்படியாக இருந்தாலும் அடப்பாவீ 😉



அடிப்பாவீ…..

நேற்றைய உலக அழகி!

இன்று கம்பி எண்ணுகிறாள்.

கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தால் என்றுமே ஆபத்துதான் 🙂

(c) Thanks to BusinessWeek for the InfoGraphix

Homeland Security Spoof Seal for GW Bush 

Homeland Security Spoof Seal for GW Bush Posted by Hello

Enron Scandal: Comple Indictment List by Business …

Enron Scandal: Comple Indictment List by Business Week Posted by Hello

George W Bush in a Iraqi Style Most Wanted Card 

George W Bush in a Iraqi Style Most Wanted Card Posted by Hello

Lea Fastow – Business Week Factoid 

Lea Fastow – Business Week Factoid Posted by Hello

Homeland Security Fake Seal for GW Bush 

Homeland Security Fake Seal for GW Bush Posted by Hello

பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு

அரசியல் மாநாட்டை குறித்து நான் முதன்முதலில் கேள்விபட்டபோது பத்து வயதிருக்கலாம். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அன்றைய முதல்வர் ம்.கோ.ரா. வாள் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததாக செய்தி சொன்னார்கள். சில வருடம் கழித்து தேர்தல் வந்தபோது, கபாலி கோவிலுக்கு செல்லும் வழியில் லவுட்ஸ்பீக்கர் சத்தம். மயிலை மாங்கொல்லையில் ஏதோ மீட்டிங் போல என்று போஸ்டர் பார்த்து கலைஞர் கருணாநிதி பேசப்போவதாக அறிந்து கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து, ஐஐடி நுழைவுத் தயாரிப்புக்காக வெங்கட்ரமணா ரோட்டின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் வகுப்புக்கு செல்லும் +1 வயது. ராஜீவ் வருவதால், 12A பஸ் பாதியிலேயே திருப்பி விடப்பட்டதால், நாகாத்தம்மன் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, வெள்ளை அம்பாஸ்டர் கார்களும் ப்ரௌவுன் போலீஸ் ஜீப்புகளும் பறக்கும் அணிவகுப்பு நிகழ்த்தியதை வேடிக்கை பார்க்க முடிந்தது. அப்புறம் ஒரு பா.ம.க. மாநாடு. புதுக் கொடி, வித்தியாமான வாழ்க கோஷம் எல்லாம் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்க வைத்தது. பயணித்த 12B-யோ திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம், திருவான்மியூர் என்று நான் அதிகம் பார்த்திராத ஏரியாக்களை சுற்றிக் காட்டியபிறகு பனகல் பார்க் வந்து சேர்ந்தது. மறைமலை நகர் காங்கிரஸ் மாநாடு பேப்பரில் மட்டுமே கேள்விப்பட்ட கூட்டம். அதன் பிறகு பிலானிக்கு முரளி மனோஹர் ஜோஷி ரதம் செலுத்தி வந்தபோதும், நான் பாட்டுக்கு ‘சாஜன்’ பார்த்து புரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஜெயலலிதா கோட்டை செல்வதற்காக பத்து மணி நேரம் போக்குவரத்தை நிறுத்துவது; என்றோ ஒரு நாள் ரஜினி இதற்குக் கோபப்பட்டு, வண்டியை விட்டு இறங்கி தம் அடித்தது என்று பத்திரிகையில் படித்ததோடு சரி.

இப்பொழுது மீண்டும் ஒரு மாநாடு. அந்த மாநாடு நடக்கும் இடத்திலிருந்து ஒரு பத்து மைல் தள்ளிதான் நான் வேலை பார்த்தாலும் ஊழ் வலியது. மஞ்சள், ஊதா, சிவப்பு, கருஞ்சிவப்பு, வெளிர்சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என்று விதவிதமாக எச்சரிக்கை விடுகிறார் ஒரு மந்திரி. (Def Con Alerts: Collect them All!) இன்னொருவரோ, ‘கேளடி கண்மணி’ அஞ்சுவாய் ‘ஏதோ தவறாய் நிகழ நேரிடலாம்’ என்று அச்சமாக இருக்கும்படி அறிக்கை மட்டும் விட்டு விடுகிறார். (The Seattle Times: Nation & World: Tom Ridge warns nation of impending attack).

பாஸ்டனில் சுதந்திர (டெமொக்ராடிக்) கட்சியின் மாநாடு. இரண்டு ஜான்களையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் கோலாகலங்கள். நியு யார்க்கில் குடியரசு கட்சியின் பரிந்துரைப்பு விழா. அங்கும் சில பல தெருக்கள் அடைக்கப்படுகின்றன. மாநாடு நடக்கும் மாடிஸன் வளாகம் அருகில் வசிப்பவர்கள், வீட்டை விட்டு வெளியே கால்வைக்கக் கூட தடை விதிக்கப் படலாம். ஆனாலும், பாஸ்டனில் கெடுபிடிகள் கொஞ்சம் அதிகம். அவற்றில் சில

  • வீட்டை விட்டு வெளியே வந்தால் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பச்சை அட்டை அல்லது பாஸ்போர்ட், பிறந்த நாள் சான்றிதழ், மின்கட்டண ரசீதுகள், தவணை அட்டை நோட்டிஸ்கள், சன் டிவி பற்றுச்சீட்டுகள், என எல்லாவற்றையும் பத்திரமாக பையில் எடுத்துச் செல்வது நலம்.

  • அவ்வாறு எடுத்து வரும் பையானது நகைக்கடையில் கம்மல் வாங்கினால் தரப்படும் இலவச சுருக்குஞ்சியை விடப் பெரிதாக இருக்குமானால், ஜார்ஜ் ·பெர்னாண்டஸ¤க்கு நடந்த மாதிரி பரிசோதனைக்கு உட்படத் தயாராக இருத்தல் நலம்.

  • இந்த சோதனைக்கு நிற்கும் க்யூவினால், ட்ரெயினை தவறவிடக்கூடாது என்பதற்காக, சாதாரணமாக கிளம்பும் எட்டு மணிக்கு பதிலாக அதிகாலை ஐந்து மணிக்குள் வீட்டை விட்டு தொடர்வண்டி நிலையத்தை அடைதல் நலம்.

  • காண்பதற்கு தெற்காசியவை சேர்ந்தவன் போல் இல்லாமல் இருத்தல் நலம்.

  • அப்படி தோற்றமளித்தால், எந்த ஸ்டேஷனில் செக்கப் இல்லை என்று அறிந்து வைத்துக் கொண்டு அந்த நிலையத்தைப் பயன்படுத்தல் நலம்.

  • சுருக்கமாக, ஜூலை மாதயிறுதியில் பாஸ்டனை விட்டு பறந்து விடுதல்… அச்சச்சோ… விமானத்தில் பறப்பது, விமான நிலையத்தை அடைவது ‘நடக்க‘க் கூடிய காரியம்; பாத யாத்திரை சென்றால் மட்டுமே விமான நிலையத்தை அடையும் சாத்தியக் கூறுகள் இருக்கிறது. எனவே, காரை எடுத்துக் கொண்டு காணாமல் போவது நலம்.

    நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்பது போல் சோதனை போட்டு டெமொக்ராடிக் கட்சி வேட்பாளர்கள் கெர்ரியையும், எட்வர்ட்ஸையும் காத்து அனுப்பவேண்டிய முக்கிய பொறுப்பு. மனித உரிமை மீறப் படுகிறது என்று குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், எல்லாரையும் சோதிக்காமல் சிலரை மட்டுமே சில இடங்களில் நுழைந்தால் மட்டுமே சோதிப்போம் என்பதிலும் உடன்பாடில்லை.

    இந்த மாதிரி ஜும்போ மாநாடுகளுக்கு சில யோசனைகள்:

    1. ரொம்பப் பேர் கிட்டவே நெருங்காத, ஆனால், ரசனையான தலங்களில் நடத்தலாம். காட்டாக குடியரசு கட்சிக்கு மவுண்ட் ரஷ்மோர், ஜான்களுக்கு ரோட் ஐலண்டின் கடற்கரையோரம்.

    2. இந்த மாநாடுகளை மொத்தமாக ரத்து செய்துவிட்டு, அந்தப் பணத்தையும் தங்கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    3. ஒரு பெரிய மகாநாடு; சாதரணர்களுக்குத் தொல்லை; நலம் விரும்பிகளும் டிவியில் மட்டுமே பார்க்க முடியும்; இதற்கு பதிலாக, மதில்-மேல்-பூனை தொகுதிகளில் எல்லாம் நேரடியாக விசிட் கொடுத்து வோட்டு சேகரிக்கலாம்.

    4. தங்களுக்கு நம்பிக்கையான கொள்கைகளில் பணம் காணிக்கை ஆக்கலாம். உதாரணத்துக்கு கடவுள் பற்றை அதிகரிப்பதற்காக புஷ்ஷ¤ம், சுற்றுப்புறத்திற்காக கெர்ரியும் நிதி வழங்கி தங்கள் கொள்கைப் பிடிப்புகளைப் பலப்படுத்தலாம்.

    5. எங்கள் ஊர் காய்கறிக் கடையில் நடந்த கொள்ளை, எதிர்த்த வீட்டில் நடந்த வன்புணர்வு முயற்சி போன்றவற்றைத் தடுக்க காவல்துறைக்கு நேரமும், திட்டங்களும் கொடுக்கலாம்.

    6. ட்ரெயினில் பயணிக்காத தீவிரவாதிகளை(யும்), கண்டுபிடிக்க சொல்லலாம்.

    7. எல்லா தரப்பு மக்களையும், விரைவாக பரிசோதிக்க அதி நவீன மெட்டல் டிடெக்டர்களையும், அதிக எண்ணிக்கையில் போலீஸையும் பல்வேறு நுழைவாயில்களில் நிறுத்தி, வாக்கு-சாவடிகளையும், இன்ன பிற முக்கியமான இடங்களையும் கடப்பதை ஜரூர் ஆக்கலாம்.

    ஆனால், நான்கு நாட்கள் கூட்டம் என்ற பெயரில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, மறுப்பு அறிக்கை விடும் வாய்ப்பை தந்தே தீருவோம் என்கிறார்கள். மூன்று முகமாக நடித்த ரஜினி, அப்பா-மகன், அண்ணன்-தம்பியாக நடித்துக் கலக்கும் விஜயகாந்த், அஜித், சரத்குமார் போன்ற தமிழ் நடிகர்கள் அரசியலுக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். அவ்வாறு எல்லாம் பயிற்சி எடுக்காமல் இரட்டை வேடம் போட முயல்கிறார்கள் அமெரிக்காவின் புஷ்ஷ¤ம் கெர்ரியும். இந்த மாதிரி சிறப்பு பல்டிக்களுக்காகவே கெர்ரி-யிஸம் பட்டியலிட ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் நல்லதுக்குத்தான்? போன தேர்தலில் புஷ்-இஸம் கொடுத்த ஸ்லேட் இந்த தேர்தலுக்கு கெர்ரி-யிஸம் கொடுப்பதால், அவர்தான் ஜனாதிபதியாகப் போகிறாரோ… என்னவோ!

  • கல்கியில் கவர்ந்தவை

    எஸ்.வி. சேகர்: “கருணாநிதிக்கு ‘பசு’ என்றாலே பிடிக்காது? ஏன் தெரியுமா?”

    “அது அம்மா… அம்மா… என்று குரல் கொடுக்குதே!”

    -சமீபத்தில் அதிமுக-வில் சேர்ந்ததன் விளைவு.



    வலைபாயுதே:

  • மோகன்குமார்ஸ்.காம்;

  • கூகிள்-யாஹூ அடிதடி;

  • சாரு நிவேதிதா சர்ச்சைகளுக்குத் தீனி போடுகிறார்.



    பாதை – ஆனந்த் ராகவ்: ஏமாற்றத்தின் எதிரொலியாய் வார்த்தைகள். அவரின் இயல்பு கொஞ்சம் மாறிப் போய்விட்டது. செல்வத்துக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் உபதேசிக்கிறார். வீடு திரும்பியதும் ஈசி சேரில் சாய்ந்து கொண்டு பிண்ணனியில் சங்கீதம் ஓட, புத்தகத்தில் ஆழ்ந்து போய்க் கிடக்கிறவர், அடிக்கடி அவனை விசாரித்துக் கோபிக்கிறார்.

    மேஜையில் பரப்பிய காகிதங்களிடையே, அவை பறக்காமல் இருக்க வைத்த ஒரு பெரிய பேப்பர் வெயிட் போல் சந்தானம் இருந்தார்.



    பிட்டா படிங்க

  • கந்தர்வனின் கடிதங்களைத் தொகுக்கும் முயற்சியில் இருக்கிறார் கவிஞர் முருகேஷ்

  • ‘ஈழக் கதவுகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறார் பா. செயப்பிரகாசம்.



    ‘கரகர’ கவியரங்கம் – விஜயகாந்த் (கற்பனை):

    ‘அரை வேக்காடு’ – தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை!

    ‘டாக்டர்’ – இங்கிலீஷ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை!

    ‘அரசியல்’ – தமிழகத்துல என்னைப் பிடிச்சுட்டிருக்கிற வார்த்தை!

    திருக்குறள்ல 1330 – குறள் இருக்கு!

    அகநானூறு 400 பாட்டு இருக்கு!

    ஐங்குறுநூறுல 500 செய்யுள் இருக்கு!

    ‘கஜேந்திரா’வுல 5 பாட்டு இருக்கு!

    அதுல 3 டூயட்!

    இப்ப நான் போயட்!



    பொறாமைப்படு – கல்கி கட்டுரைகள்:

    நம்முடைய சொந்தப் பெருமை மட்டுமல்ல. பிறருடைய சிறப்பைக் கூட நம்முடையதென நினைத்துக் கொண்டு சில சமயம் சந்தோஷமடைகிறோம். “நான் நேரில் பார்த்திருக்கிறேன்” என்ற பெருமைப் பேச்சைக் கேளாதவர் யார்? பார்த்தது மகாராஜாவின் தர்பாராயிருக்கலாம்; தாஜ்மஹாலாக இருக்கலாம்……

    ஒரு குரங்கு மட்டும் யானையின் மேலேறியும், இன்னும் பலவிதமாகவும் விளையாடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி அந்தக் குரங்குக்கிருந்த கர்வத்தைப் பார்த்து நான் மிகவும் வெட்கமடைந்தேன். அந்தப் பொல்லாத குரங்கு, யானையின் முதுகில் நின்று கொண்டு, மற்ற குரங்குகளைப் பார்த்துக் கெக்கிலி கொட்டிச் சிரித்தபோது….. முதல் வகுப்பில் ரயில் பிரயாணம் செய்பவன் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைப் பார்ப்பது போலவும்…..

    மனிதர்களுக்காகட்டும் மிருகங்களுக்காகட்டும், பிறருடைய பொறாமையைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை. பிறருடைய பொறாமையைக் கிளப்ப முடியாவிடில், அதைப் போல் துயரந்தருவதும் வேறு கிடையாது! ஆகவே உங்களுக்கு சிநேகிதர்கள் வேண்டுமானால், மற்றவர்களைக் கொண்டு உங்கள் காரியங்களை முடித்துக் கொள்ள வேண்டுமானால், பொதுவாக உலகில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், ‘பொறாமைப் படுங்கள்’ என்று சொல்வேன்.



    குடைக்குள் மழை: மற்ற நடிகர்களைப் பற்றி, மூச்! யார் கண்டது? படத்தில் இவர்கள் இருவர் மட்டும்தானோ என்னவோ?

    நன்றி: ஜூலை 7 2004 கல்கி